Shenaaz Treasury 
பொழுதுபோக்கு

“சிகரெட் இல்லை.. மூலிகை புகை” - மூக்கில் புகையை இழுத்த நடிகை ஷெனாஸ்.. வைரலாகும் ஆயுர்வேத சிகிச்சை!

சிகிச்சையின் நோக்கத்தைப் பொறுத்து பயன்படுத்தப்படும் மூலிகைகளும் மாறுபடலாம்...

Mahalakshmi Somasundaram

நடிகையும், சமூக வலைதள பிரபலமான ஷெனாஸ் ட்ரெஷரி, ஆயுர்வேத சிகிச்சையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் ‘தூமபானம்’ என்ற கேரளாவின் பாரம்பரிய சிகிச்சை முறையை முயற்சித்த அனுபவத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தியானப் பயிற்சி முகாமின் போது இந்த சிகிச்சையை அவர் மேற்கொண்ட நிலையில், மூக்கின் வழியாக மூலிகைப் புகையை உள்ளிழுக்கும் இந்த முறையைப் பார்த்து ஆரம்பத்தில் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஷெனாஸ் ட்ரெஷரி?

மும்பையைச் சேர்ந்த இவர், இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். குறிப்பாக, 2003ஆம் ஆண்டு வெளியான “Ishq Vishk” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

நடிப்பைத் தாண்டி, பயணம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள கலாசாரம், உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட தனது அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்வது அவரது சமூக வலைதள செயல்பாடுகளில் முக்கியமானதாக உள்ளது. இதனால் நடிகை என்பதைத் தாண்டி, டிராவல் மற்றும் லைஃப்ஸ்டைல் கான்டன்ட் கிரேட்டராக ஷெனாஸ் ட்ரெஷரி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

மூக்கில் புகையை இழுக்கும் ஆயுர்வேத சிகிச்சை

‘தூமபானம்’ எனப்படும் இந்த ஆயுர்வேத நடைமுறை, புகைபிடிப்பது போன்ற செயல் முறை என்றவுடன் சிகிரெட் பிடிப்பது போன்ற முறை இல்லை. ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படும் இந்த முறையில், குறிப்பிட்ட மருத்துவ மூலிகைகளில் இருந்து உருவாகும் புகையை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உள்ளிழுப்பது சிகிச்சையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தலை, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான சில பிரச்சினைகளுக்காக இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சையின் நோக்கத்தைப் பொறுத்து பயன்படுத்தப்படும் மூலிகைகளும் மாறுபடலாம்.

எனினும், இது சுயமாக வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய ஒரு சாதாரண ஆரோக்கியப் பழக்கம் அல்ல. எந்த வகையான மூலிகை பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு புகை உருவாக்கப்படுகிறது, எவ்வளவு அளவு உள்ளிழுக்கப்படுகிறது என்பவை சிகிச்சையின் முக்கிய அம்சங்களாக இருப்பதால், தகுதியான ஆயுர்வேத மருத்துவரின் வழிகாட்டுதலிலேயே இதுபோன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஷெனாஸுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?

கேரளாவில் நடைபெற்ற தியானப் பயிற்சியின்போது ஆயுர்வேத புகைப்பிடித்தல் முறையை முயற்சித்த ஷெனாஸ், ஆரம்பத்தில் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக தெரிவித்துள்ளார் . பின்னர் அங்கிருந்த மருத்துவரிடம், “இது எனக்கு எப்படி நன்மை தரும்?” என்று அவர் கேட்க அதற்கு மருத்துவர், இந்த நடைமுறை மூக்கின் துவாரங்களில் உள்ள அடைப்புகளை குறைக்கவும், புலன்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவக்கூடும் என்று விளக்கியதாக ஷெனாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சையை மேற்கொண்ட பிறகு, தான் மிகவும் நிம்மதியாக உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சிகரெட் பிடிப்பது போன்றது அல்ல

தனது சமூக வலைதள பதிவில் ஷெனாஸ், ஆயுர்வேத மருத்துவத்தில் புகைப்பிடித்தலும் ஒரு சிகிச்சை முறையாக இருப்பதை அறிந்த போது தானும் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தூமபானம் என்பது சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை புகைப்பதற்கு சமமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட மருத்துவ மூலிகைகளின் புகையை சிகிச்சை நோக்கத்திற்காக உள்ளிழுக்கும் பழமையான ஆயுர்வேத முறையே இது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

“ஆயுர்வேத மருத்துவமனையில் இதுபோன்ற ஒரு சிகிச்சையை நான் மேற்கொள்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்ற வகையில் தனது ஆச்சரியத்தையும் ஷெனாஸ் வெளிப்படுத்தியுள்ளார். ஆயுர்வேதத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான சிகிச்சை முறைகள் தற்போது சமூக வலைதளங்கள் வாயிலாக மீண்டும் கவனம் பெறும் நிலையில், ஷெனாஸ் ட்ரெஷரி பகிர்ந்த இந்த அனுபவமும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், தூமபானம் உள்ளிட்ட எந்தவொரு பாரம்பரிய மருத்துவ முறையையும் மருத்துவரின் ஆலோசனையின்றி தனிப்பட்ட முறையில் முயற்சிப்பது வேறு சில உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்