தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சங்கீதா தரப்பில் விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
சங்கீதா தரப்பில் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், குடும்ப நல வழக்கு என்பதால் இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைகளில் இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, முதல்வர் விஜய்யின் பணிச்சுமை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி காணொலி வாயிலாக விசாரணையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என இருதரப்பு வழக்கறிஞர்கள் தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், கடந்த (ஜூன் 15) ஆம் தேதி இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இருவரையும் முதலில் சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை (ஆகஸ்ட் 7) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு சங்கீதா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்றே வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சங்கீதாவிடம் Zoom காணொலி அழைப்பு மூலம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இன்று நடைபெறும் விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், இருதரப்பு வாதங்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான விவரங்கள் வெளியாகும் நிலையில், இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்