டெல்லியின் ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு டெல்லி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, கூடுதலாக 500 பெண் போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, பெண் போராட்டக்காரர்களை கையாளும் பணிகளிலும் பெண் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Citizens for Justice and Peace (CJP) அமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் டெல்லிக்கு வர வேண்டும் என்றும் போராட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஞானேஷ் குமார் பதவி விலகினாலும், தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்பதால் போராட்டம் தொடரும் என CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என போலீசார் கணித்துள்ளனர். குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால், அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஜந்தர் மந்தர் பகுதியில் மட்டும் பாதுகாப்பை பலப்படுத்தாமல், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வருவதைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் Paying Guest எனப்படும் PG தங்குமிடங்களின் உரிமையாளர்களுடனும் போலீசார் தொடர்பு கொண்டு வருகின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் போராட்டம் நடைபெறும் பகுதிக்குச் செல்லாமல் இருக்க அவர்களுக்கு அறிவுறுத்துமாறு சில குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் PG உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் தரப்பு கருதுகிறது.
அக்டோபர் 10 போராட்டத்துக்கு முன்னதாகவே ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களின்போது கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. பல்வேறு குழுக்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நகர்ந்ததால், குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டும் கண்காணிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால போராட்டங்களைத் தொடர்ந்து, சிலர் மீது போலீசார் சிறப்பு கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை மாதம் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களில் குற்றப் பின்னணி கொண்டதாக போலீசாரால் அடையாளம் காணப்பட்ட 2,873 பேர் குறித்து உள்ளூர் போலீஸ் நிலையங்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் கடுமையான குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. அக்டோபர் 10 போராட்டத்தின் போது அவர்கள் டெல்லிக்கு வந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்திய போராட்டங்களின்போது பெண்கள் தொடர்பான புகார்களும் போலீசாரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அக்டோபர் 3ஆம் தேதி ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்கச் சென்ற மூன்று பெண் பத்திரிகையாளர்கள், தங்களை போலீசார் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினர். இந்தப் புகார்கள் தொடர்பாக டெல்லி போலீசின் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்துக்காக கூடுதலாக பெண் போலீசார் களமிறக்கப்படுகின்றனர். பெண்களை கைது செய்யும் அல்லது கூட்டத்திலிருந்து பிரிக்கும் சூழல் ஏற்பட்டால், பெண் போலீசாரே அந்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற மோதல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை குறைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
போராட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டெல்லியின் முக்கிய சாலைகள், மெட்ரோ நிலையங்கள், ஜந்தர் மந்தர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் நகர எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டம் டெல்லி போலீசாருக்கு முக்கிய சட்டம்-ஒழுங்கு சவாலாக மாறியுள்ளது.
போராட்ட அமைப்புகள் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், போலீசார் கூட்டத்தின் அளவு, போராட்டக்காரர்களின் நகர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாகக் கண்காணிக்க உள்ளனர். போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சம்பவங்களை கருத்தில் கொண்டு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் டெல்லி போலீஸ் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்