shalini ajith kumar  
பொழுதுபோக்கு

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் ஷாலினி.. இந்த முறை ஹீரோயின் இல்லை, தயாரிப்பாளர்!

இப்படத்தின் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி திரைத்துறையில் புதிய பொறுப்புடன் களமிறங்குகிறார்...

Mahalakshmi Somasundaram

தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக நடித்த காலத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததால், இன்றளவும் பலரும் அவரை ‘பேபி ஷாலினி’ என்றே அழைத்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, பின்னர் கதாநாயகியாகவும் பல முக்கியமான படங்களில் நடித்தார். குறிப்பாக விஜய்யுடன் இணைந்து நடித்த ‘காதலுக்கு மரியாதை’, அஜித் குமாருடன் நடித்த ‘அமர்க்களம்’, மாதவனுடன் நடித்த ‘அலைபாயுதே’ உள்ளிட்ட படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தன.

இதில் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து, கடந்த 2001-ம் ஆண்டில் வெளியான ‘அலைபாயுதே’ திரைப்படத்துக்குப் பிறகு ஷாலினி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதனால் சுமார் 25 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அவதாரம்!

இந்நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். ஆனால், இந்த முறை நடிகையாக அல்லாமல் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்குகிறார். நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அஜித்தின் 64-வது படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அஜித் குமார் நடிக்கும் 64-வது படத்திற்கு ‘டேர் டெவில்’ (Dare Devil) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

shalini and ajith

ப்ரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன் (BraveHearts Production) நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி திரைத்துறையில் புதிய பொறுப்புடன் களமிறங்குகிறார். ஒருகாலத்தில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் ‘காதலுக்கு மரியாதை’, ‘அமர்க்களம்’, ‘அலைபாயுதே’ போன்ற படங்களில் கதாநாயகியாக ஜொலித்த ஷாலினி, தற்போது அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தின் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.