Arnab Cyclone Flight Cancellations 
இந்தியா

அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 6 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன...

Mahalakshmi Somasundaram

அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. சில பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அர்னாப் புயல் காரணமாக, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் இன்று(அக் 28) ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் இன்று காலை ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 6 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.25 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய விமானம், காலை 7 மணிக்கு விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டிய விமானம், காலை 10.30 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பிற்பகல் 2.35 மணிக்கு ராஜமுந்திரிக்குச் செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டிய விமானம், மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய விமானம் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 6 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அர்னாப் புயலின் தாக்கத்தால் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்