2026 இளங்கலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மருத்துவக் கல்வி கனவுடன் இருந்த ராஜஸ்தான் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தின் குதா கௌட்ஜி என்ற பகுதியைச் சேர்ந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தீவிரமாகத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது.
சிகாரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த பிரதீப், தனது இரண்டு சகோதரிகளுடன் தங்கி இருந்தார். மே 3ஆம் தேதி நடைபெற்ற 2026 இளங்கலை நீட் தேர்வில் அவர் சிறப்பாக எழுதியிருந்ததாகவும், 720 மதிப்பெண்களில் சுமார் 650 மதிப்பெண்கள் கிடைக்கும் என குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னர், தேசியத் தேர்வு முகமை (National testing agency) தேர்வை ரத்து செய்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் பிரதீப், மறுதேர்வு குறித்த நிச்சயமற்ற சூழ்நிலையால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உத்யோக் நகர் காவல் நிலைய அதிகாரி ராஜேஷ் குமார் கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் அவரது தங்கை பயிற்சி வகுப்புகளுக்கு சென்றிருந்தபோது, மற்றொரு சகோதரி குளியலறையில் இருந்த நேரத்தில், பெரும் மன அழுத்தத்தில் இருந்த பிரதீப் தனது சகோதரியின் துப்பட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரது அக்கா பார்த்து அதிர்ச்சி அடைந்து, துப்பட்டாவை வெட்டி அவரை மீட்க முயன்றதாகவும், உடனடியாக காவல்துறைக்கும் வீட்டு உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தினரும் போலீசாரும் அவரை உடனடியாக எஸ்.கே. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது மருத்துவமனை மார்சேரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தனது மாணவர் இறப்பிற்கு இரங்கலை தெரிவித்துள்ளார். “நீட் தேர்வு ரத்து மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களிடையே கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பிரதீப்பின் மரணம் மிகவும் நெஞ்சை நொறுக்கும் சம்பவம்,” என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் கோவா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 12 தேதி நடந்து முடிந்த நீட் இலைகளை தேர்வு ரத்து என தேசியத் தேர்வு முகமை அறிவித்ததிலிருந்து இது போன்ற மாணவர் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் இணையத்தில் கருது தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.