HCL வரலாறு: மொட்டை மாடியில் பிறந்த ஐடி சாம்ராஜ்யம் - அஜய் சௌத்ரி பகிர்ந்த சுவாரசியக் கதை! 
வணிகம்

HCL வரலாறு: மொட்டை மாடியில் பிறந்த ஐடி சாம்ராஜ்யம் - அஜய் சௌத்ரி பகிர்ந்த சுவாரசியக் கதை!

கணினி என்றால் என்னவென்றே பலருக்குத் தெரியாத ஒரு காலத்தில், HCL முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பிலான கம்ப்யூட்டரை உருவாக்க முயன்ற கதையை விவரித்துள்ளார் அஜய்.

மாலை முரசு செய்தி குழு

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பொன்விழா தருணத்தில், 1976-இல் வெறும் கற்பனைக் கனவாக இருந்த இந்த நிறுவனத்தின் ஆரம்ப நாட்களை, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய நான்கு ஐடி ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஹெச்.சி.எல்., ஆறு இளைஞர்கள் சேர்ந்து ரூ.1.87 லட்சம் முதலீட்டைத் திரட்டி, டெல்லியில் ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டதாம்.

கணினி என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாத ஒரு காலத்தில், முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பிலான கம்ப்யூட்டரை உருவாக்க முயன்ற கதையை அஜய் சௌத்ரி விவரித்துள்ளார்.

Ajay Chowdhry

"நாங்கள் எங்கள் வேலையை ராஜினாமா செய்தோம்" என அந்தப் பதிவைத் தொடங்குகிறார். சிவ் நாடார், அர்ஜுன் மல்ஹோத்ரா, யோகேஷ் வைத்யா, சுபாஷ் அரோரா, அஜய் சௌத்ரி மற்றும் டி.எஸ். புரி ஆகிய இளைஞர்களின் இந்தத் துணிச்சலான முடிவுதான் இன்றைய HCL நிறுவனத்தின் தொடக்கம்.

அக்காலத்தில் கம்ப்யூட்டர் என்பது பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய விந்தையாக இருந்தது. ஆனால், நுண்செயலி (Microprocessor) எனும் சிறிய சிப் உலகையே மாற்றப்போகிறது என்பதை இந்த ஆறு பேரும் ஆழமாக நம்பினர்.

தொழில்முனைவோர் (Startup) என்ற சொல்லோ, நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் 'வென்ச்சர் கேபிட்டல்' (Venture Capital) கலாச்சாரமோ இந்தியாவில் அறவே இல்லாத ஒரு காலத்தில், தங்களின் சேமிப்புப் பணம், கடன், ஏன்... காரைக்கூட விற்று, அனைவரும் சேர்ந்து ரூ.1.87 லட்சத்தைத் திரட்டியுள்ளனர்.

டெல்லியின் 'காஃப் லிங்க்ஸ்' பகுதியில் இருந்த ஒரு வீட்டின் சிறிய மொட்டை மாடி அறையில் தங்களின் முதல் அலுவலகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 'மைக்ரோகாம்ப்' (Microcomp) என்று பெயர் சூட்டப்பட்ட அந்தச் சிறிய முயற்சியின் இலக்கு, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு கணினியை உருவாக்குவதுதான்.

சிவ நாடார்

ஆனால், அங்கு ஒரு பெரிய சவாலும் காத்திருந்தது. கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான உற்பத்தி உரிமம் (Manufacturing Licence) அவர்களிடம் இல்லை.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு தேடியபோதுதான், தேவையான உரிமம் வைத்திருந்த 'யு.பி. எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்' என்ற அரசு நிறுவனம் அவர்களுக்கு அறிமுகமானது. அவர்களுடன் கைகோர்த்ததன் விளைவாகப் பிறந்ததுதான் 'ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்' — சுருக்கமாக HCL!

விற்பனையைத் தொடங்க எல்லா வசதிகளும் கூடி வர வேண்டும் என அவர்கள் காத்திருக்கவில்லை. அஜய் சௌத்ரியின் பதிவில், "வடிவமைப்பு நிலையிலேயே இருந்த, இன்னும் முழுமையாக உருவாகாத ஒரு கம்ப்யூட்டரை நாங்கள் விற்கத் தொடங்கினோம். எங்களிடம் இருந்தது ஒரு தகவல் கையேடும் (Brochure), அந்தக் கம்ப்யூட்டர் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு மாதிரி வடிவமும் (Mock-up) மட்டும்தான்" எனக் கூறியுள்ளார்.

அவர்களது விற்பனைக் குழுவினர் நாடு முழுவதும் சென்று, அதுவரை கம்ப்யூட்டரையே பார்த்திராத பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சந்தித்து, இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யுமாறு நம்பிக்கையோடு பேசினர்.

HCL Computer

அவர்களின் நம்பிக்கைக்கு பலனாக, ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களிடமிருந்து முதல் ஆர்டர்கள் வந்துள்ளன.

அடுத்து, கோவை நகரில், தங்களை விட பலமடங்கு பெரியதும், சந்தையில் நன்கு காலூன்றியதுமான 'டி.சி.எம் டி.பி' (DCM DP) என்ற பெரிய நிறுவனத்துடன் போட்டி போட வேண்டிய சூழல் இளம் HCL நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அவர், "கோவை 'பிரீமியர் மில்ஸ்' நிறுவனத்தின் வரவேற்பறையில் நாங்கள் காத்திருந்த அந்தத் தருணம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. எங்களுக்கு முன்பாக டி.சி.எம். குழுவினர் தங்களது தயாரிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்கள் உள்ளே சென்றோம். இறுதியில், அந்த ஆர்டரை நாங்கள் கைப்பற்றினோம்" எனப் பெருமிதத்துடன் எழுதியுள்ளார்.

அந்த ஒரு வெற்றி, அடுத்தடுத்து 5 ஆர்டர்களையும், பின்னர் 10 ஆர்டர்களையும் தேடித் தந்தது. போதிய நிதி ஆதாரங்களோ, சுலபமான பாதையோ இல்லாத நிலையிலும், துணிச்சலால் வழியமைத்துக் கொண்ட ஹெச்.சி.எல்.-லின் அந்த ஆரம்பகாலப் போராட்டக் குணத்தைத்தான் இந்த ஒரு சம்பவம் பிரதிபலிக்கிறது என்கிறார் சௌத்ரி.

இந்தியாவின் தொடக்ககால உள்நாட்டு கம்ப்யூட்டர்களை உருவாக்கியதில் இருந்து, தொடங்கிய நான்கே ஆண்டுகளில் சிங்கப்பூர் வரை தனது கிளைகளைப் பரப்பியது வரை, ஹெச்.சி.எல். நிறுவனம் தனது எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருந்தது.

HCL Founders

ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று ஹெச்.சி.எல் எட்டியிருக்கும் பிரம்மாண்டமான வளர்ச்சியை விட, அது எங்கு தொடங்கியது என்பதைத்தான் அஜய் சௌத்ரி நெகிழ்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறார். ஆறு மனிதர்கள், டெல்லியின் சிறிய மொட்டை மாடி அறை, கையில் மாதிரி வடிவம் மட்டுமே இருந்த ஒரு கம்ப்யூட்டர், மற்றும் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கும் அசைக்க முடியாத துணிச்சல்...

அவரது இந்த பதிவு, இணையத்தில் பலருக்கும் பழைய நினைவுகளைக் கிளறியுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து துணிச்சலாகக் களமிறங்கிய அந்த ஆறு நிறுவனர்களுக்கும் பலரும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் ஹெச்.சி.எல்-லின் ஆரம்பகாலப் பொருட்களைப் பயன்படுத்திய அனுபவத்தையும், அதன் தரத்தையும் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் துறையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய அஜய் சௌத்ரிக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக 2011-ஆம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.சி.எல் தனது 50-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அவரது பதிவின் இறுதி வரிகள் அந்த நெடும் பயணத்தை அழகாகச் சுருக்கிக் காட்டுகின்றன:

"பெரிதாகக் கனவு காணுங்கள். அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் இலக்கை நோக்கித் துணிந்து முன்னேறுங்கள்!"

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்