பொழுதுபோக்கு

‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’... பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்! அடுத்தடுத்து உயிரிழந்த தேவாவின் நெருக்கமானவர்கள்!

காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்

Muthu Lakshmi

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர்களில் ஒருவரான ஆர். கிருஷ்ணராஜ் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினரும் பின்னணிப் பாடகருமான கிருஷ்ணராஜ், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். அவர் இன்று காலை உயிரிழந்ததாகச் சங்கத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயது குறித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதால், அது தொடர்பான விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் உருவான பல பாடல்கள் தமிழ் ரசிகர்களிடம் இன்றளவும் பிரபலமாக உள்ளன. அந்தப் பாடல்களில் தனது குரலால் கவனம் ஈர்த்தவர் பாடகர் கிருஷ்ணராஜ்.

குறிப்பாக, அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதேபோல், பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலும் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான பாடலாக அமைந்தது. இந்தப் பாடலுக்காக அவர் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் பெற்றார்.

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், தமிழ் திரையிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். அவரது குரல் பல்வேறு இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா மறைந்தபோது, அவர் இசையமைத்த பாடல்களும் அவற்றைப் பாடிய பாடகர்களும் மீண்டும் நினைவுகூரப்பட்டனர். இந்தச் சூழலில், தேவாவின் இசையில் பிரபலமான பாடல்களைப் பாடிய கிருஷ்ணராஜின் மறைவுச் செய்தியும் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேவாவின் சகோதரர் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நிலை காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்