Healthy Multigrain Porridge 
லைஃப்ஸ்டைல்

"டயட் இல்லாமலே எடை குறைக்கலாமா?" - இந்த தானியக் கஞ்சியில் இத்தனை நன்மைகளா!

இந்த கஞ்சியை நாள்தோறும் காலை அல்லது இரவில் எடுத்துக் கொண்மால், உடல் எடை குறைவதுடன், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்...

மாலை முரசு செய்தி குழு

பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், உணவுக் கட்டுப்பாடு அவசியம்தான். ஆனால் உடல் எடையை குறைக்கிறோம் என்ற பெயரில் உணவைத் தவிர்ப்பதும், ஒரு சில உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதும், உடலின் வலிமையை இழக்க செய்கிறது. உடல் மெலிய வேண்டும் என்பது நல்லதுதான். ஆனால் அந்த உடல் சத்துக்களுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

உணவைத் தவிர்த்து, உடலையும், உடல் உறுப்புகளையும் பெலவீனமடைய செய்வது மிக மிக தவறான ஒன்று. இதனால் ஆரோக்கியமாக உடை எடையை குறைக்க ஒரு ஆரோக்கிய பானம் தான் இந்த தானியக் கஞ்சி. இந்த கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. கருப்பு கவுனி அரிசி - 2 கப்

2. கொள்ளு - 1 கப்

3. பார்லி - 1 கப்

4. பச்சை பயிறு - 1 கப்

5. கருப்பு உளுந்து - அரை கப்

6. மிளகு - 1 ஸ்பூன்

7. சீரகம் - 1 ஸ்பூன்

8. வெந்தயம் - அரை ஸ்பூன்

9. கருவேப்பிலை - சிறிதளவு

இவற்றை தனித் தனியாக வறுத்து, மிஷினில் கொடுத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பவுடரை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து, நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

கஞ்சி வைக்கும் முறை

கேரட், பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் வைத்து, காய்கறிகளை வேகவிடவும். அதில் 4 அல்லது 5 பல் பூண்டை தட்டிப் போட்டு, சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

பின்னர் காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்தள்ள பவுடரை, 2 மேசை கரண்டி அளவிற்கு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரை கரைத்து, வெந்து வரும் காய்கறியுடன் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து, கைவிடாமல் கிளரவும். மாவு நன்கு வெந்து, கெட்டி பட்டதும், இறக்கி வைத்து, அதில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொத்தமல்லி சிறிது சேர்த்து குடிக்கலாம்.

இந்த கஞ்சியை நாள்தோறும் காலை அல்லது இரவில் எடுத்துக் கொண்மால், உடல் எடை குறைவதுடன், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்களின் தன்மைகள் குறித்து பார்ப்போம்...

கருப்பு கவுனி அரிசி

அந்த காலத்தில் ராஜாக்கள் மட்டுமே சாப்பிட்டு வந்த அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி. பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரியமான ஒரு அரிசி வகை இந்த கருப்பு கவுனி அரிசியாகும். இதில் உள்ள அந்தோசயனின் (Anthocyanin) ஆன்டிஆக்ஸிடன்ட் இதன் கருப்பு நிறத்திற்குக் காரணம். இது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index) கொண்டுள்ளதால், இரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. அத்துடன், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கொள்ளு

உடலில் உள்ள அதிகப்படியான எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் கொள்ளு (Horse Gram) பெரிதும் உதவுகிறது. கொள்ளுவில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. "கொழுத்தவனுக்குக் கொள்ளு" என்ற பழமொழியே இதற்குச் சான்றாகும்.

கொள்ளுவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (Low GI) உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுத்து, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது. கொள்ளுவில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

கொள்ளுவைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தில் உருவாகும் சிறிய அளவிலான கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. இதில் புரதச் சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், உடலுக்குச் புத்துணர்ச்சியும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.

பார்லி

உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் கட்டுப்படுத்த பார்லி பெரிதும் உதவுகிறது. பார்லியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடலின் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. பார்லி நீர் குடிப்பதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், இது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இது ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. பார்லியில் உள்ள பீட்டா-குளுக்கன் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது. பார்லி நீர் குடிப்பது சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது, மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

பச்சை பயிறு

புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது என்பதால் உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பாசிப்பயறில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கலோரிகள் குறைவு மற்றும் புரதம் அதிகம் என்பதால், வயிறு நிறைந்தது போன்ற உணர்வைத் தந்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்க உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கருப்பு உளுந்து

டலுக்கு வலிமையும் ஆற்றலையும் தரும் புரச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து, எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளை வலுவாக்கி, எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது.

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தடுத்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்து ரத்த சோகையைப் போக்குகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

இப்படி இந்த கஞ்சியில் சேர்க்கும் அத்தனை பொருட்களிலும், உடல் எடையை குறைப்பதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றுகிறது. எனவே, இந்த கஞ்சியை நாள்தோறும் காலையோ அல்லது இரவிலோ எடுத்து வந்தால் உடல் எடை குறைவதுடன், உடல் வலிமையும் உறுதியும் பெறும் என்பது நிச்சயம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்