லைஃப்ஸ்டைல்

இளமையான தோற்றத்தை கொடுக்கும் இயற்கை பொக்கிஷம்.. சங்கு பூவால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

ப்ளூ டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது....

மாலை முரசு செய்தி குழு

வாசனைக்காக சில மலர்களும், அழகுக்காக சில மலர்களும், மக்கள் மனதைக் கவர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால் மருத்துவ குணத்திற்காக மட்டுமே முக்கியத்துவம் பெறும் பூக்களில் சங்கு பூ சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சங்கு பூக்கள் ஆங்கிலத்தில் Butterfly Pea என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Clitoria ternatea ஆகும். வேலி ஓரங்களில் தானாகவே வளர்ந்திருக்கும் இந்த சங்கு பூக்களில் இத்தனை சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது என்றால் நம்மால் நம்ப முடியவில்லைதான். ஆனால் அதுதான் உண்மை. கிராமப்புறங்களில் களைச் செடிகளாக புதர் போன்று வளர்ந்திருக்கும் இந்த சங்கு பூக்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை.

அந்த மலர்களின் நிறத்திற்காகவும், அழகிற்காகவும் நகர்ப்புற வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது இந்த சங்குப் பூ செடிகள். ஆனால் இதன் பயன்கள் அறியப்பட்ட பின்னர், இதன் செடிகள் மற்றும் விதைகள் ஆன்லைனில் விற்பனை செய்யும் அளவுக்கு மாறியுள்ளது. சரி, இந்த மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன, இந்த மலரில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும்

எடை இழப்புக்கு நீல நிற சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மிகவும் சிறந்தது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடலில் உறைந்த கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. சூடான சங்கு பூ டீயை குடித்து வந்தால், உடல் பருமனை எளிதில் குறைக்கலாம்.

சங்கு பூ டீ போடும் முறை

ஒன்றரை டம்ளர் தண்ணீரில்சங்கு பூவில் சிலவற்றை போட்டு கொதிக்க வைத்தால், 5 நிமிடங்களில் அந்த மலரில் உள்ள வண்ணம் முழுவதும் தண்ணீரில் இறங்கி விடும். பின்னர் அதை வடிகட்டி, அதில் சில சொட்டு எலுமிச்சை சாறு கலந்து அப்படியே பருகலாம். அல்லது இனிப்பு சுவை தேவைப்பட்டால் கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இந்த சங்கு பூ டீயில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இளமையான தோற்றத்தை தரும்

இந்த சங்குப் பூக்களில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ப்ளூ டீயில் முதுமை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.

இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளித்து, சருமத்தில் சுருக்கங்களை நீக்கி சருமத்தை இறுக்கமாக்குகிறது. இதன் மூலம் சருமத்தில் முதுமை தோற்றத்தையும் சுருக்கங்களையும் தரும் செல்களை எதிர்த்துப் போராடி, ப்ளூ டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதன் மூலம் தோலில் சுருக்கங்கள் வருவதை தள்ளிப்போட்டு இளமையோடு வைக்க உதவுகிறது.

தலைமுடிக்கு புத்துயிர் கொடுக்கும் சங்கு பூ

நீல நிற சங்கு பூ டீயில் உள்ள அந்தோசயனின் - உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலை முடியை நன்றாக வளர வைக்கிறது. அத்துடன், நரைத்தல் மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பதன் மூலம் இழந்த பிரகாசத்தைத் திரும்பக் கொண்டு வருகிறது.

மன அழுத்தத்தை போக்கும்

ப்ளூ டீயின் முக்கிய நன்மை மன அழுத்தத்தைக் குறைப்பது. ப்ளூ டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மனித உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இது மனநிலையை மேம்படுத்தவும், மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது. தூங்கும் முன் ஒரு கப் ப்ளூ டீ குடித்தால், உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

உடல் வலியை போக்கி உற்சாகத்தை தரும்

ப்ளூ டீயுடன் சிறிதளவு இஞ்சி, சிறிதளவு மிளகு ஆகியவற்றை இடித்து சேர்த்து குடித்தால் சுவாசக் கோளாறுகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை அகற்றவும் உதவுகிறது. இதனால் சளி தொல்லை மற்றும் உடல் வலியை போக்குகிறது .

செரிமானம் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும்

சங்கு பூ டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது கோடை காலத்தில் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு சிறந்த பானமாக அமைகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல் என்பது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெறும் வயிற்றில் ஒரு கப் ப்ளூ டீ குடிப்பது, உடலில் குவிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நம் வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் சங்கு பூ செடிகளை இனி ஆரோக்கியத்திற்காக வளர்ப்போம்.

சங்கு பூ டீயை தவிர்க்க வேண்டியவர்கள்

ஏராளமான ஆரோக்கியங்கள் அடங்கி இருந்தாலும், அதிக அளவில் உட்கொண்டால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. இந்த டீ ரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது. எனவே குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்க வேண்டும். இது மட்டுமின்றி, எந்த மூலிகை டீயையும் அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அளவோடு அருந்துவது பாதுகாப்பானது. நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்பவர் என்றால், மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த சங்கு பூ டீயை எடுத்துக் கொள்வது நல்லது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.