இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களில் எல் நினோ-வின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவியலாளர்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் 180-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும், வரவிருக்கும் "சூப்பர்" எல் நினோ நிகழ்வானது நாட்டின் இயற்கை அமைப்புகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்ததோடு, அதனை எதிர்கொள்ள தயாராகுமாறும் சக ஆராய்ச்சியாளர்களையும், களப்பணியாளர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது, தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கமானது வரும் மாதங்களில் "மிகவும் வலுவான நிகழ்வாக" தீவிரமடைந்து, பிப்ரவரி 2027 வரை தொடர அதிக வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் இந்த எல் நினோ தாக்கத்தால் பல காலநிலை மாற்றங்கள் ஏறப்பட்டு மக்கள் அவதியுற்றனர். கடும் மழைப்பொழிவு, வெள்ளம், வறட்சி போன்ற பல பாதிப்புகள் கடந்த மாதங்களில் உலகவில் ஏற்பட்டுள்ளதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். பசிபிக் பகுதி முழுவதும் நிலவும் அசாதாரணமான வெப்பமான கடல் சூழல்களாலும், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை நெருக்கடி போன்றவைகளாலும் உருவாகும் எல் நினோ, இந்த ஆண்டின் இறுதியிலும் 2027-ஆம் ஆண்டிலும் மிக வலுவான தீவிரத்தை எட்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த அசாதாரணமான சூழல் காரணமாக சுமார் 5 கோடி மக்கள் கடுமையான பட்டினிக்குத் தள்ளப்படக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. எல் நினோ "நமது கண் முன்னே பிரம்மாண்டமாகி வருகிறது" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த மாதம் குறிப்பிட்டுள்ளதும் கவனம் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலில், வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டி சீராக உயர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் 2.6 டிகிரி செல்சியஸைக் கடந்துள்ளது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 4 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை உயர்வு ஏற்படக்கூடும் என கணிப்புகள் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த எல் நினோ-வானது இந்தியாவை பொறுத்தவரை காட்டுத்தீ அதிகரிப்பு, இறப்பு மற்றும் பெரிய மழைக்காட்டு மரங்களின் அழிவு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வறட்சி மற்றும் கடுமையான வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும், இது இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களிடையே பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியான, ராக்ஸி மேத்யூ கோல் ஒரு அறிக்கையில், "இந்த மாற்றங்கள் நிகழும்போது அவற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும், ஆனால் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து, அவற்றை பலவீனப்படுத்தும் அழுத்தங்களையும் குறைக்க வேண்டும். இந்த எல் நினோவின் போது நாம் கற்றுக்கொள்வது வெப்பமான மற்றும் மேலும் நிலையற்ற எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தயார்படுத்த உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்-நினோ ஏற்கனவே தெற்காசியா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், இந்தியாவின் சில பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் பொழிய வேண்டிய பருவமழையில் அளவு குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக நெல், பருப்பு வகைகள், பருத்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற முக்கியப் பயிர்கள் விளைவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் மாதங்களில் இதனால் அறுவடை குறையக்கூடும் என்ற கவலையும் உற்பத்தியாளர்களிடையே அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையால், ஏழை மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களுக்கு கடும் பாதிப்பிற்கு உள்ளாவர் என்றும், உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போரினால் கச்சா எண்ணெய் விலை முதல் உணவுப்பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றத்துடனேயே காணப்படும் நிலையில், இந்த காலநிலை மாற்றம் உற்பத்தியையே பாதித்து விலை உயர்வை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இலங்கையில் இந்த எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவின்மை மற்றும் அதிக வெப்பநிலையால், அந்நாடு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியைச் சந்தித்து வருகிறது. பல முக்கிய நீர்த்தேக்கங்கள் வறண்டு போயுள்ளது. மேலும், தற்போது 1,60,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றனர். இலங்கையின் வடகிழக்கில் உள்ள முல்லைத்தீவு காயலில், நன்னீர் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக்கிடப்பதாகவும் 'தி கார்டியன்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் எல் நினோ-வின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சூழலியலாளர்கள், அறிவியலாளர்கள் போன்றோர் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நிலைமையை எதிர்கொள்ள அரசும் மக்களும் தயார்நிலையில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்