இந்தியா

என்னது.. எலுமிச்சை வெட்டினால் மழை நிற்குமா? பாஜக எம்.பி சர்ச்சை கருத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இதை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

மாலை முரசு செய்தி குழு

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக், எலுமிச்சையை வெட்டி பிரார்த்தனை செய்ததால் மழை நின்றதாக பொது மேடையில் பேசியது பெரும் சர்ச்சையயும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் பலோட் மாவட்டம் தௌண்டிலோஹாராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக எம்.பி போஜ்ராஜ் நாக் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்ற ‘மஹ்தாரி வந்தன்’ திட்ட நிகழ்ச்சியில் பேச தொடங்கிய அவர், “நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வானிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், கனமழை பெய்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு வரவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும்” தெரிவித்தார். இதையடுத்து, மகாதேவனை பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சையை வெட்டியதாகவும், அதன் பின்னர் மழை நின்று விட்டதாகவும் போஜ்ராஜ் நாக் தெரிவித்தார். “முதல்வர் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும், நான் மகாதேவனை வேண்டி ஒரு எலுமிச்சையை வெட்டி மழையை நிறுத்தினேன்” என அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் “பிரார்த்தனைக்கு பின் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று விட்டதாகவும், தற்போது மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும்” என்றார். இந்தக் கருத்தை கேட்ட மேடையில் இருந்த முதலமைச்சர் விஷ்ணு தியோ மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர் சிரித்தனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. போஜ்ராஜ் நாக் இதுபோன்ற கருத்துகளை கூறுவது இது முதல் முறை இல்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் எலுமிச்சை வெட்டுதல், ஜாட்-ஃபூங்க் எனப்படும் பாரம்பரிய சடங்குகள் மற்றும் பேய் ஓட்டுதல் போன்ற விஷயங்கள் தொடர்பாக அவர் இதற்கு முன்னும் பேசியிருந்ததாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

இதனிடையே, மழையை எலுமிச்சையை வெட்டி நிறுத்தியதாக எம்.பி. கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், "போஜ்ராஜ் நாக் மூடநம்பிக்கையையும் தவறான தகவல்களையும் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு எலுமிச்சையை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், சர்க்கரை விலையையும் பணவீக்கத்தையும் குறைக்க அவர் ஒரு எலுமிச்சையை வெட்ட வேண்டும்” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களிலும் பொது மக்களிடமும் பேசு பொருளாகி உள்ளது. எலுமிச்சை வெட்டுவதன் மூலம் மழையை நிறுத்த முடியும் என்றால், இதே முறையை பயன்படுத்தி மின்சாரக் கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவற்றையும் குறைக்க முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம், பாஜக எம்.பி.யின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி வரும் நிலையில், மறுபுறம் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் பேசக்கூடாது என எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இதனால், “எலுமிச்சை வெட்டி மழையை நிறுத்தினேன்” என்ற பாஜக எம்.பி.யின் பேச்சு சத்தீஸ்கர் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுதியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்