இந்தியாவின் பிரபல சமையல் பாத்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. டைகர் ஒயிட் (Tiger White) என்ற பிராண்ட் பெயரில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடாய் மற்றும் கராய் போன்ற சமையல் பாத்திரங்களில், அளவுக்கு அதிகமாக காரீய நச்சு (lead poisoning) கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எச்சரிக்கையின் பின்னணி:
கடந்த ஆகஸ்ட் 13, 2025 அன்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெளியிட்ட அறிக்கையில், சரசாவதி ஸ்ட்ரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Saraswati Strips Pvt. Ltd.) என்ற இந்திய நிறுவனம் தயாரிக்கும் பியூர் அலுமினியம் யுடென்சில்ஸ் (Pure Aluminium Utensils) என்ற பிராண்ட் பெயரில் தயாரிக்கப்பட்ட சில பாத்திரங்களில் காரீய நச்சுத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அலுமினியம், பித்தளை மற்றும் கலப்பு உலோகங்களால் செய்யப்பட்ட இந்த பாத்திரங்களில், காரீயத்தின் அளவு அபாயகரமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவு சமைக்கப்படும்போது, இந்த உலோகங்களிலிருந்து காரீய நச்சு உணவுடன் கலக்க வாய்ப்புள்ளது என்று FDA தெரிவித்துள்ளது.
அபாயகரமான காரீய நச்சு
FDA அறிக்கையின்படி, உடலுக்குப் பாதுகாப்பான அளவு காரீய நச்சு என்பது எதுவும் இல்லை. எந்த அளவிலும் காரீய நச்சு உடலுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது.
குழந்தைகளுக்கான ஆபத்து: காரீய நச்சு, குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலம் மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றைப் பெரிய அளவில் பாதிக்கும். இது அவர்களின் கற்கும் திறனைக் குறைப்பதுடன், நடத்தை சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
பெரியவர்களுக்கு, காரீய நச்சு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
FDAயின் அறிவுரைகள்:
FDA, அமெரிக்காவில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு உடனடியாக இந்த பாத்திரங்களை விற்பதை நிறுத்தவும், பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பாத்திரங்களை வாங்கியவர்கள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, தங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.