

தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய அளவில் விரிவுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வட இந்திய சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் விஜய்யின் புகழைப் பாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் வட இந்திய அரசியலிலும் பேசுபொருளாக உருவாகியிருக்கிறார் விஜய்.
இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே - சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு கட்சியைத் தொடங்கி, இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றியவர் விஜய். அவரது அடுத்த நகர்வு பிரதமர் பதவியை நோக்கியதுதான் எனக் கூறப்படும் சூழலில், தேசிய அளவில் பிரபலமான பல தலைவர்களைக் கடந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 9.2 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் மம்தா பானர்ஜி (2%), அகிலேஷ் யாதவ் (1.7%), அர்விந்த் கேஜரிவால் (1.2%) உள்ளிட்ட முக்கியத் தேசியத் தலைவர்களை அவர் முந்தியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கச் சிறந்த தலைவர் யார் என்ற கேள்விக்கு, ராகுல் காந்தி 29 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், விஜய் 12.2 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி (8.5%), கேஜ்ரிவால் (7.5%), அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளை சி வோட்டர் நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள 25,184 நபர்களிடம் நேரடியாக மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மற்றும் கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட 91,795 நேர்காணல்களின் அடிப்படையில் தயாரித்துள்ளது.
விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதாக தவெகவினர் பேசி வருவது காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் ரசிக மனநிலையில் பேசுவதாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் விஜய் தனது செல்வாக்கை உயர்த்தி தேசியத் தலைவராக உருவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
நன்றி: இந்தியா டுடே, சி வோட்டர்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.