இந்தியாவில் திரைப்படங்களுக்குச் சான்றிதழ் அளிப்பதற்காக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 18 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, புரோசேன்ஜித் சாட்டர்ஜி, இயக்குநர் பிரியதர்ஷன், இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் மற்றும் சின்னத்திரை நடிகை ரூபாலி கங்குலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் அதில் இடம்பெற்றிருந்தனர். பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வெம்பதி இதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சமூக விழுமியங்கள், பொதுப் பாதுகாப்பு மற்றும் தேச நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு உணர்வுபூர்வமாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வன்முறை, குற்றச் செயல்கள் மற்றும் நிஜ உலகில் குற்றங்களை ஊக்குவிக்கக்கூடிய காட்சிகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. திரைப்படங்கள் வன்முறையைப் புனிதப்படுத்தவோ அல்லது குற்றவாளிகளின் செயல்பாட்டு முறைகளை (Modus Operandi) ஊக்குவிக்கும் வகையிலோ இருக்கக் கூடாது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்களில் இரண்டு விதிகள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. முதலாவது, “மதப்பிரிவு, அறியாமை, அறிவியலுக்கு எதிரான அல்லது தேசவிரோத மனப்பான்மையை” ஊக்குவிக்கும் காட்சிகளைத் தடை செய்கிறது.
இரண்டாவது, திரைப்படங்கள் “வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவைச் சிதைக்கக் கூடாது” என்று கூறுகிறது.
இரண்டாவது விதி ஏற்கனவே ஒரு சமீபத்திய திரைப்படச் சான்றிதழ் வழக்கில் தொடர்புடையதாகிவிட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கானின் போர் திரைப்படமான மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ் (இதற்கு முன்பு கல்வான் அட்டாக் என்று பெயரிடப்பட்டிருந்தது), 2020-ஆம் ஆண்டு இந்தியா-சீனா ராணுவ மோதலை அடிப்படையாகக் கொண்டது. சீனா தொடர்பான அதன் சித்தரிப்பு காரணமாக, இப்படம் CBFC சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
போதைப்பொருட்கள் மற்றும் மனநல மருந்துகள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான விதிகளையும் இந்த வழிகாட்டுதல்கள் நிர்ணயிக்கின்றன.
அவற்றின் நுகர்வு, பயன்பாடு அல்லது கடத்தலைக் காட்டும் எந்தவொரு காட்சியும், புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதைப் போல சட்டப்பூர்வ எச்சரிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். “சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆரோக்கியத்தை அழிப்பதுடன் சிறைத்தண்டனையையும் உறுதி செய்யும். போதைப்பொருட்களுக்கு ‘வேண்டாம்’ என்று கூறுங்கள்” (Illicit Narcotics Destroy Health and Guarantees Imprisonment. Say No to Drugs) என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.
குழந்தைகளை எதிர்மறையாக பயன்படுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சித்தரிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. கதைக்குத் தேவையில்லாத வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், திரைப்படங்கள் U, UA, UA 7+, UA 13+, UA 16+ அல்லது A ஆகிய ஆறு சான்றிதழ்களில் ஒன்றைப் பெறலாம்.
U சான்றிதழ் என்பது கட்டுப்பாடற்ற பொதுப் பார்வைக்கானது. அதே சமயம், வயது வரம்புக்குக் குறைவான பார்வையாளர்களுக்குப் பொருத்தமில்லாத திரைப்படங்கள் வயது அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட UA சான்றிதழைப் பெறலாம்.
குறிப்பிட்ட வயது வரம்பில், பெற்றோரின் வழிகாட்டுதலுடன் இளம் பார்வையாளர்கள் UA பிரிவுகளில் உள்ள படங்களைப் பார்க்கலாம்.
A சான்றிதழ் வழக்கம்போல வயது வந்த பார்வையாளர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தலைப்புகளை ஆய்வு செய்து, "கோபமூட்டும், ஆபாசமான அல்லது புண்படுத்தும்" எனக் கருதப்படுபவற்றை தணிக்கை வாரியம் நிராகரிக்க வேண்டும் என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நேரடியாகக் கேட்டுக்கொள்கின்றன.
இந்தப் பிரச்சினை ஏற்கனவே சமீபத்திய சான்றிதழ் தகராரில் எழுந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் தலைப்பைக் CBFC ஆரம்பத்தில் எதிர்த்தது. ஏனெனில் சீதை என்ற தெய்வத்துடன் தொடர்புடைய ஜானகி என்ற பெயர், பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்கும் ஒரு கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கேரள உயர் நீதிமன்றத்தை எட்டியது. பல படங்களில் தெய்வங்களுடன் தொடர்புடைய பெயர்கள் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் இந்த எதிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. இறுதியில், அந்தத் தலைப்பே படத்துக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 1991-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், 2016-ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல் தலைமையிலான நிபுணர் குழு, CBFC செயல்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது.
1991-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ள “சமூகத்தின் மதிப்புகளுக்கு உணர்வுள்ளவையாக” இருக்க வேண்டும், “தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்கை” வழங்க வேண்டும் போன்ற நோக்கங்கள் CBFC-யின் வரம்பை மீறியவை என்று அந்தக் குழு கூறியது.
வாரியமானது வழக்கமாகத் திரைப்படங்களில் காட்சிகளை வெட்டக் கோரும் அதிகார அமைப்பாக அல்லாமல், ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.
மேலும், UA வகையை UA 12+ மற்றும் UA 15+ எனப் பிரிக்கவும் அது பரிந்துரைத்தது. தற்போதைய UA 7+, UA 13+ மற்றும் UA 16+ அமைப்பு இதுபோன்ற வயது அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
CBFC வழிகாட்டுதல்கள் தற்போதைய பல சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் ரெகுலேஷன் சட்டம், 1995; சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (COTPA), 2003; விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்; பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடை செய்யும் சட்டம், 1986; மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 ஆகியவை அடங்கும்.
புதிய வழிகாட்டுதல்களின்படி ஒரு திரைப்படத்துக்கு CBFC சான்றிழ் வழங்க பரிசீலிக்கும்போது இவை தொடர்ந்து பொருந்தும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்