பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் இன்று நடுத்தர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) நோக்கித் திரும்பத் தொடங்கிவிட்டனர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் இவி வாகனங்கள் ஒரு சிறந்த தீர்வாகத் தெரிகின்றன. ஒரு பெட்ரோல் காரை ஓட்டுவதற்கு ஆகும் செலவை விட, எலக்ட்ரிக் காரைச் சார்ஜ் செய்து ஓட்டுவதற்கு ஆகும் செலவு மிக மிகக் குறைவு. உதாரணத்திற்கு, ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு பெட்ரோல் காரில் 7 முதல் 10 ரூபாய் வரை செலவாகும் என்றால், எலக்ட்ரிக் காரில் அது வெறும் 1 அல்லது 2 ரூபாய்க்குள்ளேயே முடிந்துவிடும். இது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் ஒரு பெரிய சேமிப்பாகும். மேலும், எலக்ட்ரிக் கார்களில் இன்ஜின் கிடையாது என்பதால், ஆயில் மாற்றுவது போன்ற பராமரிப்புச் செலவுகளும் (Maintenance) மிகவும் குறைவு.
இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் சில நடைமுறைச் சவால்கள் இன்றும் இருக்கின்றன. முதலாவதாக, ஒரு பெட்ரோல் காரின் விலையை விட எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Initial Cost) மிக அதிகம். இதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்படும் 'லித்தியம் அயன்' (Lithium-ion) பேட்டரிகளின் விலை தான். அரசாங்கம் மானியம் வழங்கினாலும், இன்னும் பலருக்கு இது எட்டாக்கனியாகவே உள்ளது. இரண்டாவதாக, 'ரேஞ்ச்' (Range) எனப்படும் ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் ஓடும் என்ற பயம் மக்களிடம் உள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும்போது இடையில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை பலருக்கு இருக்கிறது. பெட்ரோல் பங்குகளைப் போலச் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்னும் மூலை முடுக்கெல்லாம் வரவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
மூன்றாவதாக, ஒரு காரைச் சார்ஜ் செய்ய ஆகும் நேரம். பெட்ரோல் போடுவதற்கு ஐந்து நிமிடங்கள் போதும், ஆனால் எலக்ட்ரிக் காரைச் சார்ஜ் செய்யக் குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும் (Fast Charging வசதி இருந்தால் மட்டுமே). வீட்டில் சார்ஜ் போட்டால் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும். மேலும், பேட்டரிகளின் ஆயுட்காலம் சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் தான். அதன் பிறகு பேட்டரியை மாற்ற வேண்டியிருந்தால், அது காரின் விலையில் பாதியளவு செலவை வைக்கும். அதேபோல், பழைய பேட்டரிகளை அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழலுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் வளர வளர இந்தச் சவால்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலம் என்பது நிச்சயம் எலக்ட்ரிக் வாகனங்களுடையது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.