alert  
லைஃப்ஸ்டைல்

யாரும் எதிர்பார்க்காத சத்தம்! சேப்பாக்கத்தில் மட்டும் இல்ல.. ஊர் முழுக்க அலறிய செல்போன்கள் - பின்னணி என்ன?

அந்தப் பகுதியில் உள்ள அத்தனை போன்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த எச்சரிக்கை சத்தம் தானாகவே சென்றுவிடும்...

மாலை முரசு செய்தி குழு

கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணி அளவில் இந்தியாவில் உள்ள பலரது ஸ்மார்ட்போன்களும் திடீரென ஒருவிதமான கூர்மையான 'பீப்' சத்தத்துடன் அதிரத் தொடங்கின. திரையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் 'அதிதீவிர எச்சரிக்கை' (Extremely Severe Alert) என்ற ஒரு மெசேஜும் பளிச்சிட்டது. இதைப்பார்த்து பலரும் ஏதோ ஆபத்து என்று பதறிப்போனார்கள். ஆனால், இது ஒரு ஆபத்தும் இல்லைங்க, சுனாமி, நிலநடுக்கம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும்போது மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்திய அரசு நடத்திய ஒரு சோதனையான 'செல் பிராட்காஸ்ட்' (Cell Broadcast) முறைதான் இது.

இப்போது வரை புயல் அல்லது கனமழை பற்றிய எச்சரிக்கைகளை அரசு நமக்கு சாதாரண எஸ்எம்எஸ் மூலமாகத்தான் அனுப்பி வருகிறது. ஆனால் பல நேரங்களில் அந்த மெசேஜ் நமக்குத் தெரியாமலே போய்விடும் அல்லது போன் நம்பர் இல்லை என்றால் வராது. ஆனால் இந்த புதிய 'சசேத்' (SACHET) முறை அப்படியானது அல்ல. உங்கள் போன் நம்பர் அரசிடம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள அத்தனை போன்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த எச்சரிக்கை சத்தம் தானாகவே சென்றுவிடும்.

இந்தத் தொழில் நுட்பத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், உங்கள் போனை நீங்கள் 'சைலண்ட்' (Silent) அல்லது 'டூ நாட் டிஸ்டர்ப்' (Do Not Disturb) மோடில் வைத்திருந்தால் கூட, அதை மீறி இந்தச் சத்தம் கேட்கும். திரையில் வரும் அந்த மெசேஜை நீங்கள் பார்த்து 'ஓகே' பட்டனை அழுத்தும் வரை அந்தச் சத்தம் நிற்காது. ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி எச்சரிக்கை கொடுப்பதற்கு இதே முறையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் ஒரு தொழில்நுட்பம்.

சாதாரண எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு போன் நம்பர் தேவை மற்றும் நெட்வொர்க் ஜாமாகி இருந்தால் மெசேஜ் வருவதற்கு லேட் ஆகும். ஆனால் இந்த செல் பிராட்காஸ்ட் முறைக்கு போன் நம்பர் தேவையில்லை, ஒரு டவரின் கீழ் எத்தனை கோடி போன்கள் இருந்தாலும் அத்தனைக்கும் சில நொடிகளில் இந்த எச்சரிக்கை சத்தம் போய்விடும். இதன் மூலம் உங்கள் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் திருடப்படாது என்பது கூடுதல் வசதி. மேலும், உள்ளூர் மொழியிலேயே இந்த எச்சரிக்கையை அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

இந்தச் சத்தம் எப்போது வரும் தெரியுமா? நிலநடுக்கம், திடீர் வெள்ளம், அணை உடைப்பு அல்லது நிலச்சரிவு போன்ற மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்படும். தேவையில்லாத விளம்பரங்களுக்கோ அல்லது சாதாரண தகவல்களுக்கோ இதை அரசு பயன்படுத்தாது. இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மையமான 'சி-டாட்' (C-DOT) இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இனி உங்கள் போனில் இது போன்ற சத்தம் கேட்டால் பயப்பட வேண்டாம். அது உங்களை எச்சரிக்கவே வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி வரும் புயல், வெள்ளம் போன்ற ஆபத்துகளில் இருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற இது ஒரு சிறந்த கவசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அரசு நடத்தும் இதுபோன்ற சோதனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்