

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவு இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மாற்றி அமைப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்றாலும், அது தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நசுக்கும் செயலாக மாறும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் வட இந்திய மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும் சூழலில், தென்னிந்தியாவின் குரல் நாடாளுமன்றத்தில் பலவீனமடையும் என்ற அச்சமே இந்த எதிர்ப்பின் ஆணிவேராக உள்ளது.மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் 543 என்ற எண்ணிக்கையிலிருந்து 850 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வந்தன. ஆனால் புதிய திட்டத்தின்படி 2026ஆம் ஆண்டு எடுக்கப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாகக் கொள்ளப்படும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் வட மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் குறைத்துள்ளன.
இப்போது மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை ஒதுக்கினால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனையும், மக்கள் தொகையை அதிகப்படுத்திய மாநிலங்களுக்குப் பரிசும் கொடுப்பது போல அமையும் என்று தென்னிந்தியத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் இந்தத் திட்டத்தின் தாக்கம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதமாக உள்ளது. புதிய முறை அமலுக்கு வந்தால் இது 20 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் ஒரு மாநிலத்தின் செல்வாக்கு என்பது அதன் மக்கள் தொகையைப் பொறுத்தே அமையும்.
இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட வட இந்திய மாநிலங்கள் எடுக்கும் முடிவுகளே தேசத்தின் முடிவுகளாக மாறும் அபாயம் உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் மேலோங்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.நிதிப் பகிர்விலும் இந்தத் தொகுதி மறுவரையறை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு மக்கள் தொகை காரணியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயைக் கொடுத்தாலும், அவற்றுக்குத் திரும்பக் கிடைக்கும் நிதி குறைவாகவே உள்ளது.
இப்போது அரசியல் அதிகாரமும் வட மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டால், தென்னிந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மேலும் குறைய வாய்ப்புள்ளது. தங்கள் மாநிலங்களின் வரிப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நிலை தொடர்வதை விட, அதிகாரத்திலும் பின்தள்ளப்படுவது தென்னிந்திய மாநிலங்களை ஒருவிதமான அரசியல் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கும்.மத்திய அரசு இந்தத் திட்டத்தை மகளிர் இட ஒதுக்கீட்டுடன் இணைத்துச் செயல்படுத்த முயல்வது மற்றொரு சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் தொகுதி மறுவரையறை அவசியம் என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆனால் இது ஒரு தந்திரமான நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தொகுதி மறுவரையறை செய்யாமலேயே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றும், வட மாநிலங்களில் தங்களின் பலத்தை அதிகரிக்கவே மத்திய அரசு இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தொகுதி மறுவரையறை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தென்னகத்தின் கோரிக்கையாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.