லைஃப்ஸ்டைல்

"Plastic Eating” டயட்.. ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் புதிய ட்ரெண்ட்!

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க சீனாவில் இளைஞர்கள் வாயில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து...

மாலை முரசு செய்தி குழு

இன்றைய சமூக வலைதள உலகில், புதிய டயட் ட்ரெண்ட்கள் ஒவ்வொரு நாளும் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. சில ட்ரெண்ட்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவினாலும், சில நடைமுறைகள் ஆபத்தான மற்றும் பொய் நம்பிக்கைகளை பரப்புகின்றன. அவற்றில் ஒன்றாக சமீபத்தில் பேசப்படும் “Plastic Eating” என்ற நடைமுறை சீனாவில் வைரலாகி வருகிறது. "Plastic Eating" என்பது சீனாவில் உடல் எடையை குறைப்பதற்காக இளைஞர்களிடையே பரவி வரும் ஒரு ஆபத்தான ட்ரெண்ட். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க சீனாவில் இளைஞர்கள் வாயில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து, அதில் உணவை வைத்து மென்றுவிட்டு பிளாஸ்டிக்கை விழுங்காமல் துப்பி விடுகின்றனராம்.

பிளாஸ்டிக் பொருட்களை மெல்லுவதன் மூலம் பசி உணர்வு குறையும், மூளைக்கு உணவு உண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்தி, உணவை தவிர்த்து உடல் எடையை குறைக்க இது உதவுகிறது என அவர்கள் நம்புகின்றனர். நாம் தினசரி உணவை குறைத்து, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்றும் சீனர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், Diet-க்கு இம்முறை பலன் தராது என்றும், நுண்ணிய ப்ளாஸ்டிக் துகள்கள் வயிற்றுக்குள் சென்று, செரிமானம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை.

பசி குறைய பிளாஸ்டிக் பொருட்களை வாயில் வைத்து மெல்லுவதன் மூலம் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை ஒரு அறிவியல் ஆதாரம் இல்லாத தவறான கருத்தாகும். இது ஒரு டயட் முறையாக அல்ல, மாறாக உடல்நலத்திற்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும் எனவும் எச்சரிக்கின்றனர். மனித உடல் ஜீரணிக்க இயலாத ஒரு பொருளை வாயில் வைத்து மெல்லுவது, உடலுக்கு எந்த நன்மையையும் தராது. மாறாக அது பல்வேறு உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

பிளாஸ்டிக் பொருட்களை மெல்லும்போது, அவை சிறிய துகள்களாக (microplastics) உடைந்து உடலுக்குள் செல்லும் வாய்ப்புள்ளது. இத்தகைய துகள்கள் குடல் சுவர்களை பாதிக்கலாம். சில ஆய்வுகள், மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன. இதை தொடரும் பட்சத்தில் இது வயிற்று கோளாறு, உடல் அழற்சி (inflammation), மற்றும் பிற உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.

வாயில் பிளாஸ்டிக் வைத்து மெல்லும் போது அது தவறுதலாக மூச்சுக் குழாயில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. குறிப்பாக சிறிய துண்டுகள் எதிர்பாராத விதமாக தொண்டையை அடைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் ஊட்டச்சத்து நிபுணர்கள், சரிவர உணவு உட்கொள்ளாத நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் Eating Disorders ஏற்படும் எனவும் எச்சரிக்கிறார்கள். பசியை செயற்கையாக அடக்க முயல்வது, தவறான உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கும் எனவும் இது தொடரும் பட்சத்தில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும் எனவும் விளக்குகிறார்கள்.

உடல் எடை குறைப்பு என்பது கலோரிகள், உணவு தரம், உடற்பயிற்சி, மனநிலை போன்ற பல அம்சங்களின் சமநிலையால் மட்டுமே சாத்தியம். பிளாஸ்டிக் மெல்லுவதால் உடல் எடை குறையும் என்ற எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மாறாக, மனித உடல் ஜீரணிக்க முடியாத பொருளை உடலுக்குள் அனுமதிப்பது தேவையற்ற ஆபத்தையே ஏற்படுத்தும்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சுற்றுச்சூழலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க “Mealworms” போன்ற சில புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக்கைக் கரைக்கும் நுண்ணுயிரிகளை உடலில் கொண்டுள்ளன. இயற்கையே சிரமப்பட்டு மக்கச் செய்யும் ஒரு பொருளை, மனித உடல் ஏற்றுக்கொள்ளும் என்பது முற்றிலும் தவறான புரிதலாகும். மேலும் உடலெடையை குறைக்க சீரான மற்றும் சமநிலையான உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் அருந்தும் அளவை அதிகரிக்க வேண்டும். மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரவும் ஒவ்வொரு ட்ரெண்டும் நம் உடலுக்கு ஏற்றது அல்ல. “Plastic Eating” போன்ற நடைமுறைகள், உடல் எடையை குறைப்பதற்கான வழி அல்ல. மாறாக அது உடல்நலத்திற்கும் உயிருக்கும் ஆபத்தான முயற்சியாக மாறக்கூடும். ஆரோக்கியம் என்பது குறுக்கு வழிகளால் கிடைக்காது. சரியான உணவு தேர்வுகளாலும், மருத்துவ முறையாலும் மட்டுமே கிடைக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.