"2026-ல் இவங்களுக்கெல்லாம் ஊதிய உயர்வு இல்ல" - Zoho-வில் நடப்பது என்ன? நிறுவனர் வெளியிட்ட திடீர் அறிக்கை!

"இந்த ஆண்டு எங்களால் வழக்கமான சம்பள உயர்வை வழங்க முடியாது" என்றும் எங்கள் ஊழியர்களிடம் கூறியுள்ளோம்.
Zoho employees salary hike
Zoho employees salary hike
Published on: 
Updated on: 
1 min read

அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புச் செலவுகள் மற்றும் நிச்சயமற்ற மென்பொருள் சந்தை ஆகியவை, Zoho-வின் செலவினங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அந்நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு அனைத்து ஊழியர்களுக்குமான வருடாந்திர சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளது.

Zoho-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியான ஸ்ரீதர் வேம்பு, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் இந்த ஊதிய உயர்வு குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மென்பொருள் துறையின் வணிகக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாக உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) செலவுகளை வியத்தகு முறையில் உயர்த்தியுள்ளது. இதற்குக் காரணம்: அ) தரவு மையங்களுக்குத் தேவைப்படும் சர்வர்களின் விலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய 4 மடங்கு அதிகரிப்பு, ஆ) செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து, மிக அதிக செலவுகளுக்கு வழிவகுக்கிறது, இதை நாங்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.

இவற்றுடன், சவாலான புவிசார் அரசியல் பின்னணியும் உள்ளது. நாங்கள் எங்கள் சந்தைப்படுத்தல் பட்ஜெட்டைக் குறைத்துள்ளோம். "இந்த ஆண்டு எங்களால் வழக்கமான சம்பள உயர்வை வழங்க முடியாது" என்றும் எங்கள் ஊழியர்களிடம் கூறியுள்ளோம். இதைத் தவிர்க்க முடியாததற்கு நான் மன்னிப்புக் கேட்டுள்ளேன். பெருமளவிலான ஆட்குறைப்புகளைத் தவிர்க்க நாங்கள் கடுமையாக உழைப்போம், ஆனால் பொதுவாக மென்பொருள் வேலைகளுக்கான கண்ணோட்டம் இருண்டதாகவே உள்ளது.

கடந்த 18 மாதங்களாக நாங்கள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பணியில் இருக்கிறோம். எங்களின் இந்தப் புதுப்பித்தல் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை அடுத்த 3-5 ஆண்டுகள் தீர்மானிக்கும். தயவுசெய்து எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பத் துறை முழுவதிலும், அதாவது மைக்ரோசாப்ட், அமேசான், ஆரக்கிள் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீப மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ல் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு பிறகு, முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. மேலும், layoffs.fyi தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் மட்டும் 131,687-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதோடு 318 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பினை செய்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com