52 வயதான பை ஜியான், வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். முதலில் அவர் 20 முதல் 30 பிள்ளைகளுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் பின்பு, 1995-ம் ஆண்டு முதல், 'பை என்பவரின் கனவு இல்லம்' என்று அழைக்கப்படும் அந்தத் தோட்டத்தில் குறைந்தது 276 குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். அந்தக் குழந்தைகளில் அனாதைக் குழந்தைகள், தங்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவர். அந்த குழந்தைகளில் சிலர் வளர்ந்து தொழில்முறை விளையாட்டு வீரர்களாகவோ, மக்கள் விடுதலை இராணுவ வீரர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களாகவோ ஆகியுள்ளனர்.
பை-யின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் 100-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்றும், அவர்களில் 50 பேர் தேசிய விளையாட்டு ஆணையத்தின் மிக உயர்ந்த நிலை தடகள வீரர் தரவரிசையை அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பை, லியோனிங் மாகாணத்தின் ஹுலுடாவோவில் ஒரு வறுமையில் வாடும் ஒரு கிராமப்புறக் குடும்பத்தில் பிறந்தார். விளையாட்டில் அவருக்கிருந்த அசாதாரணத் திறமையின் காரணமாக, அவருக்கு கல்லூரியில் சேர்க்கை கிடைத்தது. பட்டம் பெற்றவுடன், அவர் ஒரு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிக்கு நியமிக்கப்பட்டார். அங்கு, அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதும், சக மாணவர்களின் தின்பண்டங்களைத் திருடுவதும் என ஒரு குறும்புக்கார மாணவன் பை-யின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த சிறுவனிடம் பேசியபோது, அந்தச் சிறுவனின் பெற்றோர் அவனைக் கைவிட்டுவிட்டதையும், அவனுக்கு உணவளிக்கப்படவில்லை என்பதையும் பை தெரிந்த்துக்கொண்டார் .
பை அந்தப் பையனைத் தன்னுடன் தனது அறையில் தங்க வைத்துக்கொண்டார். "என் பெற்றோர்கூட என்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அப்படியானால் நீங்கள்தான் என் அப்பா," என்று அந்தச் சிறுவன் பாயிடம் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் பிறகே, பை மேலும் பல ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, பை கடன் வாங்கியும், ஓய்வு நேரத்தில் சிறுசிறு வேலைகளை கூடுதலாக செய்தும் வந்துள்ளார். தனக்குக் கல்விப் புலமையும் முறையான வருமானமும் இல்லை என்பதை உணர்ந்த பை, தனது வளர்ப்புப் பிள்ளைகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவர் தினமும் காலை 4.30 மணிக்கு குழந்தைகளை எழுப்பி, அவர்களை ஓட்டப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார். வானிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், பாயின் குழந்தைகள் தினமும் 12 கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடுவார்கள்.
"பல ஆண்டுகளாக ஓடுவதில் உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையில் எந்தவொரு சவாலுக்கும் அஞ்ச மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று பை மேலும் கூறினார். அவருடைய பிள்ளைகள் பலர் மாரத்தான் சாம்பியன்களாக ஆகியுள்ளனர், மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் அவரது பிள்ளைகள் வென்ற 1,300 பதக்கங்களால் பை-யின் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பை இதுபோன்று செய்து வந்ததால், அவரின் முந்தைய காதலிகளுடன் உறவை முறித்துக் கொள்ளும் நிலை வந்தது. அதன் பிறகு, பை தனது 46வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2020ல் ஒரு மகன் பிறந்தார். பை தனது வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், “நான் சற்றும் சோர்வாக உணரவில்லை. எனக்குக் குழந்தைகளையும் விளையாட்டையும் மிகவும் பிடிக்கும். நான் தினமும் எனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருக்கிறேன்,” என்று உற்சாகத்துடன் கூறுகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.