மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பிறகு அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள மணமணக்கும் மட்டன் சுக்கா தான். காரசாரமான மசாலாக்களுடன், மிருதுவான ஆட்டுக்கறி வெந்து வரும் அந்த மணம் தெருவையே தூக்கும்.
இந்த மதுரை ஸ்டைல் மட்டன் சுக்காவை வீட்டிலேயே செய்ய வேண்டுமென்றால், கடையிலிருந்து வாங்கும் மசாலாக்களைத் தவிர்த்துவிட்டு, கைப்பட வறுத்து அரைக்கும் மசாலாக்களைப் பயன்படுத்த வேண்டும்.
முதலில் அரை கிலோ மட்டனைச் சுத்தம் செய்து, அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ள வேண்டும். மட்டன் பூப்போல வெந்திருப்பதுதான் இந்த உணவின் முதல் ரகசியம்.
ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, வரமல்லி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கனமான இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு மற்றும் அதிகப்படியான சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் எந்தளவுக்கு வதங்குகிறதோ அந்தளவுக்குச் சுவை கூடும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து, வேகவைத்த மட்டனைத் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தண்ணீர் சுண்டி வரும்போது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைத் தூவி, மிதமான தீயில் பிரட்டி எடுக்க வேண்டும்.
கடைசியாக மட்டன் துண்டுகள் கறுப்பு நிறத்திற்கு மாறி, மசாலாக்கள் கறியோடு ஒன்றி வரும்போது பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். இந்தச் சுக்காவிற்கு இரும்புச் சட்டி மற்றும் நல்லெண்ணெய் பயன்படுத்துவதுதான் அந்த அசல் மதுரை ருசியைத் தரும். இதனைச் சூடான சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது அதன் ருசி அலாதியாக இருக்கும்.
மட்டன் சுக்காவில் அதிகப்படியான மிளகு சேர்ப்பது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவும். உங்கள் வீட்டு விசேஷங்களில் இந்த முறையைப் பின்பற்றிச் செய்து பாருங்கள், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.