தமிழ்நாட்டு சமையலில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவை மிக முக்கியமானவை. பொதுவாக இல்லத்தரசிகள் வருடம் முழுவதும் பயன்படுத்துவதற்காக மொத்தமாக மசாலாக்களை அரைத்து வைப்பது வழக்கம். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே அதில் வண்டுகள் வருவதும், மசாலாவின் மணம் மாறுவதும் பெரும் கவலையைத் தரும். விலைவாசி உயர்ந்து வரும் இந்த காலத்தில், கஷ்டப்பட்டு அரைத்த மசாலா பொடிகள் வீணாவதை எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. உங்கள் வீட்டு மசாலாக்கள் நீண்ட நாட்கள் வண்டு பிடிக்காமல், அதே காரத்துடனும் மணத்துடனும் இருக்க சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.
முதலில் மசாலா அரைக்கும் முன்பே நாம் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மிளகாய் மற்றும் மல்லியை நன்றாக வெயிலில் காயவைத்து, ஈரப்பதம் அறவே இல்லாத நிலையில் அரைக்க வேண்டும். மசாலா பொடிகளைச் சூடாக இருக்கும்போதே டப்பாக்களில் அடைக்கக் கூடாது. நன்றாக ஆறவிட்ட பிறகுதான் சேமிக்க வேண்டும். மிளகாய்த்தூள் அரைக்கும்போது அதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைப்பது வண்டு பிடிக்காமல் இருக்க உதவும் ஒரு பாரம்பரிய முறையாகும். உப்பு ஒரு சிறந்த பாதுகாப்பானாக (Preservative) செயல்பட்டு மசாலாவைப் பாதுகாக்கும்.
மிளகாய்த்தூள் அல்லது மற்ற மசாலா பொடிகள் வைத்துள்ள டப்பாவிற்குள் ஒரு துண்டு 'கட்டி பெருங்காயத்தை' போட்டு வைப்பது மிகச்சிறந்த பலனைத் தரும். பெருங்காயத்தின் வாசனைக்கு வண்டுகள் அல்லது பூச்சிகள் அண்டாது. அதேபோல், டப்பாவின் அடியில் இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து, அதன் மேல் மசாலா பொடியை நிரப்புவதும் வண்டு வராமல் தடுக்கும். மசாலா பொடிகளை எப்போதும் பிளாஸ்டிக் கவர்களை விட, கண்ணாடி ஜாடிகள் அல்லது துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) டப்பாக்களில் சேமிப்பது அதன் தரத்தை நீண்ட நாட்கள் பாதுகாக்கும்.
மற்றுமொரு அபூர்வமான டிப்ஸ் என்னவென்றால், மிளகாய்த்தூள் டப்பாவிற்குள் நான்கைந்து 'கிராம்பு' அல்லது ஒரு சிறிய துண்டு 'வசம்பு' போட்டு வைப்பதாகும். வசம்பின் வாசனைக்கு எப்பேர்ப்பட்ட வண்டுகளும் மசாலாவை நெருங்காது. அதேபோல், மசாலாவை எடுக்கும்போது எப்போதும் ஈரமில்லாத உலர்ந்த ஸ்பூன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். லேசான ஈரம் பட்டால் கூட மசாலாவில் பூஞ்சை காளான் (Fungus) மற்றும் வண்டுகள் உருவாகத் தொடங்கிவிடும். குறிப்பாக மழைக்காலங்களில் டப்பாவை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பெரிய டப்பாக்களில் மசாலாவைச் சேமித்து வைத்துக்கொண்டு, தினசரி பயன்பாட்டிற்கு மட்டும் ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக் கொள்வது நல்லது. இது பெரிய டப்பாவில் உள்ள மசாலா காற்றில் பட்டு வீணாவதைத் தடுக்கும். ஒருவேளை உங்கள் வீட்டு மசாலாவில் வண்டு பிடித்துவிட்டது என்று தெரிந்தால், அதை உடனடியாக வெயிலில் காயவைத்துச் சலித்து எடுக்க வேண்டும். இந்தச் சின்னச் சின்ன ரகசியங்களைப் பின்பற்றினால், நீங்கள் கஷ்டப்பட்டு அரைத்த மிளகாய்த்தூளும் மற்ற மசாலாக்களும் ஒரு வருடம் ஆனாலும் அதே ஃப்ரெஷ்ஷான மணத்துடன் இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.