போராட்டத்தில் திடீரென ராகுல் எடுத்த முடிவு.. ஆகாசவாணிக்குள் ‘இந்தியா கூட்டணி'.. காங்கிரஸ் தலைவர்கள் செய்த காரியம்!

"நாட்டு மக்களின் பிரதிநிதியாக 300 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களை சந்திக்க வந்துள்ளபோதும், ஆணையர் சந்திக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
How the INDIA Alliance Occupied Akashvani Premises
போராட்டத்தில் திடீரென ராகுல் எடுத்த முடிவு.. ஆகாசவாணியை 'இந்தியா கூட்டணி' கைப்பற்றியது எப்படி?
Published on: 
Updated on: 
2 min read

இந்தியா கூட்டணியின் கட்சியினர் இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் தொடங்கி தேர்தல் ஆணையம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தின்போது, ஆர்.எஸ்.எஸ். சீருடையில் ஞானேஷ் குமார் இருப்பது போன்ற பதாகைகளையும் பேனர்களையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிடித்திருந்தனர். "பா.ஜ.க. தான் தலைமைத் தேர்தல் ஆணையர்", "வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்", "ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல" போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

ஊர்வலம் நிதி ஆயோக் அலுவலகத்திற்கு அருகே சென்றபோது காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் வழியில் நிதி ஆயோக் மற்றும் ஆகாசவாணி அலுவலகங்கள் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

India Bloc March
India Bloc March

சுமார் 5 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தேர்தல் ஆணையர்களை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாட்டு மக்களின் பிரதிநிதியாக 300 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களை சந்திக்க வந்துள்ளபோதும், ஆணையர் சந்திக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இடையே, ராகுல் தனது தங்கையான பிரியங்கா காந்திக்கு எனர்ஜி டிரிங்க் கொடுக்கும் தருணம் இணையத்தில் வைரலானது.

மேலும் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி, "மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்டார்கள். இதை நாட்டின் இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளனர். என்னைத் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும் இது தெரியும்" என்று பேசினார்.

ஆகாசவாணி அலுவலகம் அமைந்துள்ள நாடாளுமன்ற சாலையிலும், தேர்தல் ஆணையம் அமைந்துள்ள அசோக சாலையிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பல்வேறு இடங்களில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன.

தர்ணாவில் ஈடுபட்டிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களை காவல்துறையினர் பல வேன்களில் ஏற்றி டெல்லியின் பல்வேறு காவல்நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகினர். பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்.பி.க்கள் காவல்துறை வாகனங்களில் ஏறியுள்ளனர்.

அப்போது ராகுல், பிரியங்காவிடம் ஏதோ பேசியிருக்கிறார். எந்தத் திட்டமிடலும் இல்லாமல், மற்ற தலைவர்களுக்குத் தெரியாமல் அண்ணனும் தங்கையும் ஆகாசவாணி அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

ஆகாசவாணியை கைப்பற்றிய 'இந்தியா கூட்டணி'
ஆகாசவாணியை கைப்பற்றிய 'இந்தியா கூட்டணி'

இதனால் காங்கிரஸ் தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் ஆகாசவாணி சுவரில் ஏறி முழக்கங்களைச் சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். பலரும் போராட்டம் முடிந்துவிட்டது என நினைத்த நேரத்தில், ஆகாசவாணியில் அமர்ந்து ராகுலும் பிரியங்காவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

ஆகாசவாணியின் மறுபக்க வாசல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இருப்பதால், இந்த வாசல் வழியாக நுழைந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடைய முயன்றுள்ளனர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்ட செய்திக் குறிப்பு.

எனினும், ராகுல் காந்தி மறுபக்க வாசலை அடையும் முன்னர் காவலர்கள் அந்த வாசலையும் அடைத்து தடுப்பை ஏற்படுத்தியதால், ஆகாசவாணியிலேயே போராட்டத்தை மேற்கொண்டனர்.

"இது ஆகாஷ்வாணி - இன்று மன் கி பாத் (மனதின் குரல்) கிடையாது, ஜந்தா கி பாத் (மக்களின் குரல்) ஆக இருக்கும்." என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ராகுல்.

9 மணி நேர போராட்டதிற்கு பிறகு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் MPகள் கைது.

How the INDIA Alliance Occupied Akashvani Premises
'பாலியல் அத்துமீறலுக்கு பரிசா?' ACP விவேக்குக்கு புரோமோஷன்.. எதிர்ப்புக்கு பிறகு யூ-டர்ன்! என்ன நடந்தது?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com