"எனக்கு சப்போர்ட் பண்ணுங்க".. முதன் முதலாக ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ! என்னாச்சு அஜித்துக்கு? 
பொழுதுபோக்கு

"எனக்கு சப்போர்ட் பண்ணுங்க".. முதன் முதலாக ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ! என்னாச்சு அஜித்துக்கு?

ரசிகர்களிடம் distance maintain செய்து வந்த அஜித், கார் பந்தயத்துக்காக அதே ரசிகர்களிடம் நேரடியாக ஆதரவு கேட்டிருப்பது ஏன் இவ்வளவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது?

மாலை முரசு செய்தி குழு

“உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பேசும் வீடியோ இன்று காலையில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தும் அவர் ரசிகர்களும்

ஒரு கார் பந்தய வீரர் தனது போட்டிக்கு ஆதரவு கேட்பது சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் வீடியோவில் இருப்பது நம்ம ஏ.கே. தானா என ரசிகர்கள் கையை கிள்ளிப் பார்த்துள்ளனர். ஏனென்றால், தன்னுடைய திரைப்பட புரோமோஷன்களில் கூட கலந்துகொள்ளாத நடிகர் அஜித். நேர்காணல்கள் எல்லாம் அரிதினும் அரிது.

நேரில் பார்க்க செல்லும் ரசிகர்களிடம் அன்பாகப் பேசுவதும், ஆவேசம் அடைவதும் 50-50. பொது இடங்களில் சத்தமிட்டு அழைத்தால், செல்ஃபி கேமராவுடன் நெருங்கினால் டென்ஷன் ஆகிவிடுவார்.

அஜித்தின் ‘தீனா’ படத்தில் அவரை ‘தல’ என அழைக்கும் பெயரே சினிமாவில் அவரது பட்டமாக நிலைத்தது. அதுவரை காதல் நாயகனாக இருந்தவரை மாஸ் ஆக்கியது ‘தல’ என்ற சொல். ஆனால் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் ‘தல, தல’ என சத்தமிட்டதால், ஒரு கட்டத்தில் என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என அறிக்கையே விட்டுவிட்டார்.

ஒரு நேர்காணலில், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க.. என்கிறார்கள்... நீங்க எப்போ வாழப் போறீங்க?” என ரசிகர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். ரசிகர்கள் திரைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.

2010ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தைக் கலைத்த பிறகு, அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் அசாதாரணமானதாக இருந்துள்ளது.

அவருக்குப் பிறகு சினிமாவில் வளர்ந்த நடிகர்கள் ரசிகர் மன்றம், நற்பணி இயக்கம் என அமைத்துள்ளனர். ஆனால் அவரோ, தான் உண்டு தனது வாழ்க்கை உண்டு என்றே இருப்பார். ஆனால் அவரது ரசிகர்கள் அப்படியல்ல. அவர் எங்கு சென்றாலும் அன்பைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் அது அவரை எரிச்சலூட்டினாலும் சரி.

Ajith Kumar

அஜித் கார் பந்தயத்தைத் தொடங்கியபோதுகூட, வெளிநாட்டுக்குச் சென்று டிக்கெட் எடுத்து பார்த்து, என்ஜாய் செய்தது அவரது ரசிகர் படை! ஆனால் அங்கேயும் எல்லாரையும் அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, முறைத்தபடி செல்வார் அஜித். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.

அஜித் ரசிகர்களை வெறுப்பவர் அல்ல. மாறாக, அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் தனது வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் இணையானதே என்று நம்புபவர். இதனை அவரது செயல்களும் பேச்சும் உணர்த்தியிருக்கின்றன. அதனால்தான் தன்னைச் சுற்றியே ஒரு ரசிகரின் அடையாளம் அமைவதை அவர் விரும்புவதில்லை.

நீங்கள் அஜித் ரசிகராக இருக்கலாம். ஆனால் அஜித் ரசிகர் என்பது மட்டுமே உங்கள் ஒரே அடையாளமாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது லாஜிக்.

இப்படிப்பட்ட அஜித் வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்பது யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது.

கார் பந்தையத்தில் அஜித்

இன்றைய தமிழ் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் உள்ளார். துப்பாக்கிச் சுடுதல், கார் பந்தயம் என அவருக்குப் பல துறைகளில் நாட்டம் இருந்தாலும், திரை நட்சத்திரம் என்பதுதான் அவரது அடையாளம்.

அஜித் ஒரு ரேஸ் வீரர் மட்டுமல்ல; ‘அஜித் குமார் ரேஸிங்’ அணியை நடத்தும் உரிமையாளரும் கூட. ஒரு கார் பந்தய அணியை நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதீத நேரத்தையும், பணத்தையும், கவனத்தையும் கோரும் வேலை அது. கார்கள் மட்டுமல்ல, சரியான வீரர்களையும், உதவிப் பணிக் குழுவையும் தேர்ந்தெடுப்பது முதல் பல விஷயங்களில் முடிவெடுக்க வேண்டும்.

மேலும், கார் ரேசிங் ஒரு காஸ்ட்லியான விளையாட்டு. இங்கே sponsorship எவ்வளவு முக்கியம் என்பதை, அவருடைய டி-சர்ட்டில் இடம்பெற்றுள்ள sponsor logos-ஐப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். மேலும், தனது ஸ்பான்சர்ஷிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்பா எனர்ஜி (Campa Energy) பானம் மற்றும் நோவா (Nova) ரியல் எஸ்டேட் போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்களில் கூட நடித்திருக்கிறார்.

சுமார் 20 ஆண்டுகள் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த கொள்கையை கார் பந்தயத்துக்காகக் கைவிட்டார். அதனால்தான், ரசிகர்களிடம் நேரடியாக ஆதரவு கேட்கும் இந்த வீடியோ கவனம் பெறுகிறது.

Ajith Kumar Racing

என்னதான் அது ஒரு கார் பந்தய வீரராக வெளியிட்ட ஒன்றாக இருந்தாலும், அவரது பந்தயங்களைப் பார்க்கும் பலரும் அவரது சினிமா ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது. நேரில் செல்லும் பலரும் விரைந்து ஓடும் கார்களை அல்ல, அஜித்தின் அமைதியான முகத்தையே பார்க்கச் செல்கின்றனர். அந்த ரசிகர்களுக்காகத்தான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் போர்ட்டிமாவ் சர்க்யூட்டில் மிச்சலின் லீ மாஸ் கப் தொடரின் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அஜித், அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன் ‘லவ் யூ’வும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விஜய்யை லண்டன் போட்டிக்கு அழைத்து அன்பைப் பரிமாறியபோது அஜித், நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுந்தன. சில ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதற்கும் முன், கேம்பா விளம்பரத்தில் நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டார்.

இப்போது வீடியோக்கள் வெளியிடுவது அவரிடம் தென்பட்ட மற்றுமொரு மாற்றம். இந்த தொடர்ச்சியான மாற்றங்கள்தான் ‘அஜித்துக்கு என்னாச்சு?’ என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்