உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனடியாக மருத்துவரை அணுகாமல், மருந்துக் கடைக்குச் சென்று ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் எனச் சிறிய உடல்நலப் பிரச்சினைகளுக்குக்கூட ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் ஏற்கெனவே பயன்படுத்திய மருந்தை மீண்டும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர். இந்தப் பழக்கங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் மிகப்பெரிய மருத்துவப் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுதான் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி எனப்படும் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (AMR).
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக 'ஒரே ஆரோக்கியம், ஒரே நடவடிக்கை: நுண்ணுயிர் எதிர்ப்பை இப்போதே தடுப்போம்' (One Health, One Action: Prevent AMR Now) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இந்த ஆண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
அப்படியென்றால் இந்த AMR என்றால் என்ன? பொதுவாக நமது உடலில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சில நுண்ணுயிரிகள் காலப்போக்கில் மருந்துகளின் தாக்கத்தைத் தாங்கிக்கொண்டு உயிர்வாழும் திறனைப் பெறுகின்றன. இதனால் அந்த மருந்துகள் முன்பு போல பலனளிக்காமல் போகின்றன. இதுவே நுண்ணுயிர் எதிர்ப்பு எனப்படுகிறது.
ஒரு பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து நாளடைவில் அந்த பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம். இதனால் அதே தொற்றுக்கு வேறு மருந்துகளைத் தேட வேண்டிய சூழல் ஏற்படும். சில நேரங்களில் வலிமையான மருந்துகளும் பலனளிக்காமல் போகலாம். இதன் காரணமாக நோய் குணமடைய அதிக நாட்கள் ஆகலாம். மருத்துவமனையில் நீண்ட காலம் தங்க வேண்டிய நிலையும், சிகிச்சைச் செலவு அதிகரிப்பதும் ஏற்படலாம். கடுமையான சூழல்களில் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கலாம்.
எல்லா காய்ச்சலுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவையில்லை. சாதாரண சளி, காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் வைரஸ்களால் ஏற்படுகின்றன. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படுபவை என்பதால், வைரஸ் தொற்றுகளைக் குணப்படுத்த அவை உதவாது. ஆனால், தேவையில்லாமல் இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்தும்போது மருந்து எதிர்ப்புத் திறன் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது.
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தானாகவே மாற்றுவது, மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைப் பயன்படுத்துவது, வீட்டில் மீதமிருக்கும் பழைய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மீண்டும் எடுத்துக்கொள்வது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட அளவு மற்றும் கால அட்டவணைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ, உடல்நிலையில் மாற்றம் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். தானாகவே மருந்தை நிறுத்தவோ, அளவை மாற்றவோ கூடாது.
கால்நடைகளுக்கு தேவையில்லாமல் அல்லது முறையற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படும்போதும் மருந்து எதிர்ப்புத் திறன் உருவாகலாம். எதிர்ப்பு கொண்ட நுண்ணுயிரிகள் உணவு, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் வழியாகப் பரவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மனித மருத்துவம் மட்டுமின்றி கால்நடை மருத்துவம், விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
பாக்டீரியா மருந்து எதிர்ப்புடன் தொடர்புடைய உயிரிழப்புகள் ஆண்டுக்கு 47 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டுக்குள் மருந்து எதிர்ப்புடன் தொடர்புடைய உயிரிழப்புகள் 3.9 கோடி வரை ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உலக சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
அப்படியானால் பொதுமக்கள் இந்தப் பிரச்சினையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? முதலில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கைகளைச் சோப்பால் முறையாகக் கழுவுதல், உணவுப் பொருட்களைச் சுத்தமாகக் கையாளுதல், குடிநீரின் சுகாதாரத்தைப் பேணுதல், தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுதல் போன்ற அடிப்படைப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். பயன்படுத்தாமல் மீதமிருக்கும் மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவற்றைத் தண்ணீரிலோ கழிவுநீரிலோ கொட்டாமல் பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
மருத்துவர்களும் நோயின் தன்மையைப் பரிசோதித்து தேவையானபோது மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். கால்நடை வளர்ப்பிலும் விவசாயத்திலும் மருந்துகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம். மருத்துவமனைகளில் தொற்று பரவாமல் தடுக்கும் சுகாதார நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பல ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், அந்த மருந்துகளைத் தேவையில்லாமல் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அவற்றின் பலனையே இழக்க நேரிடலாம். இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு மாத்திரையின் தவறான பயன்பாடு நாளைய தலைமுறைக்கு மிகப்பெரிய மருத்துவச் சவாலாக மாறக்கூடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தானாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துவோம். உயிரைக் காக்கும் மருந்துகளின் செயல்திறனைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்