தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா ரூத் பிரபு இவரும் ஃபேமிலி மேன் திரைப்படத்தின் இயக்குநரான ராஜ் நிதிமொருவும் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்து புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. இருப்பினும் இது குறித்து இருவரும் எந்த கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் வெறும் வதந்திகளாக பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை கோயம்பத்தூரில் உள்ள ஈஷா யோகா நிலையத்தில் உள்ள தேவி பைரவி கோவிலில் சமந்தா மற்றும் ராஜ் நிதிமொருவின் திருமணம் நடைபெற்றுள்ளது. எந்தவித ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ள நிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 30 பேர் திருமணத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.
ஃபேமிலி மேன் 2 தொடரில் இருவரும் இணைத்து பணியாற்றியபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜ் நிதிமொருவுக்கு விவாகரத்து ஆன நிலையில் அவர் தற்போது சமந்தாவை மணமுடித்துள்ளார். மேலும் சமந்தாவிற்கு பிரபல தெலுங்கு நடிகருக்கும் திருமணமாகி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சமந்தா ராஜ் நிதிமொருவை கரம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமந்தாவின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் “இந்த தருணத்திற்கு தான் நாங்கள் காத்திருந்தோம்” என பதிவிட்டு சமந்தாவின் இந்த முடிவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.