கண்ணாடி பாட்டில்கள் என்றாலே, பிளாஸ்டிக் பாட்டில்களை விட சுத்தமானவை, ஆரோக்கியமானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று நினைப்போம். ஆனால், பிரான்ஸ் உணவு பாதுகாப்பு முகமையான ANSES-ன் புதிய ஆய்வு, இந்த நம்பிக்கையை தலைகீழாக்கியிருக்கு. கண்ணாடி பாட்டில்களில் உள்ள பானங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை விட 5 முதல் 50 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வு கூறுது.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மில்லிமீட்டருக்கு குறைவான அளவு கொண்ட சிறிய பிளாஸ்டிக் துகள்கள். இவை கடல், நிலம், காற்று, உணவு, மனித உடல் என்று எங்கும் பரவியிருக்கு. மரியானா குழி முதல் எவரெஸ்ட் உச்சி வரை, இந்த துகள்கள் உலகத்தை ஆக்கிரமிச்சிருக்கு. இவை பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உடைகள், பெயிண்ட், டயர்கள் உடைந்து உருவாகிறவை. இந்த ஆய்வு, கண்ணாடி பாட்டில்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக், பாட்டில்களில் இருந்து வரலை, ஆனா மூடிகளில் (Caps) பயன்படுத்தப்பட்ட பெயிண்டில் இருந்து வருதுன்னு கண்டறிந்திருக்கு.
பிரான்ஸ் உணவு பாதுகாப்பு முகமை ANSES, பலவகையான பானங்களை ஆராய்ந்து, Journal of Food Composition and Analysis இதழில் மே 2025ல் வெளியிட்ட இந்த ஆய்வு, பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருக்கு. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய PhD மாணவி இசலின் சைப் (Iseline Chaib), “நாங்க எதிர்பார்த்தது இதுக்கு நேர் எதிரா இருந்துச்சு”ன்னு கூறியிருக்கார். இதோ முக்கிய கண்டுபிடிப்புகள்:
சோடா, லெமனேட், ஐஸ்டீ, பீர் ஆகியவை கண்ணாடி பாட்டில்களில் இருக்கும்போது, ஒரு லிட்டருக்கு சராசரியா 100 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருக்கு. இது பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது உலோக கேன்களை விட 5 முதல் 50 மடங்கு அதிகம்.
பீர் பாட்டில்களில் அதிகபட்சமா ஒரு லிட்டருக்கு 60 துகள்கள், லெமனேடில் 40 துகள்கள், சோடாவில் 30 துகள்கள் கண்டறியப்பட்டிருக்கு.
குடிநீர் பாட்டில்களிலும் ஒப்பீட்டளவு குறைவான மைக்ரோபிளாஸ்டிக் தான் இருக்கு: கண்ணாடி பாட்டில்களில் ஒரு லிட்டருக்கு 4.5 துகள்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் 1.6 துகள்கள்.
வைன், கண்ணாடி பாட்டில்களில் இருந்தாலும், மிகக் குறைவான மைக்ரோபிளாஸ்டிக் தான் இருக்கு, ஏன்னா இவை பெரும்பாலும் கார்க் மூடிகளால் (Cork Stoppers) மூடப்படுது, பெயிண்ட் பூசப்பட்ட உலோக மூடிகள் இல்லை.
கண்ணாடி பாட்டில்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக், பாட்டில்களில் இருந்து வரலை, ஆனா மூடிகளில் பயன்படுத்தப்பட்ட பெயிண்டில் இருந்து வருது. இந்த மூடிகள், சேமிக்கப்படும்போது ஒரு மூடி மற்றொரு மூடியோடு உரசி, கண்ணுக்கு தெரியாத சிறு கீறல்களை உருவாக்குது. இந்த கீறல்களில் இருந்து பெயிண்ட் துகள்கள் உதிர்ந்து, பானத்துக்குள் கலக்குது.
ஆய்வில், பானங்களில் கண்டறியப்பட்ட துகள்களின் நிறம், வடிவம், மற்றும் பாலிமர் கலவை (Polyester) மூடிகளின் பெயிண்டோடு ஒத்துப்போனது.
ANSES ஆய்வு, ஒரு எளிய தீர்வையும் சோதிச்சு பார்த்திருக்கு. மூடிகளை காற்று ஊதி (Air Blowing), பின்னர் தண்ணீர் மற்றும் ஆல்கஹால் கலவையால் கழுவினால், மைக்ரோபிளாஸ்டிக் அளவு 60% வரை குறையுது. இதை பான உற்பத்தியாளர்கள் எளிதாக பின்பற்றலாம்.
மைக்ரோபிளாஸ்டிக் உடல்நலத்துக்கு ஆபத்து உண்டாக்குமா என்று இன்னும் தெளிவான ஆதாரம் இல்லை, ஆனா ஆராய்ச்சி தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு. இதோ சில முக்கிய புள்ளிகள்:
மைக்ரோபிளாஸ்டிக் மனித ரத்தம், குடல், மூளை, மற்றும் கருவில் கூட கண்டறியப்பட்டிருக்கு. ஒரு ஆய்வு, மூளையில் 0.5% எடையளவு மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம்னு கூறுது, இது ஒரு தேக்கரண்டி அளவுக்கு சமம்!
புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மற்றும் குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சியில் மாற்றங்கள் போன்றவை மைக்ரோபிளாஸ்டிக் உடன் தொடர்புடையவையாக ஆராயப்படுது.
டிமென்ஷியா நோயாளிகளின் மூளையில், ஆரோக்கியமானவர்களை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வு கூறுது.
ஆண்களின் விந்தணுவில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டு, இது இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கலாம்னு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கு.
மைக்ரோபிளாஸ்டிக் கடல் உயிரினங்களை பாதிக்குது, மீன்கள் இதை உணவாக நினைச்சு சாப்பிடுது, இது உணவு சங்கிலி வழியா மனிதர்களுக்கு வருது.
மழைநீர், ஆர்க்டிக் பனி, மண்ணு என்று எங்கும் இந்த துகள்கள் பரவியிருக்கு, இது சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு பெரிய பங்களிப்பு செய்யுது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.