தொழில்நுட்பம்

காணாமல் போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள்.. அறிவியல் சொல்வது என்ன?

ஒரே நாளில் ஆறு விமானங்கள் எவ்வித அடையாளமும் இன்றி மறைந்தது உலகையே அதிர

மாலை முரசு செய்தி குழு

வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் மியாமி, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிகோ ஆகிய மூன்று இடங்களை இணைக்கும் அந்த முக்கோண வடிவிலான பகுதியை நினைத்தாலே இன்றும் மாலுமிகளுக்கும் விமானிகளுக்கும் ஒருவித நடுக்கம் ஏற்படும். இதுதான் உலகப் புகழ்பெற்ற 'பெர்முடா முக்கோணம்' அல்லது 'சாத்தானின் முக்கோணம்' (Devil's Triangle). கடந்த நூறு ஆண்டுகளில் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கப்பல்களும், நவீன விமானங்களும் எவ்விதத் தடயமும் இன்றி மாயமாக மறைந்து போயிருக்கின்றன. காணாமல் போன எத்தனையோ வாகனங்களின் பாகங்கள் கூட இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இந்த மர்மத்தின் உச்சம். இது வேற்று கிரகவாசிகளின் வேலையா அல்லது கடலுக்கு அடியில் இருக்கும் ஏதேனும் ஒரு அமானுஷ்ய சக்தியா என்று பலரும் விவாதித்து வரும் நிலையில், இந்த மர்மத்தின் பின்னணியைப் பற்றி இப்போ விரிவா பார்ப்போம்.

பெர்முடா முக்கோணம் உலகக் கவனத்தைப் பெற்றது 1945-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில்தான். 'ஃப்ளைட் 19' (Flight 19) என்று அழைக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் ஐந்து போர் விமானங்கள் பயிற்சிப் பயணத்தின் போது இந்தப் பகுதியில் பறந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தன. அந்த விமானிகளின் கடைசி வார்த்தைகள், "எங்களுக்குத் திசை தெரியவில்லை, கடல் வழக்கத்திற்கு மாறாக வெள்ளையாகத் தெரிகிறது" என்பதுதான். காணாமல் போன அந்த ஐந்து விமானங்களைத் தேடிச் சென்ற மற்றொரு மீட்பு விமானமும் சில நிமிடங்களில் மாயமானது. ஒரே நாளில் ஆறு விமானங்கள் எவ்வித அடையாளமும் இன்றி மறைந்தது உலகையே அதிர வைத்தது. அதன் பிறகுதான் இந்தப் பகுதியைப் பற்றிய மர்மக் கதைகள் காட்டுத்தீ போலப் பரவத் தொடங்கின.

இந்த மர்மத்திற்குப் பின்னால் இருக்கும் முதல் காரணமாகப் பலரும் சொல்வது 'மீத்தேன் ஹைட்ரேட்' (Methane Hydrate) வாயு. கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைச் சிதைவுகள் மற்றும் படிமங்களால் பிரம்மாண்டமான மீத்தேன் வாயுக் குமிழ்கள் உருவாக வாய்ப்பு உண்டு. இந்த வாயு வெடித்து மேலே வரும்போது, கடற்பரப்பில் இருக்கும் தண்ணீரின் அடர்த்தியைப் பெருமளவு குறைத்துவிடும். அப்போது அந்தப் பகுதியில் செல்லும் கப்பல்கள் மிதக்கும் தன்மையை இழந்து, ஒரு நொடிக்குள் கடலுக்கு அடியில் இழுக்கப்படும். இது ஒரு பள்ளத்தில் விழுவதைப் போன்றது என்பதால் மாலுமிகளால் உதவி கோரக் கூட நேரம் இருக்காது. அதேபோல், இந்த வாயு காற்றில் கலக்கும்போது விமான எஞ்சின்களில் தீப்பற்றவோ அல்லது திசைகாட்டிகளைச் செயலிழக்கச் செய்யவோ வாய்ப்பு இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது காரணம், அந்தப் பகுதியில் நிலவும் 'அறுகோண மேகங்கள்' (Hexagonal Clouds). செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தப் பகுதியில் மேகங்கள் அறுகோண வடிவில் திரள்வது கண்டறியப்பட்டது. இந்த மேகங்கள் ஒரு 'ஏர் பாம்' (Air Bomb) போலச் செயல்படுகின்றன. அதாவது, மேகங்களுக்கு அடியிலிருந்து மணிக்கு 170 மைல் வேகத்தில் காற்று கீழ்நோக்கிப் பாயும். இவ்வளவு வேகமான காற்று மோதும்போது கடலில் ராட்சத அலைகள் உருவாகும். இது ஒரு சிறிய ரக விமானத்தையோ அல்லது பெரிய கப்பலையோ கூட நொடிப்பொழுதில் கவிழ்க்கும் வலிமை கொண்டது. இந்த இயற்கைச் சீற்றம் மிகக் குறுகிய காலத்தில் நடந்து முடிந்துவிடுவதால், விபத்துக்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரிவதில்லை.

மூன்றாவது விஷயம், அந்தப் பகுதியில் நிலவும் மின்காந்தப் புல மாறுபாடு (Electromagnetic Interference). பெர்முடா முக்கோணப் பகுதி புவியின் காந்த துருவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே திசைகாட்டி கருவிகள் (Compass) வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும். அதாவது, உண்மை வடக்கிற்கும் (True North) காந்த வடக்கிற்கும் (Magnetic North) இடையே உள்ள வேறுபாடு இந்தப் பகுதியில் பூஜ்ஜியமாக இருக்கும். இதனால்தான் விமானிகளும் மாலுமிகளும் திசை மாறிப் போய், எரிபொருள் தீரும் வரை அலைந்து இறுதியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். கிறிஸ்டோபர் கொலம்பஸ் கூடத் தனது பயணத்தின் போது இந்தப் பகுதியை கடந்தபோது, வானிலிருந்து ஒரு நெருப்புப் பிழம்பு விழுந்ததையும், தனது திசைகாட்டி விசித்திரமாகச் சுழன்றதையும் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

நான்காவது, 'கல்ஃப் ஸ்ட்ரீம்' (Gulf Stream) எனப்படும் கடலடி நீரோட்டம். இது கடலுக்கு அடியில் ஓடும் ஒரு மிகப்பெரிய ஆறு போன்றது. இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில் விபத்துக்குள்ளாகும் கப்பல்கள் அல்லது விமானங்களின் சிதைவுகளை இந்த நீரோட்டம் மிக வேகமாகத் தூரத்திற்குக் கொண்டு சென்றுவிடும். இதனால்தான் தேடுதல் வேட்டையின் போது எவ்விதப் பாகங்களும் சிக்காமல் போகின்றன. மேலும், உலகின் ஆழமான பகுதிகளில் ஒன்றான புவேர்ட்டோ ரிகோ அகழி இந்தப் பகுதியில் இருப்பதால், ஒருமுறை கடலுக்கு அடியில் செல்லும் பொருட்கள் மீண்டும் மேலே வருவது சாத்தியமே இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.