

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி எம்பிபிஎஸ் படிப்புகளுக்காக நடத்தி வந்த நீட் (UG) 2026 தேர்வு கடந்த மே 3 தேதி நடந்தது. இந்தியா முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவு, மத்திய அரசின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாகவும், மறு தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வுக்கு பின்னர், முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் தேசிய தேர்வு முகமைக்கு கிடைத்தன. இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் சட்ட அமலாக்கத் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக வழக்கை மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI) விசாரணைக்கு மாற்ற மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும், விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களும், பதிவுகளும் மற்றும் ஆதாரங்களையும் வழங்க NTA (National Testing Agency) முழுமையாக ஒத்துழைக்கும் என தெரிவித்துள்ளது.
மறுதேர்வு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மாணவர்கள் புதியதாக பதிவு செய்ய தேவையில்லை என்றும், கூடுதல் தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுதேர்வு NTA-வின் உள்கட்டமைப்பு வளங்களைக் கொண்டு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாணவர்களின் நலனையும், தேசிய தேர்வு முறையின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம்” என NTA தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அமைப்பு ஒப்புக்கொண்டாலும், தேர்வு முறையின் மீதான நம்பிக்கையை காப்பாற்ற இது அவசியமான முடிவு என விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையில், ராஜஸ்தான் காவல்துறை சிறப்பு நடவடிக்கை குழு (SOG) இந்த வழக்கில் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில், முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மணீஷ் என்பவர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்கள் தற்போது வினாத்தாள் கசிவு, இணைய பரவல், எந்த மாநிலங்களுக்கு கேள்வித்தாள்கள் சென்றன, எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது போன்ற அம்சங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ராஜஸ்தானின் சிகார் மாவட்டம் இந்த மோசடியின் மையமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மறுதேர்வு தேதிகள் மற்றும் புதிய அனுமதி அட்டை தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ NTA இணைய தளங்கள் மூலமே மாணவர்கள் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.