எலான் மஸ்கை இந்திய தொழிலதிபர்கள் தடுக்கிறார்களா? அரசு வெளியிட்ட விளக்கம்.. கியூவில் நிற்கும் 3 நிறுவனங்கள்! 
இந்தியா

எலான் மஸ்கை இந்திய தொழிலதிபர்கள் தடுக்கிறார்களா? அரசு வெளியிட்ட விளக்கம்.. கியூவில் நிற்கும் 3 நிறுவனங்கள்!

இந்த விவகாரத்தில் முன்னதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. "ஸ்டார்லிங் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மாஸ்க், ஸ்டார்லிங்க் (Starlink) என்ற செயற்கைக்கோள் வழியாக இணைய வசதி வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

எக்ஸ் தளத்தில் ஒருவர் இந்தியாவில் பல இடங்களில் குறைந்த இணைய வசதியே இருக்கும் நிலையில் ஏன் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவையை (satellite communication) வழங்கக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் இந்தியாவில் ஸ்டார்லிங்கின் (Starlink) திட்டங்களை "சில பெரும் தொழிலதிபர்கள்" தடுப்பதாக பதிலளித்தார்.

இந்த நிலையில் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு நியாயமானதாகவும் பாரபட்சமற்றதாகவும் உள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு "நியாயமற்றது அல்லது பாரபட்சமானது" போன்ற கருத்துகள் "அடிப்படையற்றது மற்றும் தவறான புரிதலைக் கொண்டது" என்று மத்திய அரசு கூறியுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (Press Information Bureau) வெளியிட்ட அறிக்கையில், மூன்று செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்னர், அவை பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு இணங்குவதை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பயனர்கள் மற்றும் அவர்களின் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த பாதுகாப்பு விதுமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படுவது அவசியம்.

இந்த ஒழுங்குமுறை சோதனைகளுக்குப் பிறகே நிறுவனங்களுக்கு அவற்றின் அலைக்கற்றைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தற்போது, மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையில்தான் உள்ளன" என்று கூறிய அமைச்சகம், பாரபட்சம் பற்றிய கூற்றுக்கள் "அடிப்படையற்றவை மற்றும் தவறான புரிதலைக் கொண்டவை" என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசு சொல்லும் 3 நிறுவனங்கள் யார்?

இந்த விவகாரத்தில் முன்னதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டார்லிங் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது, ஆனால் அது வணிக ரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் அலைக்கற்றை இசைவு ஒதுக்கீட்டிற்காக இன்னும் காத்திருக்கிறது என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தியா ஸ்டார்லிங், ஜியோ (Jio) மற்றும் ஒன்வெப் (OneWeb) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் தொடர்பு உரிமங்களை வழங்கியுள்ளது. அவற்றில் எதுவும் இன்னும் முழு வணிகச் சேவையைத் தொடங்கவில்லை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (அக்.08) நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், ஸ்டார்லிங் துணை தலைவர் லாரன் ட்ரையர் பேசுகையில், அவர்களது நிறுவனம் இந்தியாவில் 20 நுழைவாயில் தளங்களை (gateway sites) உருவாக்கியிருப்பதுடன், இந்தியாவுக்கான பிரத்யேக பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது என்றார். ஸ்டார்லிங் இந்திய பயனர்களின் தரவுகளை நாட்டிற்குள்ளேயே வைத்திருப்பதாகவும், வணிகச் சேவைகளைத் தொடங்குவதற்காக தரைவழி உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டார்லிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகளுடனும் தொழில்துறை பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ட்ரையர் கூறினார். கடந்த ஜூன் மாதம், ஒப்புதல் வழங்கும் செயல்முறை முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அவர் மறுத்ததோடு, தங்களது வணிக ரீதியான தொடக்கம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்