Alpine Divorce Alpine Divorce
லைஃப்ஸ்டைல்

"ஆல்பைன் டைவர்ஸ்".. மலை ஏறும் போது துணையை தவிக்க விட்டுச் செல்லும் ஆண்கள்! சமூக வலைதளங்களில் 'சைக்கோ' கலாச்சாரம்!

தங்களை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற கணவனோ அல்லது காதலனோ, ஆபத்தான சூழலில் தங்களைத் தனியாக விட்டுவிட்டுச் சென்ற கதைகளைப் பெண்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மாலை முரசு செய்தி குழு

கற்பனை செய்து பாருங்கள்: உங்கள் துணையுடன் ஒரு கரடுமுரடான மலைப் பாதையில் நீங்கள் ஏறிக் கொண்டிருக்கிறீர்கள். மூச்சு வாங்குவது சிரமமாக இருக்கிறது, கால்கள் எரிகின்றன, பாதை முன்பின் தெரியாததாக இருக்கிறது. உங்களை நேசிப்பதாகச் சொல்லும் உங்கள் துணை, நீங்கள் பின் தங்குவதைப் பார்த்து உங்களுக்காகக் காத்திருப்பார் அல்லது உதவி செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அவர் உங்களைத் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று மேலே நடக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உங்கள் கண்ணில் இருந்தே மறைந்து விடுகிறார். தண்ணீர் அவரிடம் இருக்கிறது, உங்கள் போனில் சிக்னல் இல்லை. ஒரு தவறான திருப்பம் உங்கள் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு ஆபத்தான இடத்தில் நீங்கள் தனித்து விடப்படுகிறீர்கள். அந்தத் திக் திக் நிமிடங்களில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: "உயிராக நேசிப்பதாகச் சொன்ன ஒருவன், எப்படி என்னை இப்படித் தவிக்க விட்டுச் செல்ல முடியும்?"

இந்தக் கொடூரமான சூழலைத்தான் இப்போது சமூக வலைதளங்களில் பெண்கள் "ஆல்பைன் டைவர்ஸ்" (Alpine Divorce) என்று அழைத்து எச்சரித்து வருகின்றனர். டிக்-டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் இந்த வார்த்தை தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தங்களை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற கணவனோ அல்லது காதலனோ, ஆபத்தான சூழலில் தங்களைத் தனியாக விட்டுவிட்டுச் சென்ற கதைகளைப் பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரியாவில் நடந்த ஒரு சோகமான மரணமே இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

33 வயதான கெர்ஸ்டின் குர்ட்னர் என்ற பெண், தனது காதலன் தாமஸ் பிளம்பெர்கருடன் ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலையான கிராஸ்லாக்னரில் ஏறச் சென்றார். மலையின் உச்சியை நெருங்கும் போது கெர்ஸ்டின் மிகவும் சோர்வடைந்து போனார். அவரை அங்கேயே விட்டுவிட்டு உதவி தேடித் தான் கீழே இறங்கியதாகத் தாமஸ் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், போனில் சிக்னல் இருந்தும் அவர் சரியான நேரத்தில் உதவி கேட்கவில்லை என்றும், மீட்புப் படையினரைத் தொடர்பு கொள்வதில் தாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அடுத்த நாள் காலையில் கெர்ஸ்டின் உறைபனியால் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் தாமஸுக்கு 5 மாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. விசாரணையின் போது, தாமஸின் முன்னாள் காதலி ஒருவர் சாட்சியம் அளிக்கும்போது, 2023-ஆம் ஆண்டிலும் தாமஸ் தன்னை இதே மலையில் "மெதுவாக நடக்கிறாய்" என்று சொல்லித் தவிக்க விட்டுச் சென்றதாகக் கூறி அதிர வைத்தார்.

இந்தச் செய்தி வெளியானதும், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாகப் பதிவிட்டு வருகின்றனர். "ஆல்பைன் டைவர்ஸ்" என்ற இந்த வார்த்தை 1893-ஆம் ஆண்டிலேயே ஒரு சிறுகதையில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இது ஒரு ஆபத்தான உறவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் மலைப் பாதையில் அழுதுகொண்டே நடக்கும் வீடியோ ஒன்று மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில், "அவன் உன்னை மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்கிறான், ஆனால் அங்கே உன்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்கிறான். அப்போதுதான் உனக்குத் தெரிகிறது, அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே உன்னைப் பிடிக்கவில்லை என்று" என எழுதப்பட்டிருந்தது.

இதன் கீழ் வரும் கமெண்டுகள் அனைத்தும் அதிர்ச்சியூட்டுகின்றன. ஒரு பெண் தனது முன்னாள் காதலன், தன்னையும் பிறந்த குழந்தையையும் இருட்டும் நேரத்தில் காட்டில் தனியாக விட்டுவிட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். நரிகள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் தான் அடைந்த பயத்தைப் பகிர்ந்துள்ள அவர், அதன் பிறகு அவரிடமிருந்து விலகியதாகக் கூறியுள்ளார். மற்றொரு பெண், பெரு நாட்டில் நான்கு நாள் மலையேற்றத்தின் போது தனது காதலன் உணவும் தண்ணீரும் இல்லாமல் தன்னைத் தவிக்க விட்டுச் சென்றதைப் பகிர்ந்துள்ளார். காயத்தால் ஏற்பட்ட வலியால் தான் அப்படிச் செய்ததாக அவர் பிறகு காரணம் சொன்னாலும், அது ஒருபோதும் ஏற்க முடியாதது என அந்தப் பெண் கூறியுள்ளார்.

இது குறித்து உளவியல் நிபுணர்கள் கூறும்போது, இது ஒருவரின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயல் என்கின்றனர். மலை போன்ற இடங்களில் ஒருவரிடம் தான் மேப், உணவு மற்றும் வழி நடத்துவதற்கான அதிகாரம் இருக்கும். தனது துணையைத் தவிக்க விட்டு முன்னால் செல்வது என்பது ஒருவிதமான ஆதிக்கம் செலுத்தும் மனநிலை என்று அவர்கள் விளக்குகின்றனர். ஒரு நெருக்கடியான சூழலில் துணையின் மீது இரக்கமில்லாமல் செயல்படுபவர்கள், நிஜ வாழ்க்கையிலும் உணர்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் எச்சரிக்கின்றனர். "எந்த ஒரு ஆணுடனும் தனியாக மலை ஏறுவதற்குப் போகாதீர்கள்" என்று பெண்கள் இப்போது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் எச்சரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.