பொழுதுபோக்கு

“மாதம்பட்டி ரங்கராஜிக்கு மகளிர் போலீசார் சம்மன்” - ஜாய் கிரிசில்டா திருமண மோசடி வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு!

தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்..

Mahalakshmi Somasundaram

நடிகரும், சமையல் கலைஞருமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். டிவி செலிபிரிட்டியான இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  கடந்த மாதம் 29 ஆம் தேதி புகார் அளித்தார். 

ஏற்கெனவே திருமணமான இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி தன்னோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும் ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்த புகார் திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலை தளங்களில் கொண்டாடப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர். ஆனால் ஜாய் அளித்த புகாரில் விசாரணை தொடங்குவதில் தாமதமாவதாக அவரே குற்றம் சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தநிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா கடந்த 22 ஆம் தேதி ஆஜரானார். துணை ஆணையர் வனிதா தலைமையிலான மகளிர் போலீசார் காலை 11 மணி முதல் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார். ஜாய் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 26 ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.  ஜாய் கிரிசல்டா அளித்துள்ள வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜூடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.