Heatwaves in India 
இந்தியா

"காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் இந்தியாவுக்குக் குறைந்த மதிப்பெண்..." - மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்!

இந்தியாவுடன் ஜப்பானும் 32-க்கு 2 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

வெப்பம் அதிகரிப்பது, காற்று மாசுபாடு, திடீர் வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வரும் நிலையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் உடல்நலப் பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கவலை எழுந்துள்ளது.

உலக நாடுகளின் காலநிலைத் திட்டங்களில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை மதிப்பிட்ட புதிய ஆய்வில், இந்தியா 32 மதிப்பெண்களுக்கு வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த முடிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மக்களின் ஆரோக்கியத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

குளோபல் கிளைமேட் அண்ட் ஹெல்த் அலையன்ஸ் (Global Climate and Health Alliance) அமைப்பு வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ‘Healthy NDC Scorecard’ மதிப்பீட்டில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 117 தேசிய காலநிலைத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 132 நாடுகளின் செயல்திட்டங்கள் மதிப்பிடப்பட்டன. இந்த மதிப்பீட்டில் இந்தியாவுடன் ஜப்பானும் 32-க்கு 2 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கொலம்பியா 29 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், நைஜீரியா 25 மதிப்பெண்களுடனும், கம்போடியா 24 மதிப்பெண்களுடனும் முன்னிலையில் உள்ளன.

இந்த மதிப்பீடு, ஒரு நாடு எவ்வளவு பசுமைத் திட்டங்களை அறிவித்துள்ளது என்பதை மட்டும் கணக்கிடுவதில்லை. காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மருத்துவத் துறையைப் பாதுகாப்பது, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்களையும் ஆய்வு செய்கிறது.

இந்தியாவின் குறைந்த மதிப்பெண்ணுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, நாட்டின் காலநிலைத் திட்டங்களில் உடல்நலப் பாதிப்புகள் குறித்த விவரங்களும், காலநிலை நடவடிக்கைகளால் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பலன்களும் போதுமான அளவில் இடம்பெறாததுதான். குறிப்பாக, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதனால் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான அணுகுமுறைகள் தெளிவாக விளக்கப்படவில்லை என மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் காலநிலைத் திட்டம் என்பது வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது. மாறாக, சுற்றுச்சூழல் மாற்றங்களால் பாதிக்கப்படும் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கியச் செய்தியாக உள்ளது.

உதாரணமாக, கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைதல், மயக்கம், வெப்பத் தாக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கடுமையான வெப்பம் இதயம் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தைச் சந்திக்கலாம்.

அதேபோல், காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழலை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. மாசடைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பது ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது. வாகனப் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் மாசுக்கள் மற்றும் எரிபொருள் எரிப்பால் உருவாகும் நுண்துகள்கள் காற்றின் தரத்தைப் பாதிக்கின்றன. இவற்றைக் குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதுடன் மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்களில் கடும் வெப்பம் மக்களைப் பாதிக்கலாம்; மற்ற பகுதிகளில் வெள்ளம், குடிநீர் தட்டுப்பாடு அல்லது சுகாதார வசதிகள் பாதிக்கப்படுவது முக்கியப் பிரச்சினையாக இருக்கலாம். மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கொசுக்கள் மூலம் பரவும் சில நோய்களின் பரவலையும் பாதிக்கக்கூடும். எனவே, ஒவ்வொரு பகுதியின் தேவைகளையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவின் காலநிலைத் திட்டத்தில் ஏற்கெனவே சில முக்கிய இலக்குகள் இடம்பெற்றுள்ளன. 2035ஆம் ஆண்டுக்குள் 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒவ்வொரு அலகுக்கும் ஏற்படும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின் அளவை 47 சதவீதம் குறைப்பது, மின்சார உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறனில் 60 சதவீதத்தைப் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைச் சாராத மின்சார உற்பத்தி ஆதாரங்களிலிருந்து பெறுவது போன்ற இலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து கார்பன் உறிஞ்சுதலையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளுடன் சுகாதாரப் பாதுகாப்பையும் நேரடியாக இணைக்க வேண்டும் என்பதே ஆய்வின் வலியுறுத்தல். வெப்ப அலைகளை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், அவசர மருத்துவ உதவி, நோய்களைக் கண்காணிக்கும் திட்டங்கள், வெள்ளம் மற்றும் வெப்பத்தையும் தாங்கும் மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்களிலும் மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகள் அவசியம்.

மேலும், பொருளாதார வசதி குறைந்தவர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத பகுதிகளில் வாழ்பவர்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சமாளிப்பதில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்ளலாம். எனவே, அரசு அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து செயல்படுவதுடன், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியையும் முறையாக ஒதுக்க வேண்டும்.

இந்தியாவுக்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருப்பது, நாட்டில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்காது. மாறாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலநிலை இலக்குகளுடன் மக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான தெளிவான திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதைக் காட்டுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது எதிர்காலத்தைப் பற்றிய கவலை மட்டுமல்ல; இன்று மக்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், வேலை செய்யும் சூழல் மற்றும் அவர்களின் உடல்நலம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.