

சொந்த நிலம் வாங்குவது பலருக்கும் கனவு. இன்றைய பொருளாதார நிலைத்தன்மையில்லாத சூழலில் நிலம் நீண்ட கால நோக்கில் பலனளிக்கக்கூடிய முதலீடாகவும் உள்ளது. ஆனால் நிலம் வாங்குவதில் பலருக்கும் பலவிதமான தயக்கம் இருக்கிறது.
யாரை நம்புவது என முடிவு செய்ய முடியாது. நிலம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பதில் குழப்பம் இருக்கும். இதனால் நிலம் வாங்குபவர்கள், வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அத்தியாவசிய ஆவணங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு அரசின் ‘எனிடைம் பட்டா’ (Anytime Patta) மற்றும் STAR 3.0 ஆன்லைன் பத்திரப்பதிவு முறைகள் மூலமாக இந்த அனைத்து ஆவணங்களையும் இணைய வழியிலேயே நாம் எளிதாகப் பெற்றுச் சரிபார்க்க முடியும்.
பலரும் இந்த ஆவணங்களைச் சரிபார்க்காமல் அல்லது தங்கள் பெயருக்கு மாற்றாமல் விற்பனைப் பத்திரம் பதிவு மட்டுமே செய்துவிட்டு ஆசுவாசம் அடைகின்றனர். அது மிகவும் ஆபத்தான போக்கு. நில விவகாரங்களில் எப்போதும் சிக்கல் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு.
தமிழ்நாட்டில் நிலம் வாங்கும்போது சரிபார்க்க வேண்டிய 4 சட்டப்பூர்வ ஆவணங்கள்: பட்டா, சிட்டா, FMB வரைபடம் மற்றும் வில்லங்கச் சான்றிதழ்.
பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த் துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம்.
பட்டாவில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா என இரண்டு வகைகள் உண்டு. என்னிடம் இருந்து நீங்கள் நிலம் வாங்கினால் அவருக்கு அளிக்கப்படும் பட்டா தனிப் பட்டா. நிலத்திற்கான சர்வே எண் உங்கள் பெயருக்கு மாற்றப்படும்.
ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்குக் கூட்டுப் பட்டா வழங்கப்படும். உதாரணமாக, ஒரு பிளாட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்தப் பிளாட் அமைந்துள்ள நிலம் பத்து பேருடைய பெயரிலும் இருக்கும். அதற்கு வழங்கப்படுவது கூட்டுப் பட்டா.
ஒரு நிலத்தை அப்படியே வாங்கினால் அது உட்பிரிவு இல்லாத (Non-Subdivision) பட்டா. எளிதாகக் கிடைத்துவிடும். நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்கினால் அது உட்பிரிவுடன் கூடிய (Subdivision) பட்டா. அரசு ஊழியர்கள் அளந்து பார்த்து சர்வே எண்ணில் உட்பிரிவு வகுத்துப் பட்டா வழங்க வேண்டும்.
உதாரணமாக, சர்வே எண் 144 என்ற நிலத்தைப் பிரிக்கும்போது ஒருவருக்கு 144/1A என்ற உட்பிரிவு எண்ணைப் பிரித்து வழங்குவர். சர்வே எண்ணைப் புல எண் என்றும் குறிப்பிடுவர். நமக்கு ஆதார் எண் இருப்பதைப் போல நிலத்துக்கு சர்வே எண் மிக அவசியமானது.
ஒரு நிலத்தின் பட்டா உங்கள் பெயரில் இருப்பது மட்டுமே அது உங்கள் நிலம் என்பதற்கான உறுதியான சாட்சியாக இருக்க முடியாது. ஆனால் நிலத்தின் உரிமை குறித்த மிக முக்கியமான வருவாய்த் துறை ஆதாரம் பட்டா.
பட்டா அதன் உரிமையாளர் விவரங்கள், சர்வே எண், நிலத்தின் வகை உள்ளிட்டவற்றைச் சரிபார்க்க உதவும். வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் பட்டா உதவுகிறது.
நிலத்தை அடமானமாக வைத்து விவசாயக் கடன் அல்லது சொத்துக் கடன் பெறும்போது, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிலத்தைப் பிரிக்கும்போது, விவசாயம் மற்றும் நிலம் தொடர்பான சில அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, சாலை விரிவாக்கம், நிலம் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின்போது எனப் பல இடங்களில் பட்டா உதவுகிறது.
நிலத்தின் உரிமை மற்றும் வருவாய்ப் பதிவுகள் தொடர்பான வழக்குகளில் துணை ஆவணமாகப் பட்டா சமர்ப்பிக்கப்படுகிறது.
பட்டா நிலத்திற்கான உரிமை ஆவணம், சிட்டா நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு. பட்டாவில் நிலம் எந்த வட்டம், கிராமத்தில் உள்ளது என்பதும், துல்லியமான பரப்பளவு போன்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும். சிட்டாவில் அதைவிடக் கூடுதல் விவரங்கள் இருக்கும்.
ஒரு நிலம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, நிலம் நஞ்சையா, புஞ்சையா, பயன்பாட்டில் உள்ளதா, தீர்வை விவரங்கள் என அனைத்தும் சிட்டாவில் இருக்கும். சிட்டா கிராம நிர்வாக அலுவலரின் கையில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலத்திலும் வீடு உள்ளதா, கிணறு உள்ளதா, பயிரிடப்பட்டிருக்கிறதா, என்ன வகைப் பயிர், கோயில் உள்ளதா, தோப்பு இருக்கிறதா, என்ன வகையான தோப்பு என அனைத்தையும் பதிவு செய்து சிட்டாவை அப்டேட் செய்து வருவார். நிலத்தின் பட்டா பிரிக்கப்பட்டுள்ளதா, பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் சிட்டாவில் அப்டேட் செய்வார்.
ஒரு நிலத்தையோ வீட்டையோ வாங்கும் முன்னர் சிட்டாவில் இருக்கும் விவரங்கள் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா விவரங்களைப் பெற இந்த இணையதளத்தை அணுகலாம்: https://eservices.tn.gov.in/eservicesnew/home.html
நிலப் பதிவேட்டில் அடிப்படையான ஆவணம் FMB ஸ்கெட்ச். வருவாய்த் துறையால் தயாரிக்கப்படும் ஓர் அதிகாரப்பூர்வ நில அளவைப் படம். ஒவ்வொரு FMB வரைபடத்திலும் வருவாய்த் துறையினரின் டிஜிட்டல் கையொப்பம் இடம்பெற்றிருக்கும்.
இதில் நிலத்தின் துல்லியமான அளவீடு, எல்லைகள், எல்லை அமைந்துள்ள நிலங்கள், அவற்றின் சர்வே எண்கள், உட்பிரிவுகள் ஆகியவற்றைக் காட்டும்.
சொத்துப் பரிவர்த்தனையின்போது எல்லைத் தகராறுகள், நில உரிமை, பிரிவினை அல்லது ஆக்கிரமிப்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க FMB ஸ்கெட்ச் முக்கியம்.
நிலம் என்ன வடிவத்தில் உள்ளது, அருகில் உள்ள எந்தெந்த நிலங்களில் எவ்வளவு தூரம் எல்லையைக் கொண்டுள்ளது, எந்தெந்த திசையில் எவ்வளவு நீள, அகலத்தில் உள்ளது என இதில் அறிய முடியும். நிலத்தில் கட்டிடம் எழுப்பும் திட்டத்துக்கு அனுமதி பெற, பட்டா உள்ளிட்ட ஆவணங்களைப் பெற, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதென்றால் நிலத்தை அளந்து உறுதி செய்ய இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.
ஒரு நிலம் வாங்கும்போது ஆவணங்களில் இருக்கும் அளவு நிஜத்தில் இருக்கிறதா என்பதைச் சோதிக்க FMB வரைபடம் உதவியாக இருக்கும்.
Encumbrance Certificate என்பதே EC எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழில் வில்லங்கச் சான்றிதழ்.
வில்லங்கச் சான்றிதழ் மூலம் ஒரு நிலத்தின் ஒட்டுமொத்த பதிவு வரலாற்றையும் ஆராய முடியும். அந்த நிலம் இதுவரை யாருடைய பெயர்களில் இருந்துள்ளது என்பதைக் காணலாம். அத்துடன் சொத்தின் மீது ஏதேனும் பதிவு செய்யப்பட்ட வங்கி அடமானம், தனியார் கடன் பொறுப்புகள் அல்லது நீதிமன்ற ஜப்தி உத்தரவுகள் உள்ளதா என்பதை அறியவும் வில்லங்கச் சான்றிதழ் உதவும்.
ஒரு நிலத்தில் வீடு கட்டுவதற்கோ அல்லது அடமானம் வைத்துக் கடன் பெற விரும்பினாலோ வங்கி அல்லது நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக வில்லங்கச் சான்றிதழ் கேட்பார்கள்.
வில்லங்கச் சான்றிதழ் மூலம் ஒரு சொத்தின் நம்பகத்தன்மையை ஓரளவு உறுதிப்படுத்த முடிந்தாலும், அதில் இல்லாத சொத்துரிமைப் பிரச்சினைகள், வாரிசுப் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பு உண்டு.
எனவே, வில்லங்கச் சான்றிதழை மட்டுமே வைத்து ஒரு சொத்தை வாங்காமல் அனைத்து ஆவணங்களையும் சட்ட ரீதியான சரிபார்ப்புக்கு உட்படுத்துவது அவசியம்.
1. நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்?
நிலம் வாங்குவதற்கு முன்பு பட்டா, சிட்டா, FMB வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் (EC), மூலப் பத்திரம் மற்றும் முந்தைய விற்பனைப் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், நிலத்தின் உரிமை மற்றும் சட்டப்பூர்வத் தன்மையை வழக்கறிஞர் மூலம் உறுதிப்படுத்துவது நல்லது.
2. பட்டா மற்றும் சிட்டா இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பட்டா நிலத்திற்கான உரிமை ஆவணம், சிட்டா நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு. பட்டாவில் நிலம் எந்த வட்டம், கிராமத்தில் உள்ளது என்பதும், துல்லியமான பரப்பளவு போன்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும். சிட்டாவில் அதைவிடக் கூடுதல் விவரங்கள் இருக்கும்.
3. பட்டா இல்லாமல் நிலம் வாங்க முடியுமா?
பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது சட்டப்படி தடை செய்யப்பட்டதல்ல. இருப்பினும், நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் மூலப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். பட்டா இல்லாததற்கான காரணத்தையும் கண்டறிந்து, சட்ட ஆலோசனை பெற்ற பிறகே வாங்குவது பாதுகாப்பானது.
4. வில்லங்கச் சான்றிதழ் (EC) எத்தனை ஆண்டுகளுக்குச் சரிபார்க்க வேண்டும்?
ஒரு நிலம் பற்றிய முதல் பதிவில் இருந்து தற்போதைய தேதி வரையிலான வில்லங்கச் சான்றிதழைச் சரிபார்ப்பது நல்லது. பொதுவாக 13 அல்லது 30 ஆண்டுகள் மட்டும் சரிபார்ப்பது சிலரின் பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது எப்போதும் போதுமானதாக இருக்காது.
5. பட்டா, சிட்டா மற்றும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் எப்படிப் பெறுவது?
தமிழ்நாடு அரசின் e-Services இணையதளம் மூலம் பட்டா, சிட்டா மற்றும் FMB உள்ளிட்ட நில ஆவணங்களைப் பெறலாம். வில்லங்கச் சான்றிதழை TNREGINET இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.