தென்கொரியாவில் கண் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 71 வயது விவசாயியின் இரு கண்களிலும் உயிருடன் இருந்த 11 ஒட்டுண்ணி புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கண்களில் ஏதோ உறுத்துவது போன்ற உணர்வு, சிவந்து போதல் மற்றும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண கண் பாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்த அவர், தொடர்ந்து தொந்தரவு அதிகரித்ததால் மருத்துவமனையை நாடியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது கண்களுக்குள் உயிருடன் பல புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தென்கொரியாவில் உள்ள காங்வான் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் இந்த அரிய பாதிப்பைக் கண்டறிந்துள்ளனர். 71 வயதான அந்த விவசாயி இரண்டு மாதங்களாக இரு கண்களிலும் ஏதோ வெளிப்பொருள் சிக்கியிருப்பது போன்ற உணர்வுடன் இருந்துள்ளார். இதனுடன் கண்கள் சிவந்து காணப்படுதல், பார்வை தெளிவில்லாமல் போதல் உள்ளிட்ட அறிகுறிகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது கண் இமைகளுக்கும் கண் விழிகளுக்கும் இடையில் உள்ள பகுதியில் வெள்ளை நிறத்தில் சிறிய புழுக்கள் அசைந்து கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அந்தப் பகுதியை மிகவும் கவனமாகப் பரிசோதித்தனர். அப்போது ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 11 உயிருள்ள ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் மருத்துவக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். பின்னர் கண்களில் சொட்டு மருந்து மூலம் உள்ளூர் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, மிக நுணுக்கமான மருத்துவக் கருவிகளின் உதவியுடன் ஒவ்வொரு புழுவாக வெளியே எடுக்கப்பட்டது. அகற்றப்பட்ட புழுக்களின் நீளம் சுமார் 11 முதல் 20 மில்லிமீட்டர் வரை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புழுக்கள் எத்தகையவை என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் அவற்றை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவை 'தெலாசியா கலிபேடா' (Thelazia callipaeda) என்ற வகையைச் சேர்ந்த ஒட்டுண்ணிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இவை பொதுவாக ஓரியண்டல் ஐவார்ம் (Oriental Eyeworm) என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகைப் புழுக்கள் பெரும்பாலும் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளின் கண்களில் காணப்படுபவை. சில அரிய சூழல்களில் மனிதர்களின் கண்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்தப் புழுக்கள் மனிதர்களின் கண்களுக்குள் எப்படிச் செல்கின்றன என்பதும் மருத்துவ ரீதியாக முக்கியமான விஷயமாக உள்ளது. பொதுவாக ஈக்கள் மூலமாகவே இவை பரவுகின்றன. பாதிக்கப்பட்ட விலங்குகளின் கண்களில் உள்ள கண்ணீர் மற்றும் திரவங்களை உணவாக எடுத்துக்கொள்ளும் சில வகை ஈக்கள், அந்தப் புழுக்களின் ஆரம்பநிலை லார்வாக்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றன. பின்னர் அவை மனிதர்களின் கண்களுக்கு அருகில் வந்து அமரும்போது, அந்த லார்வாக்கள் கண் பகுதியில் சென்றடைய வாய்ப்புள்ளது. அங்கு அவை வளர்ந்து முழுமையான புழுக்களாக மாறுகின்றன.
இந்தச் சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அகற்றப்பட்ட பெண் புழுக்களில் சில ஏற்கெனவே முட்டைகளையும் ஆரம்பநிலை லார்வாக்களையும் கொண்டிருந்தன. அதாவது, அந்த ஒட்டுண்ணிகள் மனிதரின் கண்களுக்குள் வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் நிலையை அடைந்திருந்தன. ஆண் புழுக்களும் ஆய்வில் அடையாளம் காணப்பட்டன. இதன் மூலம் அந்தப் புழுக்கள் கண்களுக்குள் நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
புழுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து விவசாயியின் கண் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்தன. குறிப்பாக, கண்களில் இருந்த உறுத்தல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் சரியாகத் தொடங்கின. அதன் பிறகு இரண்டு மாதங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மீண்டும் புழுக்கள் உருவாகியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. புழுக்களை முழுமையாக அகற்றியதன் காரணமாக அவருக்கு கூடுதலான ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரிய மருத்துவச் சம்பவம் குறித்த ஆய்வை காங்வான் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' (New England Journal of Medicine) மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 24ஆம் தேதி வெளியான இந்த ஆய்வு, கண்களில் நீண்ட நாட்களாக ஏற்படும் உறுத்தல் மற்றும் சிவத்தல் போன்ற அறிகுறிகளுக்குப் பின்னால் ஒட்டுண்ணி பாதிப்பும் இருக்கலாம் என்பதை மருத்துவ உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
பொதுவாக கண்களில் ஏற்படும் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல் மற்றும் ஏதோ தூசி விழுந்தது போன்ற உணர்வுகளை பலரும் சாதாரணப் பிரச்சினையாகக் கருதி அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், இதுபோன்ற அறிகுறிகள் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக விவசாயப் பணிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுபவர்கள் பூச்சிகள் கண்களை நெருங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். சாதாரண கண் பரிசோதனைக்குச் சென்ற ஒருவரின் இரு கண்களிலும் 11 உயிருள்ள புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது. சிறியதாகத் தோன்றும் கண் பிரச்சினைகளைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.