இன்றைய அவசர உலகில் உடல் எடையை வேகமாகக் குறைக்கப் பலரும் கையாளும் ஒரு முக்கிய வழிமுறை 'கீட்டோ டயட்' எனப்படும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு முறையாகும். கார்போஹைட்ரேட் உணவுகளை அறவே தவிர்த்து, அதிகப்படியான கொழுப்பை உணவாக உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. ஆனால், இந்த உணவு முறையை நீண்ட காலம் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும், குறிப்பாக கல்லீரலில் கொழுப்பு படிந்து 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) எனப்படும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் புதிய ஆய்வொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஆரோக்கியத்திற்காக டயட் இருப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள உட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த புதிய ஆய்வில், கீட்டோ டயட் முறையைப் பின்பற்றுவதால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, எலிகளைக் கொண்டு ஒன்பது மாதங்கள் நடத்தப்பட்ட சோதனையில், கீட்டோ டயட் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவினாலும், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பைச் சேமித்து வைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் செல்கள் சிதைந்து, நாளடைவில் அது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் நிலையை இது உருவாக்குகிறது. கொழுப்புகளை அதிகம் சாப்பிடும் போது, அவை இரத்தத்திலும் கல்லீரலிலும் தங்கி உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைக்கின்றன.
இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், கீட்டோ டயட் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அளவு குறைந்தது போலத் தெரிந்தாலும், மீண்டும் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் எகிறுகிறது. இது இன்சுலின் சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்களைப் பாதிப்பதாலேயே ஏற்படுகிறது. உடல் எடை குறைகிறது என்ற ஒரே காரணத்திற்காக கல்லீரலின் ஆரோக்கியத்தையும், சர்க்கரை அளவையும் பணயம் வைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. நீண்ட நாள் கீட்டோ டயட்டில் இருக்கும் எலிகளுக்குக் கல்லீரல் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுவதை ஆய்வாளர்கள் நேரடிச் சான்றுகளுடன் விளக்கியுள்ளனர். ஒருமுறை கீட்டோ டயட்டை நிறுத்திவிட்டுச் சாதாரணமாக உணவு உட்கொள்ளும் போது சில பாதிப்புகள் சரியாக வாய்ப்பிருந்தாலும், நீண்ட காலப் பாதிப்புகள் முற்றிலும் குணமாகுமா என்பது கேள்விக்குறியே. எனவே, மருத்துவரின் முறையான ஆலோசனை இன்றி இத்தகைய தீவிர உணவு முறைகளை ஒருபோதும் பின்பற்றக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
சமச்சீர் உணவு முறையே உடலுக்கு எப்போதும் சிறந்தது என்பதை மருத்துவ உலகம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. வெறும் கொழுப்பை மட்டும் நம்பி இருக்கும் கீட்டோ டயட் போன்ற முறைகள் குறுகிய காலத்திற்குப் பலன் தந்தாலும், எதிர்காலத்தில் கல்லீரல் கோளாறுகள் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.