தொழில்நுட்ப உபகரண நிறுவனங்கள் சந்தையில் ஏஐ வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் போட்டிபோட்டு வருகின்றன. இதில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஏசர் நிறுவனம் தனது புதிய ‘ஸ்விஃப்ட் நியோ ஏஐ’ (Swift Neo AI) லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிநவீன இன்டெல் கோர் அல்ட்ரா 5 மற்றும் அல்ட்ரா 7 எச் (Intel Core Ultra 5 & Ultra 7 H) கேமிங் ரக பிராசசர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 32 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5 (LPDDR5) ரேம் மற்றும் 1 டிபி வரையிலான அதிவேக எஸ்எஸ்டி (PCIe NVMe SSD) சேமிப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் கணினி வேகமாக இயங்குவதுடன், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யும் திறனுடையதாகவும் இருக்கும்.
இந்த லேப்டாப்பில் 14 இன்ச் அளவிலான WUXGA IPS திரை உள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களில் ஓஎல்இடி (OLED) திரை வசதியும் விருப்பத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. 16:10 விகிதம் உள்ள 1920 x 1200 ரெசலூஷன் மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவை டிஸ்பிளேவில். திரையைச் சுற்றியுள்ள சட்டகத்தின் தடிமன் மிகக் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் (Narrow-bezel), திரைப்பரப்பு பெரிதாகக் காட்சிகளிக்கும்.
இந்த லேபிடாப்பின் எடை வெறும் 1.25 கிலோ மற்றும் தடிமன் 17.2மிமீ மட்டுமே என்பதால், கைக்கு அடக்கமாக எடுத்துச் செல்வதற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. இரவிலும் எளிதாகத் தட்டச்சு செய்ய உதவும் விசைப்பலகை (Backlit keyboard), துல்லியமான டச்பேட் மற்றும் விரல்ரேகை ரேகை சென்சார் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
சார்ஜிங், அதிவேகத் தரவுப் பரிமாற்றம் மற்றும் திரையை வெளிச்சாதனங்களுடன் இணைக்கும் திறன் கொண்ட இரண்டு டைப்-சி (USB Type-C) போர்ட்டுகள் இதில் உள்ளன. அத்துடன் 65 வாட்ஸ் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎம்ஐ (HDMI) போர்ட், கூடுதல் யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் அதிவேக இணைய இணைப்பிற்கு உதவும் வை-ஃபை 6 (Wi-Fi 6) தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஏசர் இந்தியாவின் முதன்மை வணிக அதிகாரி சுதிர் கோயல் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன உலகில், பயனர்கள் தங்களது பணிகளைத் தடையின்றித் தொடரவும் எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தயாராகவும் உதவும் சாதனங்களை வழங்குவதே எங்கள் இலக்கு. அந்த வகையில், நவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்பாடு மற்றும் எளிதாக எடுத்துச் செல்லும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய சாதனமாகச் ஸ்விஃப்ட் நியோ உருவாக்கப்பட்டுள்ளது. இன்டெல் கோர் அல்ட்ரா பிராசசர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் தங்களது படைப்பாற்றலையும் பணித்திறனையும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும்" எனப் பேசியிருந்தார்.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மின்னணுப் பிரிவின் துணைத் தலைவர் சுஜித் ஆகாஷே கூறுகையில், "பணி, கற்றல் மற்றும் படைப்பாற்றல் தேவைகளுக்காக ஏஐ வசதி கொண்ட லேப்டாப்புகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏசர் ஸ்விஃப்ட் நியோ அறிமுகத்தின் மூலம் எங்கள் லேப்டாப் பிரிவில் மற்றொரு சிறந்த சாதனம் இணைந்துள்ளது. ஏசர் உடனான இந்தக் கூட்டாண்மையின் மூலம் இந்த நவீனத் தொழில்நுட்பத்தைச் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த லேப்டாப் கன்டன்ட் கிரியேட்டர்கள், வீட்டில் இருந்து பணியாற்றுவோர், அடிக்கடி பயணம் செய்வோருக்கு ஏதுவானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்