இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா: தோல்வி பயத்தால் கொண்டு வரப்படுகிறதா? “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி!

“பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் முடிவை எதிர்க்கட்சிகள் யாரும் எடுத்து விடாதீர்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்

Muthu Lakshmi

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது. மூன்று நாள் நடக்கும் இந்த சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தங்கள் மற்றும் யூனியன் பிரதேச தொகுதி சீரமைப்பு ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் முன்மொழியப்பட்டு, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர எதிர்ப்புகளுக்கு இடையே தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. 131வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் தனது பலத்தை இழக்காது, எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது எனவும் ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து “வீட்டில் உள்ள பெண்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் வரும் நேரம் இது” என்றும் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது” எனவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய மோடி “கையில் துடைப்பம் வைத்திருந்தவர்கள் நாளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உட்கார போகிறார்கள்”, "மகளிர்கான  இடஒதுக்கீடு நாட்டிற்கு புதிய திசையை காட்டும்” எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“2024-ல் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய அவர் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு பெரும்பாலான எம்பி-க்கள் ஆதரவு கொடுத்துள்ளதாகவும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்படுகிறது” என்றும் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து “பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தடுக்க நாம் யார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் “தேசத்தின்  முக்கியமான தருணம் இது; வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் இருப்பது நமக்கு பாக்கியம். கொள்கை அடிப்படையில் எந்த கட்சியும் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. மசோதாவை எதிர்ப்பவர்கள் நீண்ட காலம் கஷ்டப்படுவார்கள்” என்று மசோதாவை எதிர்ப்பவர்களை நேரடியாக சாட்டியுள்ளார். மேலும் “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும்”. என்றும் “இந்தியாவை கட்டமைப்பதில் பெண்களுடைய பங்கு இனி அதிகம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் முடிவை எதிர்க்கட்சிகள் யாரும் எடுத்து விடாதீர்கள்” என்றும் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.

“புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்தில் பொன்னான நாள், நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. மசோதாவை எதிர்த்தால் உங்களால் அந்த தவறை எப்போதும் சரி செய்ய முடியாமல் போய்விடும்.. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைத்தால் தங்கள் பதவி பறிபோகும் என நினைக்கிறார்கள். எல்லா வகையிலும் தங்கள் வலிமையை நிரூபித்த பெண்களின் உரிமையை நாம் ஏன் தடுக்க வேண்டும்?" எனவும் குறிப்பிட்டார். “நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு ஒரு பகுதியை பற்றி மட்டும் யோசிக்க முடியாது. தொகுதி வரையறை விவகாரத்தில் அனைத்து சந்தேகங்களுக்கும் அமித்ஷா விளக்கமளிப்பார்” என்றும் பதிவு செய்தார் மோடி.

“பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு நாடு மேலும் வலுப்பெறும், அனைத்து கட்சியின் எண்ணங்களையும் பெண்கள் கவனித்து வருகின்றனர். பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது; நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.  நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் உரிமையை பெறும் நேரம் வந்துவிட்டது என பேசிய மோடி, தொடர்ந்து இந்த தொகுதி மறுவரையறை மசோதா வரலாற்றில் மிக முக்கியமான தருணம் என வர்ணித்தார்.

அதையடுத்து இந்த மசோதாவிற்கு 251 எம்பி-க்கள் ஆதரவு தெரிவித்தும், 185 எம்பிக்கள் எதிர்த்தும் உள்ளனர். இந்த மசோதா மாநிலங்களின் கூட்டாட்சி சமநிலையின்மையே  ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தனர். மேலும் தான் தோல்வி பயத்தால் மசோதா கொண்டுவரப்படுகிறது என்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் எதிர்ப்பை பதிவு செய்தனர். சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் தர்மேந்திர யாதவ் இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும் “மகளிர் இட ஒதுக்கீட்டில் முஸ்லீம் மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.