லைஃப்ஸ்டைல்

திருமணம் ஒரு "பிசினஸா?' தமிழகத்தில் தொடரும் விவாகரத்துகள்... உளவியல் ரீதியான உண்மைகள் Exclusive!

பெரிய இடத்து வீடு என்று பெண் வீட்டாரும் பெண்ணிற்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று பெற்றோரும் கேட்க தவறவிட்டு விடுகின்றனர்..

மாலை முரசு செய்தி குழு

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது வழக்கத்தை விடவும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து பெற்று வருகின்றனர். முக்கியமாக, இந்தியாவில் இது படிப்படியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து, மனோதத்துவ மருத்துவர், லட்சுமி பாய் அவர்களிடம் இதுகுறித்து பேசப்பட்டது.

இந்தியாவில், விவாகரத்து மற்றும் திருமணத்தை மீறிய உறவு அதிகரிக்க காரணமாக அமைவது ஏன்? என்ற கேள்விக்கு, சமுதாயம் கலாச்சார சீர்குலைவை நோக்கி செல்வதே முக்கிய காரணமாகும். முன்பு திருமணத்தை மீறிய உறவு மற்றும் சாதாரணமான போக்கில் ஏற்படும் உடலுறவு என்பது பெரிதாக பார்க்கப்பட்ட ஒன்று, இப்போது அப்படி இல்லை. குறிப்பாக, காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளும் முறையும் இன்றைய காலத்தில் குறைந்த வண்ணமே இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே காதல் தோல்வியில் இருந்து மீண்டுவரும் காலங்கள் என்பது குறைத்துவிட்டது. ஒரு காதல் இல்லையெனில் இன்னொரு காதல் என்று அடுத்தடுத்து சென்றுகொண்டிருக்கின்றனர். தற்காலிக இன்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கண்ணியமான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. இதனால் இருதரப்பினர்க்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. மேலும், விரைவில் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தத்தின் காரணமும் இதில் அடங்குகிறது.

திருமணம் என்பது பொதுவாகவே, வரதட்சணை, குழந்தை பாக்கியம் போன்ற காரணங்களுக்காகவும், சமுதாயத்தின் அழுத்தத்தின் காரணமாகவும் செய்துவைக்கப்படுகிறது. அதன் பின்புதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. திருமணத்திற்கு பின்பு வரும் சண்டை, ஒருவரின் சுதந்திரத்தில் மற்றொருவர் தலையிடுவது போன்ற காரணங்களால் பிரச்சனை தலையெடுக்க துவங்குகிறது. குறிப்பாக பெண்கள், தற்போது அவர்களும் தனிமனித சுதந்திரத்தை விரும்புகின்றனர். பெண்கள் பல காலங்களாக அடக்கப்பட்டது, கணவன் குடும்பத்தில் பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அது அவர்களுக்கு நடக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெண்கள் தற்போதைய சூழலில் வேலைக்கு சென்று பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கின்றனர். இதனை புரிந்துகொண்டு அப்பெண்ணின் கணவரும், அவரது குடும்பமும் நடக்கும் பட்சத்தில் அக்குடும்பம் சுமூகமாக செல்கிறது.

திருமணம் ஒரு 'பிசினெஸ்' போன்றே சமூகத்தில் பார்க்கப்படுகிறது. அதாவது, வரதட்சணை. பையன் இவ்வளவு படித்துள்ளார், இந்த வேலையில் உள்ளார், இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறி பெண்வீட்டாரிடம் அதிக வரதட்சணையும் கேட்கின்றனர். பெரிய இடத்து வீடு என்று பெண் வீட்டாரும் பெண்ணிற்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று பெற்றோரும் கேட்க தவறவிட்டுவிடுகின்றனர். இதுதான்

திருமண வாழ்வில் தனியுரிமை என்பது மிகவும் கேள்விக்குறியாக்குவதில் முதல் படியாக உள்ளது. தற்போது திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், இவருடைய பழைய காதல் வாழ்க்கையை பற்றியும் கேட்டுத்தெரிந்துகொள்வதில் ஆர்வம்காட்டுகின்றனர். இதுவும் பிற்காலத்தில் பிரச்சனையை வளர்க்க வித்திடுகிறது. அதுமட்டுமின்றி தொலைபேசியை நோட்டமிடுவது போன்ற காரணங்களால், சந்தேகம் வந்து அது பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதற்கு ஒரு மிக முக்கிய காரணமாக அமைவது, காட்சி ஊடகம். தற்போது வரும் படங்கள், சீரிஸ், ரீல்ஸ் போன்றவை, வாழ்க்கைக்கு தேவையற்ற, அர்த்தமற்ற விஷயங்களையே தருகின்றன. படங்களிலும் சரி ரீல்ஸ்களிலும் சரி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தும் 'ஜோக்ஸ்', மனைவியை பற்றி தேவையில்லாத கமெண்ட்களை செய்வது, அதேபோல் கணவனை பற்றி தேவையில்லாத கமெண்ட்களை செய்வது இதைத்தான் காட்டுகின்றன. இதில் கணவன் மனைவிக்கான மரியாதையை குடும்பவாழ்வில் பெரும் கேள்விக்குறியாகிறது.

அட்ஜெஸ்ட்மென்ட்: திருமண வாழ்க்கை என்று வரும்போது பெண்களை 'அட்ஜெஸ்ட்' செய்துகொள்ள சொல்வது என்பது நிறைய பெற்றோர்கள் கூறவே நாம் கேட்டிருப்போம். என்ன நடந்தாலும் மாமியார் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு தாய் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியே பெண்களை திருமணம் செய்து அனுப்பிவைப்பார். இதனால் பெண்களின் தனிநபர் சுதந்திரம் பெற்றோர்களால் பறிக்கப்பட்டுவிடுகிறது. மேலும் மருத்துவர், ஒரு நிகழ்வையும் உதாரணத்திற்கு பகிர்ந்திருந்தார். அதில், நல்ல குடும்பம் என்று பெண்ணை திருமணம் செய்து வைத்த ஒரு குடும்பம், பெண்ணை அடுத்தடுத்து கவனிக்க தவறிவிட்டனர். மீண்டும் ஒரு வருடம் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் தங்களது பெண்ணை பார்க்க நேரிட்டபோது, பெண் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். அப்பெண்ணின் கணவர் ஆபாசப்படங்களை பார்த்து அப்பெண்ணை நீண்ட காலமாக கொடுமை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் பின்பே அப்பெண்ணின் பெற்றோர், சட்டபூர்வமான நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஆனால் தெரியவந்து என்ன பயன்?.

பெண்களும் படித்து முன்னேறி வருவதாலும், யாரையும், எதற்கும் சார்ந்திருக்கும் வாழ்வை அவர்கள் தொடர விருப்புவதாலும், அவர்களுக்கு வேண்டியதை அவர்களே செய்துகொள்ளவதாலும் கணவனிடம் மரியாதையை எதிர்பார்க்கின்றனர். இதனை சரியாக சில பெண்கள் செய்து வந்தாலும், சில இடங்களில் இதை வைத்து ஆண்கள் வதைக்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது.

பேசுவது நல்லது: இதுவிடவும் பெரிதாக இன்றைய காலக்கட்டத்தில் இருப்பது, இருவருக்கும் இடையில் பேச்சுவார்தையே இல்லாமல் இருப்பது (communication gap). சிறிய தவறு செய்தாலும் அதற்காக தனது கணவரிடமோ அல்லது மனைவிடமோ மன்னிப்பு கேட்பது, நன்றி கூறுவது, பாராட்டுவது போன்ற காரணங்களாலும் மனக்கசப்புகள் ஏற்பட்டு விவாகரத்துகள் ஏற்படுகிறது. மேலும், விவாகரத்து குறித்த இந்த இளைய சமுதாயத்தின் முடிவும் மிக வேகமாக இருக்கிறது. சின்ன சின்ன காரணங்களுக்காகவும் உடனடியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிடுகின்றனர்.

திருமணம் மிகவும் புனிதப்படுத்தப்பட்டதன் விளைவாக முன்பு என்ன நடந்தாலும் சேர்ந்து வாழவேண்டும் என்ற நிலை இருந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை. திருமணம் புனிதமானது என்று கருதியதால் கணவன் அடித்தாலும் உடன் வாழவேண்டிய சூழல் பெண்களுக்கு ஏற்பட்டது. ஆனால் 'திருமணம் ஒரு புனிதமான விஷயம் அல்ல' என்ற நிலை உடைத்து எறியப்பட்ட பின்பு குடும்ப வன்முறையை விட்டு பல பெண்கள் தைரியமாக வெளியேறுகின்றனர். ஆனால் இதை தவறாக பயன்படுத்தும் நிலையும் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. இன்றைய சூழலில் சாதாரணமாக உறவுமுறைகளை எடுத்துக்கொள்ளுதல்(casual relationship), குறிப்பாக இந்த 'பாப் கல்ச்சர்' போன்றவை காரணமாக உறவுகளின் மதிப்பு தெரியாமல் போகிறது. இது மட்டுமின்றி ஆண்கள் மற்றும் பெண்களிடையே நிலவிவரும் போதை மற்றும் மது அருந்தும் போக்கு போன்றவற்றாலும் திருமணத்தை மிகவும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், வேலையின்மையும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால்தான் மரியாதையை கிடைக்கும், திருமண வாழ்வில் ஒரு அமைதி நிலைக்கும் என்ற நிலையும் உருவாகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திருமணம் ஒரு வணிகம் போன்று நடக்கிறது.

தீர்ப்பதற்கான வழி: பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் நடந்துகொள்ளவேண்டும். வளரிளம் பருவத்தை அடையும் போது இன்னும் கூடுதல் கவனம் எடுக்குகொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு என்று கூடுதலாக நேரத்தை ஒதுக்கவேண்டும். கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் அதிக நேரம் செலவிடுவது, சின்ன சின்ன பாராட்டுகளை பகிர்வது, இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளவது போன்றவற்றை செய்வது குடும்ப வாழ்வை பலப்படுத்துவதில் முக்கியமான ஒன்று. மேலும், இன்றைய காலகட்டத்தில் மனநிலையை அதிகம் கருத்தில் கொள்ளவது மிகவும் முக்கியம். தங்களது துணையின் மனநலையில் தனி அக்கறை காட்டுவது என்பது நல்லது. திருமணத்திற்கு பிறகான பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தை எப்படி குறைப்பது? என்ற விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். சமூகவலைத்தளத்தில் ஆபாச வீடியோக்களுக்கான கட்டுப்பாடு என்பது தேவை என்று மருத்துவர் மிகவும் விரிவாக பகிர்ந்திருந்தார்.

"பேசினால் தீராத பிரச்சனை இல்லை" பேசுங்கள். முக்கியமாக மனநிலையை சமநிலையோடு பேணுங்கள் இது உங்கள் திருமண வாழ்வை மேலும் வலுப்படுத்தும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்