'ரன்வீர் சிங் எங்களிடம் வந்திருக்கலாம்' - டான் 3 சர்ச்சை குறித்து நடிகர் சங்கத் தலைவர் பூனம் தில்லான் அதிருப்தி!"

சர்ச்சைகளைத் தவிர்த்து மௌனமாக இருப்பதே ரன்வீரின் முடிவு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
'ரன்வீர் சிங் எங்களிடம் வந்திருக்கலாம்' - டான் 3 சர்ச்சை குறித்து நடிகர் சங்கத் தலைவர் பூனம் தில்லான் அதிருப்தி!"
Published on
Updated on
2 min read

'டான் 3' படத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங் திடீரென விலகியது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) ரன்வீர் சிங் மீது ஒத்துழைப்பு வழங்காததற்கான உத்தரவை (Non-cooperation directive) பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் (CINTAA) ஏன் உரிய நேரத்தில் தலையிடவில்லை என்று அந்த அமைப்பின் தலைவரான பூனம் தில்லான் அதிருப்தி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆகிய இரு தரப்பினருமே தங்களை அணுகவில்லை என்றும், பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கும் வாய்ப்பு தவறவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரன்வீர் சிங் போன்ற ஒரு முன்னணி நடிகர், இத்தகைய சிக்கல்கள் ஏற்படும்போது தங்களை அணுகிப் பேசியிருக்கலாம் என்று பூனம் தில்லான் கருத்து தெரிவித்துள்ளார். "நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் நடிகர்களுக்கான அதிகாரப்பூர்வ அமைப்பு. ஒரு நடிகர் தனது கடமைகளைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை எங்களிடம் கொண்டு வரலாம். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தத் தகவலும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வரவில்லை" என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். இருப்பினும், முழுமையான விவரங்கள் தெரியாமல் யார் பக்கம் தவறு என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய தொழிலாளர் அமைப்பின் தலைவரான அசோக் பண்டிட், "இது தடை அல்ல, ஒத்துழைப்பு வழங்காததற்கான உத்தரவு மட்டுமே" என்று விளக்கமளித்துள்ளார். தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியே இது குறித்து புகார் அளித்திருந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே ரன்வீர் சிங் விலகியது தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் இழப்பையும் இடையூறையும் ஏற்படுத்தியதாக அசோக் பண்டிட் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்ற தவறான முன்னுதாரணங்களைத் தவிர்க்கவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ரன்வீர் சிங் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை என்பது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள ரன்வீர் சிங்கின் செய்தித் தொடர்பாளர், "திரையுலகத்தின் மீதும், டான் பிரான்சைஸ் மீதும் ரன்வீர் சிங் மிகுந்த மரியாதையை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்து மோதல்களைத் தவிர்த்து, கண்ணியமாகவும் அமைதியாகவும் இருக்கவே ரன்வீர் விரும்புகிறார். அவர் தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார், மற்றவர்கள் மீது நல்லெண்ணத்தையே கொண்டிருக்கிறார்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளைத் தவிர்த்து மௌனமாக இருப்பதே ரன்வீரின் முடிவு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர் அமைப்பு மற்றும் ரன்வீர் சிங் இடையே ஏற்பட்டுள்ள இந்த உரசல், திரையுலகில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அசோக் பண்டிட், தாங்கள் ரன்வீர் சிங்கைத் தடை செய்யவில்லை என்றும், பிரச்சினையைத் தீர்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ரன்வீர் சிங் உடன் பணியாற்ற வேண்டாம் என்று தங்கள் அமைப்பின் 30 பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ரன்வீர் சிங் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, இந்தப் பிரச்சினையைச் சுமூகமாக முடிக்கவே தாங்கள் முயற்சிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com