20 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பணியாற்றிய ஒருவர், திடீரென தனது தொழிலை விட்டு வேறு துறைக்கு சென்றால் அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அதிலும் மருத்துவர் போன்ற சமூகத்தில் மதிக்கப்படும் பணியை விட்டுவிட்டு உணவுக் கடை நடத்தத் தொடங்கிய முடிவு குடும்பத்தினருக்கே முதலில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆனால், அந்த முடிவுக்குப் பிறகு தான் தனது வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்ததாக கூறுகிறார் சீனாவைச் சேர்ந்த டோங் மின்.
48 வயதான டோங் மின், மருத்துவத் துறையில் சுமார் இரண்டு தசாப்தங்கள் பணியாற்றியவர். 1999-ம் ஆண்டு வுஹான் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மருத்துவப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் சீனாவின் ஷென்சென் நகரில் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவத்தில் பணியாற்றினார். மருத்துவப் பணியில் நீண்ட கால அனுபவம் பெற்றிருந்தாலும், காலப்போக்கில் அந்த வேலையின் அழுத்தம் அவரை பாதிக்கத் தொடங்கியது.
பின்னர் தனது சொந்த ஊரான வுஹானுக்குத் திரும்பிய அவர், தனது தாயார் நடத்தி வந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தில் உதவத் தொடங்கினார். தாயார் ஓய்வு பெற்ற பிறகு, தியான்மென் பகுதியில் உள்ள ஒரு சிறிய சமூக மருத்துவமனையை அவர் நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அங்கு மருத்துவராக மட்டுமல்லாமல், மருத்துவமனையின் சட்டப்பூர்வ பிரதிநிதியாகவும் செயல்பட்டார்.
மருத்துவராக இருப்பது என்பது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அப்போது அவர் உணர்ந்தார். மருத்துவமனையின் நிர்வாகப் பணிகள், அதிகாரிகளின் ஆய்வுகள், நோயாளிகளுடன் ஏற்படும் பிரச்சினைகள் என பல்வேறு பொறுப்புகளும் அவரது மீது இருந்தன. மருத்துவம் தொடர்பான முடிவுகளை எடுப்பதுடன், நிர்வாக ரீதியான சிக்கல்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக மருத்துவமனைக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் ஏற்பட்டால், சட்டப்பூர்வ பொறுப்பு தன்னிடமே இருப்பதாக டோங் மின் கூறியுள்ளார். இதனால் மருத்துவர் பணியில் இருந்தபோது தனக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில், இந்த வாழ்க்கை முறையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி அவருக்கு தோன்றியதாகவும் கூறியுள்ளார்.
அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது ஒரு நண்பரின் குடும்பம் நடத்தி வந்த உணவுக் கடை. அந்தக் கடையின் செயல்பாடுகளை பார்த்த டோங் மின், உணவுத் தொழிலில் முதலீடு செய்ய முடிவு செய்தார். குறிப்பாக சீனாவில் பிரபலமான வேகவைத்த பன் எனப்படும் ‘பாவ்’ வகை உணவுகளை விற்பனை செய்யும் கடையில் முதலீடு செய்தார்.
ஆரம்பத்தில் அவர் நேரடியாக சமையல் செய்யும் பணியில் இறங்க வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடையின் தலைமை சமையல்காரர் திடீரென வேலையை விட்டு வெளியேறியபோது நிலைமை மாறியது. வேறு வழியின்றி டோங் மின் தானே பன் தயாரிக்கும் பணியை கற்றுக்கொண்டு செய்யத் தொடங்கினார்.
அந்த வேலை அவருக்கு எதிர்பாராத விதமாக பிடித்துப்போனது. மருத்துவமனையில் இருந்தபோது சந்தித்த மன அழுத்தத்துக்கு மாறாக, உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணியில் ஒரு விதமான திருப்தியை அவர் உணரத் தொடங்கினார். கடையை நடத்துவது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தினாலும், மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டோங் மின் தனது மருத்துவப் பணியை விட்டு உணவுக் கடை நடத்தும் முடிவை எடுத்தபோது குடும்பத்தினர் முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவர் என்பது சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்ட தொழில் என்பதால், அதை விட்டுவிட்டு உணவுத் தொழிலில் இறங்குவதை குடும்பத்தினர் எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் காலப்போக்கில் அவரது முடிவை அவர்கள் புரிந்துகொண்டு ஆதரிக்கத் தொடங்கினர்.
அவரது கடையும் தொடர்ந்து வளர்ச்சி கண்டது. வாடிக்கையாளர்களின் வரவேற்பு அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் இரண்டாவது கிளையையும் தொடங்கியுள்ளார். மருத்துவத் துறையில் பெற்ற அனுபவம் அவரை வேறு துறைக்கு அழைத்துச் சென்றிருந்தாலும், புதிய தொழிலில் கிடைத்த மகிழ்ச்சி தனது வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
டோங் மின் வாழும் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் அவரது புதிய வாழ்க்கைப் பயணம் உருவாகியுள்ளது. ஒருகாலத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அவர், இன்று அதே உழைப்புடன் உணவுக் கடையை நடத்தி வருகிறார்.
“வாழ்க்கையில் மாற்றம் செய்வதற்கு குறிப்பிட்ட வயது என்று எதுவும் இல்லை” என்பதே அவரது அனுபவம் சொல்லும் முக்கிய கருத்தாக உள்ளது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தற்போது இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உடல் இயங்கும் வரை தனது பன் கடையை நடத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
ஒரு தொழிலில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டால் அதிலிருந்து விலகுவது தோல்வி என்று அர்த்தமல்ல என்பதை டோங் மின்னின் வாழ்க்கை காட்டுகிறது. சில நேரங்களில் நீண்ட காலமாக பழகிய பாதையை விட்டு விலகி, நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் வேறு பாதையை தேர்வு செய்வதும் வாழ்க்கையின் ஒரு முக்கிய முடிவாக இருக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்