குளிர்காலம் வரும்போதே மனதுக்குள் ஒரு பரவச நிலையையும் அழைத்து வருகிறது. அதுதான் நம்மைப் பயணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
கடந்த வாரம் முழுவதும் செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ஊட்டியில் பொழியும் பனிமழை நம் கால்களை இழுக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை முழுவதுமே குளிர்காலத்தில் ரம்மியமாகக் காணப்படும். மூணாறு, கூர்க், சிக்மகளூர், வயநாடு போன்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கூட்டம் குறைவாக இருக்கும் அதே வேளையில், விடுமுறை நாட்களில் மறக்க முடியாத பேரனுபவத்தைத் தரும் இடங்களையும், சென்னையில் இருந்து அங்கே எப்படிப் பயணத்தைத் திட்டமிடுவது என்பதையும் பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை, எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், மேகங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், மனதைக் கவரும் மலையுச்சிகள் என நிதானமாகச் சுற்றுலாவை அனுபவிக்க ஏற்ற இடமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் அலை அலையாக மலைகள் அமைந்திருப்பது கண்களுக்கு விருந்தளிக்கும்.
மேகமலை அணை, ஹைவேவிஸ் அணை, மணலாறு, மகாராஜா மெட்டு போன்றவை தவறவிடக் கூடாத இடங்கள். உங்களுக்கு மலையேற்றம் செய்வதில் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக மேகமலை பிடிக்கும்.
அருகில் உள்ள சுருளி மற்றும் சின்னச் சுருளி அருவிகளிலும் குளித்து மகிழலாம். முதல் நாள் காலையில் சென்று ஓர் இரவு தங்கி, அடுத்த நாள் மாலை ஊருக்குத் திரும்பப் புறப்பட்டால் அருமையான சுற்றுலாவாக அமையும்.
மேகமலையில் அரசு விடுதிகள் உள்ளன. மலையைச் சுற்றி சில ரிசார்ட்டுகளும் உள்ளன. பயணத்தைத் திட்டமிடும்போதே இணையத்தில் நல்ல மதிப்புரைகளைக் கொண்ட தங்குமிடத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
ஹோட்டல்கள் குறைவாக இருப்பதால் உணவு வசதியுடன் கூடிய தங்குமிடத்தை முன்பதிவு செய்வது நல்லது. மணலாறு அணை, வட்டப்பாறை போன்ற முக்கிய வனப்பகுதிகளுக்குச் செல்ல வனத்துறையிடம் செக்போஸ்டில் அனுமதி பெற வேண்டும். மேலும், கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ற வாகனங்கள் தேவைப்படும்.
கேம்ப் ஸ்டேவை அனுபவிக்க வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் தாங்களாகவே கூடாரம் அமைக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
மேகமலைக்கு சென்னையில் இருந்து நேரடி போக்குவரத்து இல்லை. மதுரைக்குச் சென்றால் அங்கிருந்து 125–130 கிலோமீட்டர் தொலைவில் மேகமலை அமைந்துள்ளது. தேனியில் இருந்து 52–55 கிலோமீட்டர் தொலைவு.
தேனியிலிருந்து மேகமலைக்குச் செல்ல சின்னமனூர் வழியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) மலைப்பாதைப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சின்னமனூர் சென்றுவிட்டால் அங்கிருந்து எளிதாகப் பேருந்துகளைப் பிடிக்க முடியும். குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுப்பது நல்லது. மலையேற்றத்திற்கும் தயாராக இருங்கள்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது இந்தச் சுற்றுலாத் தலம். பாலக்காட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சீதார்குண்டு வியூ பாயிண்ட் மற்றும் நீர்வீழ்ச்சி, போத்துண்டி அணை, கேசவன் பாறை மற்றும் மீனம்பாறை, தேயிலை, காபி மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்கள், மாம்பாறை (Mampara), ஆஃப்-ரோடு ஜீப் பயணம் போன்றவற்றை அனுபவிக்கலாம். அருகாமையில் உள்ள சைலண்ட் வேலி, நென்மாரா, மலம்புழா தோட்டம் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்தப் பயணத்தில் வரையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலை அணில், காட்டெருமை ஆகிய அரிய விலங்குகளையும், பெரிய மலபார் இருவாச்சி, மலபார் தீக்காக்கை (டர்கோன்), நீலகிரி காட்டுப்புறா, மலபார் சாம்பல் இருவாச்சி ஆகிய அரிய பறவைகளையும் பார்க்கலாம்.
சைலண்ட் வேலி, மாம்பாறை போன்ற உட்பகுதிகளுக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசமாக இருந்தால் சிறுத்தை, புலி கூட வழியில் தென்படலாம். நெல்லியாம்பதியில் உங்களுக்கு பொருத்தமான நீங்கள் பார்வையிட விரும்பும் இடத்தை தேர்வு செய்து அதனையொட்டி உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.
நெல்லியாம்பதியில் மலைப்பகுதி ரிசார்ட்டுகள், எஸ்டேட் மற்றும் ஃபார்ம் ஸ்டேக்கள் (Estate & Farm Stays), ஹோம்ஸ்டேக்கள் மற்றும் வனத்துறை / சுற்றுலாத் துறை தங்குமிடங்கள் எனப் பல வசதிகள் இருக்கின்றன.
ஆனால் ஐந்து நட்சத்திர வசதிகளை எதிர்பார்க்க முடியாது. உணவு வசதி உள்ள தங்குமிடத்தைத் தேர்வு செய்வது நல்லது. பயணத்தைத் திட்டமிடும்போதே தங்கும் இடத்தைத் தேர்வு செய்வது முக்கியம். கேம்ப் ஸ்டேவை அனுபவிக்க வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
சென்னையில் இருந்து பாலக்காடு அல்லது பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு ரயிலில் செல்ல வேண்டும். ரயிலில் செல்வது சிக்கனமானது. பயணத்தின்போது ஓய்வெடுக்கவும் வசதியாக இருக்கும்.
பேருந்தில் செல்பவர்கள் பொள்ளாச்சி அல்லது பாலக்காட்டுக்குச் சென்று, அங்கிருந்து நென்மாறைக்கு பேருந்தில் சென்று நெல்லியாம்பதியை அடையலாம். நென்மாறை–நெல்லியாம்பதி மலைப்பாதையில் இரவு நேரப் பயணங்களுக்குத் தடை உள்ளது. வானிலை மற்றும் வனத்துறையின் எச்சரிக்கைகளைச் சரிபார்த்துவிட்டுப் பயணத்தைத் திட்டமிடலாம்.
கர்நாடக மாநிலத்தில் ஒளிந்திருக்கும் சிறிய சொர்க்கம் அகும்பே. சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம். மிகவும் அழகான, பலவகையான உயிரினங்கள் வாழக்கூடிய நிலப்பகுதியாக இருக்கிறது. இதற்குத் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்ற பட்டப்பெயரும் உள்ளது. (ரெயின்கோட் முக்கியம் பிகிலு!)
நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலராகவும், வனவிலங்குகளின் காதலராகவும் இருந்தால் நிச்சயம் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் இடமாக அகும்பே அமையும்.
சிங்கவால் குரங்கு, காட்டெருமை, கருஞ்சிறுத்தை போன்ற அரிய விலங்குகளும், பெரிய மலபார் இருவாச்சி, மலபார் தீக்காக்கை (டர்கோன்), மலபார் வீசிலிங் த்ரஷ், நீலகிரி காட்டுப்புறா போன்ற அரிய பறவைகளும், பறக்கும் பல்லி, மலபார் பறக்கும் தவளை போன்ற உயிரினங்களும் இங்கே காணப்படுகின்றன. மேலும், மலபார் குழி விரியன், பச்சைக் கொடிப் பாம்பு எனப் பல வகையான பாம்புகளும், குறிப்பாக ராஜநாகமும் இங்கே காணப்படுகின்றன.
அடர்ந்த மலைக்காடான அகும்பேவைச் சுற்றி ஓனகே அப்பி, பர்கானா மற்றும் ஜோகி குண்டி எனப் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நிச்சயம் தவறவிடக் கூடாதது சன்செட் வியூ பாயிண்ட்! குந்தாத்ரி மலை, சோமேசுவரா வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம். அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்துக்கு (ARRS) சென்றால் மழைக்காடுகள் பற்றி பல விஷயங்களை நிபுணர்கள் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.
நிதானமாகச் சென்று வர, முதல் நாள் காலையில் புறப்பட்டு ஓர் இரவு தங்கி, மறுநாள் மாலை வரை சுற்றிப் பார்க்கும் வகையில் பயணத்தைத் திட்டமிடலாம். இது அருமையான அனுபவமாக அமையும்.
வனப்பகுதிக்கு அருகாமையில் இயற்கை சூழ்ந்த தங்குமிடத்தைத் தேர்வு செய்தால் பயணத்தின் இனிமை கூடும். சிறிய லாட்ஜ்கள், ஹோம்ஸ்டேக்களே அதிகமாக இருக்கும்.
அருகிலுள்ள தீர்த்தஹள்ளி (Thirthahalli) அல்லது சிருங்கேரி (Sringeri) பகுதிகளிலும் தங்கலாம். இதுபோன்ற சிறிய கிராமப்புறப் பகுதிகளுக்குச் செல்லும்போது பயணத்தைத் தொடங்கும் முன்னரே முன்பதிவு செய்து தங்குமிடத்தை உறுதி செய்வது அவசியம்.
சென்னையில் இருந்து எளிதாகக் கிடைக்கக்கூடிய ரயில் அல்லது சிக்கனமான பேருந்துப் பயணத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பெங்களூரு, சிவமொக்கா, உடுப்பி அல்லது மங்களூரு ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றைச் சென்றடைந்து, அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலம் அகும்பேவை அடையலாம்.
பெங்களூரு / சிவமொக்கா / உடுப்பிக்குப் பேருந்தில் சென்றும் அங்கிருந்து மாறிப் பயணிக்கலாம். சென்னையில் இருந்து 665–700 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்பதால் சொந்த வாகனத்தைத் தேர்வு செய்வதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துக்கொள்ளவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.