பொழுதுபோக்கு

“காட்டுக்குள் சைக்கோ-விடம் சிக்கிய பெண்” - மிஷ்கின் படத்தை மிஞ்சும் த்ரில்லர்..? Apex கொடுக்கும் ட்விஸ்ட்!

இதற்கு முன்பு அங்கு சென்ற சிலர் திரும்பி வரவில்லை என்றும், அந்த இடம் மிகவும் ஆபத்தானது..

Muthu Lakshmi

ஒரு த்ரில்லர் படத்தைப் பார்க்கும்போது, அந்த கதாபாத்திரத்தோட நாமும் கதைக்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு வந்தால், அந்தப் படம் நம்மை ஈர்த்துள்ளது என சொல்லலாம். Apex படத்தைப் பார்க்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும், நானும் கதாநாயகி சாஷாவுடன் அந்தக் காட்டுக்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் எதிர்கொண்ட ரத்த காட்சி முதல் ஒவ்வொரு அசைவிலும் பயணப்பட தொடங்கியது போன்று இருந்தது.

படத்தின் ஆரம்பத்தில் சாஷாவும் அவரது பார்ட்னரும் மலையேறும் சாகசப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு அசாதாரண சூழல் ஏற்படுகிறது. இதில் சாஷாவின் பார்ட்னர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த இழப்பிற்கு குற்ற உணர்வில் இருக்கும் சாஷா தனியாக காட்டுக்குள் ஒரு பயணம் செல்ல முடிவு செய்கிறார்.

Apex

அந்த பயணத்திற்கு முன்பதிவு செய்யும்போது, சிலர் அவளை எச்சரிக்கிறார்கள். இதற்கு முன்பு அங்கு சென்ற சிலர் திரும்பி வரவில்லை என்றும், அந்த இடம் மிகவும் ஆபத்தானது என்றும் சாஷாவுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் தனது பயணத்தை தொடங்குகிறாள் சாஷா. அப்போது பென் (Ben) என்பவரை சாஷா சந்திக்கிறாள். பென் (Ben) இதற்கு முன் அந்த காட்டுக்குள் பயணம் செய்தவர் மற்றும் காட்டின் வழித்தடங்களை நன்கு அறிந்தவர். அவர் செல்லும் வழியை சாஷாவிடம் சொல்கிறார். அதில் இருக்கும் ஆபத்தையும் குறிப்பிடுகிறார். இத்தனை எச்சரிக்கைக்கு பின்னும் சாஷா அந்த வழியிலேயே தனது பயணத்தைத் தொடர்கிறார்.

Apex

ஒரு இரவு காட்டில் தங்கும் சாஷாவுக்கு, அங்கு சுற்றி திரியும் சிலரால் சில அசௌகரியமான சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருந்து தனது தனி படகு மூலம் ஆற்றில் பயணம் செய்கிறாள். அன்றிரவு ஒரு இடத்தில் டென்ட் போட்டு ஓய்வு எடுக்க முடிவெடுக்கிறாள். இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, தனது பை, செல்போன், உணவு உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயிருப்பதை கவனித்து அதிர்ச்சி அடைகிறாள். அப்போது மீண்டும் பென்-னை சந்திக்கிறாள்.

காட்டுக்குள் தனியாக இருக்கும் சாஷாவுக்கு பென்னின் உதவி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் பென்னும் மிகவும் நன்றாகவே பேச தொடங்கி, சாஷாவின் தைரியத்தை பாராட்டுகிறார். ஆனால் அவர் பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிகிறது.

Apex

அங்கிருந்துதான் படத்தின் உண்மையான த்ரில்லர் ஆரம்பமாகிறது.

சாஷாவுக்கு சந்தேகம் வரத் தொடங்குகிறது. தன்னுடைய பொருட்கள் காணாமல் போனதற்கும் பென்னுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதன்பிறகு அவள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள். பென்-னும் ஒரு வாய்ப்பு கொடுத்து ஓட சொல்கிறார். இருவருக்கும் இடையில் தொடங்கும் இந்தப் போராட்டமும் ஓட்டமும் தான் படம் முழுவதும் நம்மை பதற்றத்தில் வைத்திருக்கிறது.

Apex

ஒரு கட்டத்தில் பென்னின் உண்மையான முகம் தெரியவரும்போது, எனக்கு தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான Psycho படம் லேசாக நினைவுக்கு வந்தது. குறிப்பாக தனிமையில் வாழும் ஒரு மனிதனின் மனநிலையும், அவன் செய்யும் கொடூரமான விஷயங்களும் நினைவு வந்தது. ஒரு கட்டத்தில் தான் தெரியவரும் நாம் ஒரு நரமாமிசம் உண்பனுடன் (cannibal) சிக்கி கொண்டோம் என்று. இங்கிருந்து சாஷா எப்படி தப்பிக்கிறாள், பென் என்ன ஆகிறான். இருவரும் நண்பர்களாகிறர்களா? அல்லது உயிரிழக்கிறார்களா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். அதை ரிவில் செய்ய வேண்டாம்.. நீங்களும் அந்த காட்டுக்குள்ள ஒரு பயணம் போயிட்டு வாங்க. வெறும் ஒன்றரை மணி நேரம் தான். Apex படம் தமிழில் வெளியான Psycho பட கதையை வேறு விதமாக எடுத்துச் செல்கிறது. ஒரே ஓரு ஹிண்ட் மட்டும் கொடுக்கிறேன், “நம்ம ஊரு படம் மாதிரி தாய்மை, அவன்கிட்ட ஒரு குழந்தையை பார்த்த” போன்ற செண்டிமெண்ட் டயலாக் போட்டு குற்றங்களை நியாயப்படுத்த மாட்டாங்க. 

Apex

படத்தின் மிகப்பெரிய பலம் சார்லிஸ் தெரானும் (சாஷா) டாரன் எகர்டனும் (பென்). இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இருவருக்கும் இடையிலான மோதல் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில், இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து கதை நகர்வதால் சில இடங்களில் ரிப்பீட் மோடில் இருப்பது போல தெரிகிறது. சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதுவே படத்தின் த்ரில்லர் உணர்வையும் அதிகப்படுத்துகிறது.

Apex

மொத்தத்தில், Apex ஒரு நல்ல survival thriller. குறிப்பாக காட்டுக்குள் நடக்கும் துரத்தல், தப்பிக்கும் முயற்சிகள் மற்றும் பென்-னின் உண்மையான முகம் என படம் தொடர்ந்து நம்மை அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் பார்க்க வைக்கிறது. கிரைம் த்ரில்லர் படங்கள் பிடிக்கும் என்பவர்கள், Apex படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.