

பொதுவாகவே இரவில் சிலருக்கு வெளிச்சம் இருந்தால் மட்டுமே உறக்கம் வரும் என்பர். அதே போல் செல்போன் பார்த்தால் தூங்கவிடுவேன் என்று சிலர் கூற நாம் கேட்டிருப்போம். ஆனால் அவ்வாறு இரவில் உறங்குவது என்பது உடலில் பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆழ்ந்த உறக்கம்: இரவு நேர உறக்கம் என்பது மூளை மற்றும் ஹார்மோன்களை சீராக வைக்கும் ஒரு இயற்கை வழி மருந்தாகும். இரவு உறக்கத்தின் மூலம் உடல் தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது. அதுமட்டுமின்றி திசுக்களின் வளர்ச்சி, மூளையின் நச்சு நீக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் போன்ற பணிகள் அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் சரிவர நடக்கின்றன. அந்த வகையில், இரவில் விளக்குகளை அணைக்காமல் தூங்குவதாலும் மற்றும் செல்போன் பார்த்துக்கொண்டு தூங்குவதாலும் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சரியான உறக்கமின்மை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். மேலும் நீண்ட கால தூக்கமின்மை என்பது உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகை செய்துவிடுகிறது.
வெளிச்சத்தால் பாதிக்கும் தூக்கம்: தூங்கும் போது விளக்கை அணைக்காமல் தூங்குவது என்பது, தூக்கத்தை தூண்டும் 'மெலடோனின்' (Melatonin) என்ற ஹார்மோன் சுரப்பதை தடைசெய்கிறது. இதனால் உங்கள் உடல் உறங்கினாலும் மூளை விழிப்பு நிலையிலேயேதான் இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் உடல் சோர்வு, கவனக்குறைவு ஏற்பட்ட வண்ணமே இருக்கும். அதே போல் சிலர் சிறிய அளவிலான அலை கொண்ட விளக்கு வெளிச்சத்தில் உறங்குவது உண்டு. குறிப்பாக சிலர் வீடுகளில் நீலநிற விளக்குகளை பயன்படுத்துவர். அதுமட்டுமின்றி நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்டாப், மற்றும் பிறவற்றில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நீல நிற ஒளி, சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை மூளையில் ஏற்படுத்துகிறது. இந்த வெளிப்பாட்டின் காரணமாக மூளை இரவை, பகல் என்று எண்ணி குழம்பி தூக்கத்தைத் தள்ளிவைக்கிறது.
மேலும், இரவில் அதிக நேர டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக புற்றுநோய், ஹார்மோன் சமநிலை மாறுதல் போன்ற தீவிர நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நீல நிற ஒளி மற்றும் பச்சை நிற ஒளியில் சிலரை நிற்க வைத்துள்ளனர். சில மணிநேரம் கழித்து அவர்கள் மேல் சோதனை நடத்தப்பட்டது. நீல நிற ஒளி, பச்சை நிற ஒளியை விட 2 மடங்கு அதிக நேரம் மெலடோனினை செயல்பாட்டை கட்டுப்படுத்தியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்காத்துக் கொள்வது நல்லது: உறங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஸ்கிரீன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது. அதற்கு பதிலாக மெல்லிய இசைக் கேட்பது, புத்தகம் வாசிப்பது போன்றவற்றை முயற்சிக்கலாம். இரவில் டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்து, எளிதில் செரிமாணமாகும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிச்சம் அறைக்குள் புகாமல் இருக்க தடிமனான ஜன்னல் திரைகளை உபயோகப்படுத்துவது நல்லது. முக்கியமாக, நீலநிற விளக்குகளை தவிர்த்து, குறைந்த அலைகளை உடைய சிவப்பு அல்லது ஆரஞ்சு விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை உறுதிபடுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகை செய்யுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.