லைஃப்ஸ்டைல்

தொடரும் "ரிவென்ஜ் பெட்-டைம் ப்ரோகஸ்டினேஷன்" பழக்கம்!இதய நோய்க்கு வழிவகுக்குமா..?

சமூக ஊடகங்களில் அதிக நேரம் ஸ்க்ரோல் செய்வது போன்ற செயல்பாட்டினால் கண்களுக்கு கூடுதல் வேலை அல்லது சோர்வை ஏற்படுத்தும்..

மாலை முரசு செய்தி குழு

இன்றைய காலத்தில் பலரும் தங்களது அலுவலக வேலையை முடித்து விட்டு வருதல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லுதல் போன்ற காரணங்களினால் தங்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போவதாக கவலை கொள்கின்றனர். ஆனால் அது எவ்வாறு இருக்கிறது என்றால், தங்களது இரவு நேர தூக்கத்தை விடுத்து இன்னும் ஒரு 'ரீலிஸ்', இன்னும் ஒரு 'எபிசொட்' என்று நீண்டு கொண்டே செல்கிறது. இதைத்தான் அவர்கள் தங்களுக்கான நேரம் என்று கூறுகிறார்கள்.

இந்த வழியில், தூங்கும் நேரத்தை தள்ளிப்போடுவது, பகல் நேரங்களில் குறைவான அல்லது ஓய்வு நேரமே இல்லாமல் போவதால் இது ஒரு 'பழிவாங்குதல்' போக்காக பார்க்கப்படுகிறது. மேலும் இது 'Revenge bed-time procrastination' என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் 2014 ஆம் ஆண்டு 'உட்ரெக்ட்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். ஃப்ளோர் குரோஸ் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த வார்த்தை சீனா மொழியில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் சில நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் 996 வேலை நேர முறையின் காரணமாக இருக்கலாம் என்றும், அங்கு ஊழியர்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள், வாரத்திற்கு மொத்தம் 72 மணிநேரம் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதாவது அவர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனாலும் மக்கள் தங்களது பணிகளை முடித்துவிட்டு, இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருவதாக கூறுகின்றனர். அவர்கள், அந்த நேரத்தில், ரீலிஸ் பார்ப்பது, மீதமிருக்கும் எபிசோடுகளை முடிப்பது போன்றவற்றிற்காக செலவிடுகின்றனர். பகலில் ஓய்வு நேரம் இல்லாததால், இரவில் தூக்கத்தை தாமதப்படுத்துவது என்பது 'பழிவாங்கும்' செயலாக மாறுகிறது. சோர்வாக உணர்ந்தாலும், உடலுக்கு தூக்கம் தேவைப்பட்டாலும், தாமதமாக, விழித்திருந்து தங்களுக்கென்று சிறிது ஓய்வு நேரத்தை ஒதுக்குவது, இரவு ஓய்வு நேரத்தை பழிவாங்கும் ஒரு வழியாக மாறுகிறது என்று மின்ஹோ பல்கலைக்கழகம் மற்றும் சிலி மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தாக்கம்: மக்கள் தங்களது வேலைப்பளு நிறைந்த பகல் நேரத்திலிருந்து, இரவில் சிறிது நேரம் விடுபட நினைக்கின்றனர். அதாவது அந்த அச்சமயத்தில் அவர்கள் சுதந்திரமாக உணர்கின்றனர். அதனால் அந்த இரவு நேரத்தில் அவர்கள் ரீலிஸ், சீரிஸ் போன்றவற்றை பார்க்கின்றனர். இதனால் அவர்களுக்கு நாள்பட்ட தூக்கமின்மை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்களுக்கு எரிச்சல், முடிவெடுப்பதில் மந்தநிலை, சிந்தனை மற்றும் நினைவாற்றல் குறைபாடு, உந்துவிசை கட்டுப்பாடு குறைதல், வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் மற்றும் இருதய பிரச்சினைகள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விளைவுகள் அல்ல என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சமாளிப்பது எப்படி..? பழிவாங்கும் தூக்க நேரத்தை தள்ளிப்போடுவதை எப்படி சமாளிப்பது? குறித்து பார்க்கலாம், அதாவது காலை எழுந்திரிப்பதற்கு அலாரம் வைப்பது போன்று தூங்க செல்வதற்கும் அலாரம் வைப்பது நல்லது. மேலும், உங்கள் உடலுக்கு எளிதில் செரிமானமாகும் உணவுகளை இரவில் உண்பது நல்லது. இதனால் இரவு நேரங்களில் உங்கள் செரிமாணத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அதுமட்டுமின்றி வீடியோக்களைப் பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் அதிக நேரம் ஸ்க்ரோல் செய்வது போன்ற செயல்பாட்டினால் கண்களுக்கு கூடுதல் வேலை அல்லது சோர்வை ஏற்படுத்தும் செயல்களுக்குப் பதிலாக, படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் உடலையும் மனதையும் 'ரிலாக்ஸ்' செய்ய முயற்சிக்கலாம். அதாவது, தியானம் மற்றும் ஜர்னலிங் ஆகியவை உங்களின் மனநிறைவைப் பயிற்சி செய்வதற்கும் ஒரு சிறந்த செயல்பாடு ஆகும். இதனால் நீங்கள் அமைதியாகவும், இரவில் நல்ல தூக்கத்திற்கும் உந்தப்படுவீர்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் தூங்குவதற்கு முன்பு செல்போன் பயன்பாட்டிற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த புத்தகத்தின் சில பக்கங்களை கூட படிக்கலாம்.

இதுபோன்ற சின்ன சின்ன முயற்சிகள் மற்றும் பயிற்சிகளால் உங்கள் தூக்கத்தை சரியான நேரத்திற்கு கொண்டுவர முடியும். இதனால் உங்கள் மனநிலையை சமன்செய்ய செய்வதோடு உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தையும் சரியாக வைத்திருக்க உதவும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.