ஜலதோஷம், சளி மற்றும் இருமல் வந்தாலே நாம் நாமாக இருக்க முடியாது. அவ்வளவு Irritate ஆகும். அதிலும், இந்த சளி படுத்தும் பாடு இருக்குப் பாருங்க.. அப்பப்பா! இத்தகைய நேரத்தில், பலர் உடனடி நிவாரணத்திற்காக ஆங்கில மருந்துகளை நாடிச் சென்றாலும், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதற்கு மிகச் சிறந்த தீர்வாக மிளகு ரசம் இருந்து வருகிறது. இந்த மிளகு ரசம், வெறும் உணவாக மட்டும் இல்லாமல், ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது.
மிளகு ரசம், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில், மிளகு ஒரு முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது. இது உடலின் வெப்பத்தை அதிகரித்து, சளியை வெளியேற்றும் சக்தி கொண்டது. மிளகில் உள்ள 'பைபரின்' (Piperine) என்ற தனிமப்பொருள், உடலில் உள்ள அழற்சியை (inflammation) குறைக்கும் தன்மை கொண்டது.
இது மூக்கடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை சீராக்குகிறது. பூண்டில் உள்ள 'அலிசின்' (Allicin) என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளிக்கு காரணமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகிறது. சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. புளியில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
மிளகு - 1.5 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 முதல் 6 பற்கள்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1 (சிறியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
முதலில், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒரு உரலில் போட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் அரைப்பதைவிட, உரலில் தட்டி எடுப்பது சிறந்தது. காரணம், மிளகில் உள்ள பைபரின் மற்றும் பூண்டில் உள்ள அலிசின் போன்ற மருத்துவ குணங்கள் இந்த முறையில்தான் முழுமையாக வெளிப்படும். இந்த கலவைதான் ரசத்திற்கு சுவையும், மருத்துவ சக்தியையும் கொடுக்கிறது.
இப்போது புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், தக்காளி, மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். புளியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தக்காளியும் இதற்கு உதவும். இந்த கரைசல் ரசத்தின் அடிப்படையாக அமையும்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பெருங்காயம் சேர்க்கும்போது, அது ரசத்திற்கு ஒரு நல்ல நறுமணத்தை கொடுப்பதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்தும்.
தாளித்த பின், அடுப்பின் தீயைக் குறைத்து, நாம் தயார் செய்து வைத்திருந்த புளி-தக்காளி கரைசலை ஊற்ற வேண்டும். அதனுடன் நசுக்கி வைத்திருந்த மிளகு-சீரக கலவையை சேர்க்க வேண்டும். இப்போது ரசம் கொதிக்க ஆரம்பிக்கும். ரசம் கொதிக்கும்போது அதிக நேரம் அதை கொதிக்க வைக்கக்கூடாது. நுரைத்து, ஒரு நல்ல வாசனை வரும்போது அடுப்பை Off செய்து விடுவது முக்கியம்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை ரசத்தின் மீது தூவி இறக்க வேண்டும். இந்த மிளகு ரசத்தை சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூப்பாகவும் அருந்தலாம். ஜலதோஷம், சளி காலத்தில் இந்த ரசம் கொடுக்கும் இதமான உணர்வு நமக்கு அப்படி இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.