

நடிகர் நானா படேகர் மரணம் இந்தியத் திரையுலகை உலுக்கியிருக்கிறது. அக்டோபர் 8, அதிகாலை 5:20 மணியளவில் தனது 75 வயதில் மாரடைப்பால் காலமானார்.
இந்திய சினிமாவுக்குக் கிடைத்த அரிய ரத்தினங்களில் ஒருவர் நானா படேகர். நமக்கு அவரை ‘காலா’ படத்தில் சூப்பர் ஸ்டாரின் வில்லனாகத் தெரியும் என்றாலும், இந்தி மற்றும் மராத்திய சினிமாக்களில் அவரது பங்களிப்புகள் முக்கியமானவை.
அவர் ஒரு அசாத்தியமான நடிகர். குறிப்பாக, அவரது வசன உச்சரிப்புக்காக மிகவும் பாராட்டப்படுவார். எந்த ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும் போதும் அதுவாகவே மாறிவிடுவார். ஒரு பச்சோந்தி நிறம் மாறுவதைப் போல. அவரது மரணத்துக்குப் பிறகும் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு அவர் பெயர் சொல்லும் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
1978ஆம் ஆண்டு வெளியான ‘மீமகமன்’ திரைப்படத்தில் துணை வேடத்தில் அவர் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’ மற்றும் ‘அக்னி சாக்ஷி’ போன்ற படங்கள் அவரது புகழ்பெற்ற படைப்புகள். கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் தனித்துவமான கலைஞராக நிலைத்திருந்தார் என்றால் மிகையாகாது.
தமிழில் அவர் செய்த ஒரே பாத்திரம் ஹரி தாதா. ‘காலா’வில் ரஜினிகாந்தின் வில்லன். ரஜினி படங்களில் முத்திரை பதித்த வில்லன்களான மார்க் ஆண்டனி, நீலாம்பரி வரிசையில் தன்னை நிறுத்திக்கொண்டார். அத்தனை தனித்துவமான நடிப்பு. அரசியல் முடிச்சுகள் கொண்ட வசனங்களை அவரது ஏற்ற இறக்கங்களே அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்தன என்றால் மிகையாகாது.
இந்தியில் ‘வெல்கம்’ திரைப்படத்தில் அவரது உதய் ஷெட்டி கதாபாத்திரம் மக்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டது.
ரஜினிகாந்த் மட்டுமல்லாமல், ஷாருக் கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், அனில் கபூர், அமிதாப் பச்சன் என பாலிவுட்டின் எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
‘பிரஹார்: தி ஃபைனல் அட்டாக்’ (1991), ‘வத்’ (இணை இயக்குநர் - 2002) ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.
மராத்தியில் 1982இல் ‘ரகு மைனா’ (Raghu Maina) திரைப்படத்திற்காகவும், 1985இல் ‘காத் காத் ஜேஜூரி’ (Ghadghat Jejuri) திரைப்படத்திற்காகவும் மராத்தி திரையுலகின் மிக உயரிய மகாராஷ்டிர மாநில அரசு திரைப்பட விருதை (சிறந்த நடிகர்) வென்று சாதனை படைத்திருக்கிறார்.
2016ஆம் ஆண்டு, மராத்தி இலக்கியத்தின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் குசுமாக்ராஜ் எழுதிய நாடகத்தைத் தழுவி, மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் வெளியான ‘நட்சம்ராட்’ திரைப்படம் நானா படேகரின் ஒட்டுமொத்த மராத்தி சினிமா வாழ்க்கையின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இது விமர்சனரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
2015ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் வழக்கமானதாகின. நானா படேகர் மற்றும் மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரே ஆகியோர் இணைந்து, செப்டம்பர் 2015ல் ‘நாம் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை (NGO) தொடங்கினர்.
விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணியாக இருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது.
வறட்சி மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ₹15,000 உடனடி பண உதவி வழங்கி உதவினர்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் (சுமார் 4,957 விதவைகள்) சுயதொழில் செய்து தற்சார்புடன் வாழ, தையல் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
பல வறண்ட கிராமங்களை இந்த அமைப்பு தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, மருத்துவ உதவிகள் மற்றும் விவசாயப் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
அன்று முதல் இன்றுவரை 190-க்கும் மேற்பட்ட ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரி புதுப்பித்துள்ளது. இந்தத் திட்டங்களால் மகாராஷ்டிராவின் வறண்ட பகுதிகளிலுள்ள 2,100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவியது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்விலும் ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்.
நாம் பவுண்டேஷன் மிகப் பெரிய அளவில் உதவிகளை ஈர்த்தாலும், தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு பெருமளவில் பொருளாதாரப் பங்களிப்பை வழங்கினார்.
சாதாரண உடைகள், எளிய உணவு மற்றும் சாதாரண மக்களுடன் தரையில் அமர்ந்து பழகும் குணம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இதனால் விவசாயிகள் தங்கள் தேவைகளை எளிதாக அவரிடம் முன்வைத்தனர்.
மகாராஷ்டிராவில் எங்கு வெள்ளமோ அல்லது வறட்சியோ ஏற்பட்டாலும், அரசாங்க உதவியை மட்டும் எதிர்பார்க்காமல், தானே நேரடியாகக் களமிறங்கி நிவாரணப் பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தார்.
நானா படேக்கரின் மறைவு திரையுலகுக்கு மட்டும் பேரிழப்பல்ல. அவரால் பயன்பெற்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு தங்களில் ஒருவரை இழந்த வேதனையை அளித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்