வடகொரிய அரசு, அதன் மக்களை மீண்டும் நாய் இறைச்சி சூப் குடிக்க அறிவுறுத்தியிருக்கிறது. கோடைக்கால வெப்பத்தைச் சமாளிக்க வினோதமான தீர்வை வழங்கியிருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
உலகெங்கும் கோடைக்கால வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், வடகொரியாவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இதனால், உடல் வெப்பத்தைத் தணிக்க ‘நாய் இறைச்சி சூப்’ (Dangogi guk) அருந்துமாறு அந்நாட்டின் ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘ரோடாங் சின்முன்’ மூலம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பில், கடும் வெப்பம் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறுகள் தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதிலிருந்து தப்பிக்க, தர்பூசணி, வெள்ளரி, பாசிப்பயறு, மீன் கஞ்சி ஆகியவற்றுடன் இந்த நாய் இறைச்சி சூப்பையும் உண்ணுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாய் இறைச்சி சூப், வடகொரியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு ஆற்றலைத் தரும் என்றாலும், வெப்பத்தைத் தணிக்க உதவும் என்பதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
வடகொரியாவில் நாய் இறைச்சி, அரசால் ஊக்குவிக்கப்படும் கலாச்சார உணவாகக் உள்ளது. உணவகங்களில் முக்கியமான உணவாக இருப்பதுடன், நாய் கறி தொடர்பான பாரம்பரிய சமையல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதேவேளையில், தென்கொரியா இதற்கு மாறான பாதையில் பயணிக்கிறது. இறைச்சிக்காக நாய் வளர்ப்பது, கொல்வது மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை இயற்றியுள்ளது.
ஒரே தீபகற்பத்தைச் சேர்ந்த இரு நாடுகள், ஒரே கடுமையான கோடை வெப்ப அலையை எதிர்கொள்ளும் போதிலும், உணவு கலாச்சாரத்திலும் விலங்கு நலக் கொள்கையிலும் இருவேறு துருவங்களாகச் செயல்படுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்