"200 அதிகாரிகள் ரகசிய தகவல் தருகின்றனர்.." கரப்பான்பூச்சிகளுக்கு சிக்னல் கொடுத்த 'ராகுல் காந்தி' - 5 முக்கிய புள்ளிகள்! INC
இந்தியா

"200 அதிகாரிகள் ரகசியத் தகவல் தருகின்றனர்.." கரப்பான்பூச்சிகளுக்குச் சிக்னல் கொடுத்த ராகுல் காந்தி – 5 முக்கியப் புள்ளிகள்!

தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய டெல்லி நோக்கி இந்தியா கூட்டணி பேரணி நடத்தும் என்றும் ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அமலாக்க இயக்குநரகம் (ED), மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI), வெளியுறவு அமைச்சகம் (MEA) உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

மோடி அரசு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசிய ராகுல் காந்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் குறித்துப் பேசும்போது, “எல்லாப் போராட்டங்களும் ஒன்றுதான்; பிரிவினைகள் இல்லை” என்று தெரிவித்ததும் கவனத்தை ஈர்த்தது.

இதனுடன், தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய டெல்லி நோக்கி இந்தியா கூட்டணி பேரணி நடத்தும் என்றும் ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

Rahul Gandhi

1. தொடர்பில் இருக்கும் 200 அதிகாரிகள்

மோடி அரசின் கீழ் செயல்படும் அமலாக்க இயக்குநரகம் (ED), மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI), வெளியுறவு அமைச்சகம் (MEA) உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சேர்ந்த 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுக்குத் தகவல்களை வழங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த அதிகாரிகளின் அடையாளங்களையோ அல்லது அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் விவரங்களையோ அவர் பகிரங்கமாக வெளியிடவில்லை.

2. CJP-க்கு கொடுத்த சிக்னல்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெறும் அனைத்துப் போராட்டங்களும் ஒரே பெரிய இயக்கத்தின் பகுதிகள்தான் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அவர் கரப்பான்பூச்சி கட்சியின் பெயரைக் கூறவில்லை. "இணைப் போராட்டங்கள் எதுவும் இல்லை. ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரே ஒரு போராட்டம்தான் உள்ளது, அதோடு பிரதமர் மற்றும் அமித் ஷாவையும் நீக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை," எனப் பேசினார்.

மேலும், "அரசியலமைப்புச் சட்டம் நிலைநிறுத்தப்படும் வரை, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை, தேர்தல் முறை சீரமைக்கப்படும் வரை, எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாட்டின் இளைஞர்கள் ஓய மாட்டார்கள்," என்றும் அவர் கூறினார்.

3. தவறுக்குப் பின்னணியில் உள்ள மூளை...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைக் கோரும் போராட்டங்கள் மையமாக இருக்கும் நிலையில், அவர் இந்தச் செய்தியாளர் சந்திப்பை நேரலையில் பார்த்து வருவதாகத் தனக்குச் செய்தி வந்தது என ராகுல் காந்தி கூறினார்.

Rahul Gandhi

பின்னர், “ஞானேஷ் குமார் அப்ரூவராக மாற வேண்டும். நீங்கள் ஒரு குற்றம் செய்துள்ளீர்கள். வெளிப்படையாகச் சொல்வதானால், நீங்கள் பிரதான குற்றவாளி அல்ல. நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டீர்கள். அந்தத் தவறுக்குப் பின்னணியில் உள்ள மூளை நீங்கள் அல்ல” என்று பேசினார்.

4. ஞானேஷ் குமாரைக் காக்கும் கோட்டையாக மத்திய அரசு!

டெல்லியில் மக்கள் போராடுவதைத் தடுக்க, போக்குவரத்தை நிறுத்தியது முதல் காவலர்களைக் குவித்தது வரை மத்திய அரசு எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட்ட ராகுல் காந்தி, “எங்கள் வியூகம் வித்தியாசமானது. அங்கு காவல்துறை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி, ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கிறார் என்பதை நாடு அறிய வேண்டும்” என்று கூறினார்.

5. இளைஞர்களை விசாரிக்கின்றனர்.. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை விட்டுவிடுகின்றனர்!

டெல்லியில் காவல்துறையின் நடவடிக்கைகளைக் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, போராடும் இளைஞர்களை அடக்கும் உத்தரவுகள் டெல்லி காவல்துறையினருக்கு அதிருப்தியை அளித்துள்ளதாகக் கூறினார்.

போராட்டத்தை கட்டுப்படுத்த பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) ஊழியர்கள் மூலம் மத்திய அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மேலும் எத்தனை பாதுகாப்புப் படையினரைக் குவித்தாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெரும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்